

பேபால் (Paypal) மற்றும் பலன்ட்டிர் (Palantir) நிறுவனங்களின் இணை நிறுவனர் பீட்டர் தீல் எழுதிய புத்தகம் “ஜீரோ டு ஒன்.” இந்தப் புத்தகத்தில் அவர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிகரமான எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டுமென்றால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறார். அவர் முன்வைக்கும் வழிமுறைகளின் வழியே, ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது முதல் அதை வெற்றிப் பாதையில் செலுத்துவது வரையிலான நடைமுறைகளைப் பற்றிய புரிதலை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில அம்சங்களைப் பார்க்கலாம்.
புதுமை: ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வணிக மாதிரிகளை காப்பியடிப்பது அல்லது அதில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்து தொழிலை மேம்படுத்துவது போன்றவற்றை கிடைமட்ட முன்னேற்றம் (HORIZONTAL PROGRESS) என்பார்கள். ஆனால் புதியதாக ஒன்றை உருவாக்கும் போது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியதாக இருக்கிறது. இது செங்குத்து முன்னேற்றம் (VERTICAL PROGRESS) எனப்படும். ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அது செங்குத்து முன்னேற்ற முறையில்தான் சாத்தியம். எனவே, நிறுவனங்கள் புதுமைகளைப் புகுத்துவதில் கவனம் செலுத்தாவிட்டால் இப்போது கிடைக்கும் லாபங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எதிர்காலத்தில் தோல்வி அடையக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
ஏகபோகம்: ஒரு நிறுவனம் அதன் துறையில் பெரும் தாக்கத்தைச் செலுத்த வேண்டுமென்றால் அந்த நிறுவனம், அதன் துறையில் "ஏகபோகமாக" (Monolpoly) இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் நூலாசிரியர். உதாரணமாக அதிக போட்டி வாய்ந்த, ஏகபோகமில்லாதவிமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மிகக் குறைந்த லாபத்தையே சம்பாதிக்கின்றன. அதேசமயம், தேடு பொறி பிரிவில் ஏகபோகமாக விளங்கும் கூகுள்நிறுவனம் பெரும் லாபம் ஈட்டுகிறது. அந்த வகையில் ஒரு நிறுவனம் தான் தேர்ந்தெடுத்திருக்கும் பிரிவில் ஏகபோகமாக மாறுவதன் வழியே பெரும் வளர்ச்சியை எட்ட முடியும்.
தொலைநோக்குப் பார்வை: தொழில் நிறுவனர்கள் தங்கள் வணிகத்தை பூஜ்ஜியத்திலிருந்து மேலேகொண்டு செல்வதற்கு தொலைநோக்குப் பார்வை தேவை. நிறுவனத்தை உருவாக்குபவர்கள், முதலில் குறுகிய சந்தைப் பிரிவைதேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு குறுகிய சந்தைப் பிரிவிற்கு விரிவாக்கம் செய்யலாம். அமேசான் நிறுவனம் முதலில் ஆன்லைன் புத்தக விற்பனையில்தான் ஈடுபட்டது. அதன் பிறகே வெவ்வேறு சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்தது.
சில அடிப்படைக் கேள்விகள்: தொழில் ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு தொழில் முனைவரும் தங்களைத் தாங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் உள்ளன.
நீங்கள் தேர்ந்தெடுத்த வணிகத்தைத் தொடங்குவதற்கு இது சரியான நேரமா?
நீங்கள் செயல்படும் பிரிவில் உங்களால் ஏகபோக நிறுவனமாக வளர முடியுமா?
உங்களிடம் திறமையான ஊழியர்கள் குழு இருக்கிறதா?
உங்களது தயாரிப்புகள் நுகர்வோரை சென்று சேர்வதற்கான சரியான வழியை உருவாக்கி இருக்கிறீர்களா?
உங்கள் நிறுவனத்துக்கான சந்தையை அடுத்த 10 முதல் 20 ஆண்டு காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள முடியுமா?
உங்கள் நிறுவனத்தின் தனித்துவத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?
இந்தக் கேள்விகள் மூலம் தொழில் தொடங்குவது குறித்து தெளிவான புரிதல்களை பெற முடியும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி அதிர்ஷ்டத்தினால் வரக் கூடியதல்ல. தெளிவான செயல் திட்டங்கள் தேவை. ஏற்கெனவே சந்தையில் இருக்கும் சவால்களை எதிர்கொண்டால் எதிர்காலம் உங்கள் கையில். மற்ற வணிகங்களை விட ஏதாவது ஒரு விதத்தில் உங்கள் தொழில் தனித்தன்மையைக் கொண்டிருந்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேருவது நிச்சயம் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.
somasmen@gmail.co