Published : 05 Apr 2021 09:56 AM
Last Updated : 05 Apr 2021 09:56 AM

வேலை! வேலை! வேலை!

காலையில் ஆறு மணிக்கு எழுந்து குளித்துத் தயாராகி பிள்ளைகளைப் பள்ளிக்கு தயார் செய்துவிட்டு, காலை உணவை சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் கிளம்பிச் செல்வது இந்திய சம்பளதாரர்களின் அன்றாடமாக அடையாளப்படுத்தப்படுவதுண்டு. வேலைக்குத் தயார் ஆகுதல், அலுவலகத்தை நோக்கியப் பயணம் என சராசரி இந்தியன் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரத்துக்கு மேலாக வேலை சார்ந்து செலவிடுகிறான். பலருக்கு வேலை சார்ந்த அழுத்தம் 24 மணி நேரமும் நிலைத்துவிடும் அபாயமும் நடப்பதுண்டு.

இப்படி வேலையே அன்றாடத்தின் பெரும் பகுதியை எடுத்துவிடும்போது தனிப்பட்ட தேடலுக்கான நேரமும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான வாய்ப்பும் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. விளைவாக, வேலையைத் தவிர இந்தியர்களின் வாழ்வில் வேறு எதுவும் இல்லை என்ற நிலைக்கு வந்து நிற்கிறது. பயணம், வாசிப்பு, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் போன்றவை முக்கியத்துவம் அற்றதாகவும், நிறைவேறாத ஒன்றாகவும் மாறிவிடுகிறது. இதனால் சுற்றி நிகழும் சமூகப் பிரச்சினைகள் பற்றி எந்தப் பிரக்ஞையும் ஏற்படுவதில்லை. இந்தச் சூழல் சிந்தனையை மழுங்கடித்துவிடுகிறது. இது தனிநபர் பிரச்சினை போல தோன்றினாலும், இந்திய சமூகத்தின் ஆழத்தில் தாக்கத்தை உண்டாக்கும் பிரச்சினை.

மகிழ்ச்சியற்ற நாடு

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் என்றொரு பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 149 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 139 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 105 வது இடத்திலும் வங்கதேசம் 101வது இடத்திலும் உள்ளன. போரினால் பெரும் அழிவுக்குத் தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி ஒன்றும் அவ்வளவு அதிகமில்லை. இந்திய அரசு வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிக் கொண்
டிருந்தாலும், அதன் மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் வேலை-வாழ்க்கை இடையிலான இடைவெளியின் முக்கியத்துவம் மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வதற்குத்தான் வேலையே தவிர, வேலைக்காக வாழ்க்கை இல்லை என்பதை அந்நாடுகள் கடைபிடிக்கின்றன. உலகில் வாழ்வதற்கு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நார்வே, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இந்நாடுகளில் வேலை நேரம் வாரத்துக்கு 36 மணி நேரம் மட்டுமே. ஆனால், இந்தியாவிலோ சராசரியாக ஒருவர் வாரத்துக்கு 60 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்கிறார்.

வேலையே வாழ்க்கை

உலகில் மிக அதிக பணி நேரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்திய பணியாளர்களில் 67 சதவீதம் பேர் வேலையில் இல்லாத சமயத்திலும் வேலை குறித்து சிந்தித்துக்கொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம் என மன ரீதியான பாதிப்பையும், முதுகு வலி, தலைவலி, சோர்வு, உடல்பருமன் என உடல் ரீதியான பாதிப்பையும் இந்தியர்கள் வேலைச் சூழல் காரணமாக அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்த அழுத்தம் பணியாளர்களின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

சூழல் இப்படி இருக்க ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என நான்கு நாட்கள் வேலை செய்து அந்த வாரத்தின் மீத மூன்று நாட்களை ஊதியத்துடன்கூடிய விடுப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறுவனங்கள் விரும்பினால் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கூறி இருக்கிறது. இந்தத் திட்டம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் என்று இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால், அதிக நேர வேலை என்பது ஊழியர்களின் ஆற்றலை உறிஞ்சுமே தவிர, உற்பத்தித் திறனை அதிகரிக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் பணியாளர்களை உறிஞ்சக்கூடியதாகவே இருக்கின்றன. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாகவே ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்கலாம் என்று கூறும்பட்சத்தில், பணியாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

மூன்று நாட்கள் விடுமுறை என்பது கேட்பதற்கு கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதே பலருக்கு கனவாக இருக்கிறது. பலர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வாரத்துக்கு ஆறு நாட்கள் என 72 மணி நேரம் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்தியா செய்ய வேண்டியது வேலை நேரத்தை அதிகரித்து வேலை நாட்களைக் குறைப்பது இல்லை. வேலை நேரத்தை 40 மணி நேரமாக குறைத்து வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறையை உறுதி செய்வதுதான்.

வீட்டிலிருந்து பணிபுரிதல்

இவ்வாறான இந்திய வேலைச் சூழலில் வீட்டிலிருந்து பணி புரிதல் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக்கொண்டு வந்திருக்கிறது. வீட்டிலிருந்து பணி புரிதல் நடைமுறை பணியார்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கிறது; குடும்பத்தினருடன் நேரம் செலவிட வழி செய்திருக்கிறது; அலுவலகம் சார்ந்த இறுக்கத்தைத் தளர்த்தி இருக்கிறது. அதேசமயம் வீட்டிலிருந்து பணிபுரிவது பலருக்கு உளவில் ரீதியாக நெருக்கடி ஏற்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

வீட்டில் குடும்பத்தினருடன் செலவிடும் நேரமும், பணி நேரமும் பிரிக்க முடியாதபடி பிணைந்துவிடுகிறது. பலர் செயல்திறன் குறைவதாக உணர்கின்றனர். அனைத்தையும்விட வீட்டிலிருந்து பணிபுரிதல் பெண்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டு அலுவலக வேலையை கவனிப்பது அழுத்தம் தரக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.

