

இந்தியாவின் வெற்றிகரமான தனியார் விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் வரலாற்றை ‘தி இண்டிகோ ஸ்டோரி’ என்ற பெயரில் பிரபல பத்திரிகையாளர் ஷெல்லி விஸ்வஜீத் எழுதியுள்ளார். இந்திய விமானத் துறையில் எவ்வாறு பல்வேறு விமான நிறுவனங்கள் நுழைந்தன, பின் எப்படி, எதனால் தரை இறங்கின என்பதையும், அனைத்து தடைகளையும் தாண்டி இண்டிகோ நிறுவனம் எப்படி வெற்றி பெற்றது என்பதையும் இந்தப் புத்தகத்தில் ஷெல்லி விஸ்வஜீத் விவரித்திருக்கிறார். அந்த வகையில் இந்திய தனியார் விமான நிறுவனங்களின் நிலைமையை பகுப்பாய்வு செய்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
1991ஆம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு விமான சேவைகளை தாராளமயமாக்கியது. வானுயர்ந்த வர்த்தகத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அர்ச்சனா ஏர்வேஸ், ஏர் சஹாரா, ஈஸ்ட் வெஸ்ட், விஐஎஃப், என்இபிசி, தமானியா, எல்பீ, மோடிலுஃப்ட், பாரத் ஏர்வேஸ், ஏர் டெக்கான், பாரமவுண்ட், சிந்து, எம்.டி.எல்.ஆர், கிங்ஃபிஷர் போன்ற நிறுவனங்கள் வந்தன; வந்த தடம் தெரியாமல் போயினவிமான சேவையில் எத்தனை நிறுவனங்கள் வந்திருந்தாலும், ஆட்டம் சூடு பிடித்தது, 2005 ஆம் ஆண்டில் ஏர் டெக்கான் வந்த பின்னர்தான்.
அதே ஆண்டில், அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த ராகுல் பாட்டியா, ஐஐடி கான்பூர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான ராகேஷ் கங்வால் ஆகிய இருவரின் கூட்டணியில் இண்டிகோ நிறுவனம் தொடங்கப்படுகிறது. ஏர்பஸ் நிறுவனத்திலிருந்து ஒரே நேரத்தில் 100 விமானங்களை வாங்குவதாக அதிரடியாக அறிவித்து, அவ்விருவர் உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களையும் திகைக்க வைத்தனர். ஒரு விமான நிறுவனத்திற்கு முக்கியமான அடிப்படை தகுதிகளான குறைந்த கட்டணம், உயர்தர சேவை, நேரத் துல்லியம் ஆகியவற்றை அடித்தளமாக வைத்து அவர்கள் இண்டிகோவை கட்டியெழுப்பினர்.
இந்தியாவை பொருத்தவரை விமானத் துறையில் லாபப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், குறைந்த மனிதவள செலவு, குறைந்த விநியோக செலவு, பிற துணை சேவைகளில் அதிகமாக பொருளீட்டுதல் போன்றவற்றின் மூலமே சாத்தியம். இண்டிகோ அதைசாதித்துக்காட்டியது. விமானப் பயண சேவையாக தொடங்கப்பட்ட அவர்களது தொழிற் பயணம், இன்று தகவல் தொழில்நுட்பம் - வர்த்தக மேலாண்மை, விமான மேலாண்மை, பைலட்பயிற்சி, விமான பராமரிப்பு பொறியியல், ரியல் எஸ்டேட் என ஒரு வான் போக்குவரத்திற்கு இன்றியமையாத மற்ற துறைகளையும் உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது.
இண்டிகோ நிறுவனம் வைத்திருக்கும் விமானங்கள் வயதில் குறைந்தவை - புதியவை. சிறந்த எரிபொருள் செயல்திறன், குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் வருகை மற்றும் புறப்பாடு போன்றவற்றினால் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. இன்று உலக அளவில் 60 நகரங்களில் 126 அலுவலகங்களையும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் இண்டிகோ கொண்டிருக்கிறது.
ராகுல் பாட்டியாவுக்கும் ராகேஷ் கங்வாலுக்கும் இடையிலான மோதல், கரோனா ஊரடங்கு காராணமாக விமான சேவை முடக்கம் என பல நெருக்கடிகளைக் கடந்து இண்டிகோ இந்திய விமானத் துறையில் முதன்மை நிறுவனமாக தன்னை தக்க வைத்து வருகிறது. வளங்களை திறம்பட நிர்வகித்தல், குறைந்த விலையில் உயர் தரமான சேவை போன்ற அம்சங்களை உறுதியோடு கடைபிடிப்பதால் விமானத் துறையில் முதன்மை நிறுவனமாக மாறியதோடு, ஆரம்பித்த பத்து வருடத்திற்குள் ஒரு கோடி பயணிகளை வானில் பயணிக்க வைத்த இண்டிகோவின் சாதனை பாராட்டத்தக்கது.
| இண்டிகோவின் வளர்ச்சியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை மற்றும் வணிக பாடங்கள்: 1. கனவு காணுங்கள்- அதுவும் பெரிதாக. |
சுப.மீனாட்சி சுந்தரம்,
தொடர்புக்கு:somasmen@gmail.com