கரன்சி இல்லாத வர்த்தகம் எப்படி சாத்தியமாகும்?

கரன்சி இல்லாத வர்த்தகம் எப்படி சாத்தியமாகும்?
Updated on
2 min read

கடந்த மாதம் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவுக்கு பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. தங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பேடிஎம் வாலட்டுக்கு இனிமேல் பண பரிமாற்றம் செய்யும் வசதி மறுக்கப்படுவதாக வந்த செய்தி அவருக்கு மட்டுமல்ல பேடிஎம்மை பயன்படுத்தும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு பேரிடியாகத்தானிருந்திருக்கும்.

இது தொடர்பாக வங்கியை அணுகி கேட்டபோது தங்கள் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு மூலம் பொருள்கள் வாங்குவது உள்ளிட்டவற்றைத்தான் அனுமதிக்க முடியும். வங்கியைப் போன்ற பேடிஎம் வாலட்டுகளில் பணத்தைப் போட அனுமதிக்க முடியாது என எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் நிறுவனம் மூலம் மாதத்துக்கு 6 கோடி பரிவர்த்தனைகள் நடை பெறுகின்றன. எஸ்பிஐ மட்டுமின்றி அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் உள்ளிட்ட வங்கிகளும் இதேபோன்று வாடிக்கையாளர்கள் இ-வாலட்டில் பணத்தைப் போடுவதற்கு அனுமதி மறுத்துள்ளன.

இதேபோன்ற நிலைதான் மற்றொரு இ-வாலட் நிறுவனமான ஆக்சிஜன் வாலட்டுக்கும். எஸ்பிஐ மட்டுமின்றி சிட்டி வங்கி வாடிக்கையாளர்களும் இந்த இ-வாலட்டில் பணம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று ஆக்சிஜன் வாலட்டின் தலைமை செயல் அதிகாரி அங்குர் சக்சேனா தெரிவித்துள்ளார். சில பல சமயங்களில் ஐசிஐசிஐ வங்கியும் தனது இணைய தள வங்கி மூலம் ஆக்சிஜன் வாலட்டில் பணம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கவில்லை.

பெரும்பாலான வங்கிகள் தற்போது இதுபோன்ற இ-வாலட்டுகளை தொடங்கியுள்ளன. எஸ்பிஐ வங்கி படி (SBI Buddy) எனும் இ-வாலட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் போல ஐசிஐசிஐ வங்கியின் `பாக்கெட்’, ஹெச்டிஎப்சி வங்கி `பேஸ்ஆப்’ உள்ளிட்ட இ-வாலட்டுகள் மிகவும் பிரபலம். இ-வாலட்டுகளில் பேடிஎம், ஆக்சிஜன் தவிர பிரீசார்ஜ், சிட்ரஸ், இட்ஸ்கேஷ், சாக்பே, மொபிக்விக் உள்ளிட்டவையும் பிரபலமானவை.

இந்தியாவில் தற்போதுதான் மின்னணு வாலட்டுகள் பிரபலமாகி வருகின்றன. ஆன்லைன் வர்த்த கத்துக்கு பணமாக அளிப்பதைவிட வாலட்டுகள் மூலம் அளிப்பது எளிதாக இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

பொதுவாக உபேர், ஓலா நிறுவனங்களின் கார் மற்றும் ஆட்டோ சேவையைப் பயன்படுத்துவோருக்கு இத்தகைய இ-வாலட்டுகள் பெரும் பாலும் கைகொடுக்கிறது.

தற்போது இ-வாலட்டுகள் மூலமான பரிவர்த்தனை ரூ. 350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டு களில் இது ரூ.1,210 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் வங்கிகள் அல்லாத தனியார் நிறுவனங்கள் அளிக்கும் வாலட் சேவைகள் மிகவும் பிரபலமாகவும் சிறப்பாகவும் செயல் படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்ச்சியடைந்த நாடுகள் பெரும் பாலும் கரன்சி இல்லாத வர்த்த கத்துக்கு மாறியுள்ளன. வளரும் நாடான கென்யா கூட கரன்சியற்ற வர்த்தகத்தை ஊக்குவித்துள்ளது.

உலகிலேயே மிக அதிக அளவில் கரன்சியைப் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் கரன்சி உபயோகம் 12.42 சதவீதமாக உள்ளது. சீனாவில் இது 9.47 சதவீத மாகவும், பிரேசிலில் 4 சதவீதமாகவும் உள்ளது. வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கரன்சி புழக்கத்தில் உள்ளது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,647 கோடி கரன்சிகள் இந்தியாவில் புழங்குகிறது. அமெரிக்காவில் மொத்த கரன்சி உபயோகம் 3,450 கோடி மட்டுமே.

பணமில்லா வர்த்தகம் நடைபெறு வதை சமீபகாலமாக மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணப்புழக்கம் குறையும். வர்த்தகம் வெளிப்படையாக இருப்பதால் கருப்புப் பண பதுக் கல் குறைய கரன்சி இல்லாத பரிவர்த்தனைதான் சிறந்த வழி என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற கரன்சி அற்ற வர்த்தகத்துக்கு சலுகை அளிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில் வங்கிகள் இது போன்ற பண பரிவர்த்தனையை அனுமதிக்காவிட்டால் கரன்சி இல்லாத பரிவர்த்தனை எப்படி சாத்தியமாகும்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in