தவிர, மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியில் ‘இடம்பெயர்வு’ என்பது மிக முக்கியமான காரணியாக உள்ளது. அந்தவகையில், வீட்டிலிருந்து பணிபுரிதல் தனிமனித அனுபவத்தில், தேடலில், உருவாக்கத்தில் தேக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சிறு நகரில் இருந்து வேலை சார்ந்து மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் என பெரு நகரங்களுக்குச் செல்லும் ஒருவனின் அனுபவமும், அறிதலும் விசாலப்படுகிறது. வீட்டிலிருந்து பணிபுரிதல் என்று வீட்டோடு குறுகும் போது தேடலின் எல்லையும் குறுகிவிடுகிறது.

ஆனால், இந்த காரணங்களைக்கொண்டு வீட்டிலிருந்து பணிபுரிதல் நடைமுறையை எதிர்மறையாக பார்ப்பது சரியானது அல்ல. ஏனென்றால், வீட்டிலிருந்து பணி புரிவது ஊழியர்களின் செளகரியம், அசெளகரியம் தொடர்புடையது மட்டும் அல்ல. அது சமூக, பொருளாதாரம் தொடர்புடையதும் கூட.

தமிழகத்தை எடுத்துக்கொள்வோம். சென்னையை மையப்படுத்திய அனைத்து வேலைவாய்ப்புகளும் உருவாக மாநிலத்தின் தென்கோடியில் இருக்கும் ஒருவர், வேலைக்காக தனது குடும்பத்தை, நிலத்தைப் பிரிந்து சென்னைக்கு வர வேண்டியதாக உள்ளது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக சென்னைக்குக் குடியேறியவர்கள். இதனால் சென்னை பெரும் இட நெருக்கடிக்கு உள்ளாகிறது.

வாகன நெரிசல், அடைசலான கட்டிடம், ஒலி மாசு, காற்று மாசு என வாழத் தகுதியற்ற நகரமாக மாறி இருக்கிறது. இவையெல்லாம் போக, ஏன் ஒருவர் தன் சொந்த மண்ணைப் பிரிந்து வேலை நிர்பந்தம் காரணமாக அகதியாக இன்னொரு நிலத்துக்கு வர வேண்டும்? ஊதியத்தில் பெரும் தொகையை வாடகைக்கு என்று செலவிட்டு நிம்மதியற்ற வாழ்வை வாழ வேண்டும்? வீட்டிலிருந்து பணிபுரிதல், இந்தச் சிக்கலை குறைக்க வழி செய்திருக்கிறது.

ஃப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளும் நிரந்தரமின்மையும்

இந்தியாவின் வேலைக் கட்டமைப்பும் வேலைச் சூழலும் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. தற்போது ஃப்ரீலான்ஸ் வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகி வருகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் ஃப்ரீலான்ஸாக வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போக்கு ஒருவிதத்தில் வேலைவாய்ப்பை அதிகரித்தாலும், வேலை சார்ந்த நிரந்தரமின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. பணியாளர் பாதுகாப்பு, காப்பீடு என அமைப்புசார் துறைகளில் கிடைக்கும் குறைந்தபட்ச சலுகைகளும் கிடைக்காமல் போய்விடுகின்றன. இது ஒருவிதத்தில் பணியாளர்கள் மத்தியில் பதட்டைத்தையும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையையும் ஏற்படுத்துகிறது.

சராசரி இந்தியனின் அதிகபட்சக் கனவு என்பதே நல்ல ஊதியத்தில் வேலை பெறுவதுதான். காரணம் இந்தியர்கள் அதிகம் கவலைப்படுவது செலவுகள் அதிகரிப்பது குறித்துதான். குறிப்பாக மருத்துவ செலவுகள். திடீரென்று பத்து லட்சம் செலவாகக்கூடிய சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு ஒருவர் ஆளாகிறார் என்றால் அந்தக் குடும்பத்தின் கதி என்ன? வருமானம் ஈட்டும் மகன் இறந்து விட்டால் வயதான பெற்றோரின் எதிர்காலம் என்ன? இந்தியாவில், அரசுப் பணியில் இல்லாதவர்கள் தவிர்த்து ஏனையோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இந்தச் சூழலை மாற்றுவதில் அரசின் பங்களிப்பும் முக்கியம். அரசின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் பணத்தைப் பெருக்குவது அல்ல, மக்களின் மகிழ்சியை பெருக்குவதாக, பாதுகாப்பான வாழ்வை அமைத்திடுவதாக இருக்க வேண்டும்.

மக்கள் தொகை, குடும்பக் கட்டமைப்பு, சமூகக் கட்டமைப்பு என பல காரணிகள் இந்தியர்களை வேலை, வேலை என்று அலையச் செய்கின்றன. நம் பள்ளிகளும், குடும்பங்களும் பணம் சம்பாதிப்பதைத்தான் வாழ்க்கை இலட்சியம் என குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றன. அரசு பொருளாதார வளர்ச்சி சார்ந்த தனது பார்வையையும், மக்கள் வாழ்க்கை குறித்த தங்கள் அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ளாத வரையில் இந்தச் சூழலிருந்து நமக்கு விடுதலை இல்லை.

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x