

இந்தியாவில் கல்வித்துறையை அரசியல்வாதிகளுடன் தொடர்புபடுத்திப் பேசுவதுண்டு. அரசியல்வாதிகள் ‘கல்வித் தந்தை’களாக உருமாறி கல்வித்துறையை வணிகமாக மாற்றிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை எங்கும் கேட்க முடியும். இந்தச் சூழலில், தற்போது அரசியல்வாதிகளின் இடத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன.
இந்தியாவில் இணையவழிக் கல்விதொடர்பான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, கரோனாபரவலுக்குப் பிறகு அதன் வேகம் இன்னும் தீவிரமடைந்து இருக்கிறது.கரோனா ஊரடங்கு பெற்றோர்களையும்கல்வி நிறுவனங்களையும் இணையவழிக் கல்வியை நோக்கி நகர்த்தியது. கடந்த ஆண்டில் மட்டும் இணையவழிக் கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 2.2 பில்லியன் டாலர் அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தமாக 4,500 க்கு மேற்பட்ட இணையவழிக் கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 435 நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் ஆரம்பிக்கப்பட்டவை.
நாம் இணையவழிக் கல்வியை பள்ளி, கல்லூரி கல்வியோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அது சமீபத்தில் முளைத்ததாகத் தோன்றும். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக கற்பித்தல் என்பது மிகப் பெரும் சந்தையாக மாறியிருக்கிறது. யூடியூப் சேனல்களில் பெரும்பாலானவை ஒரு விசயத்தை எப்படி செய்ய வேண்டும் என்று கற்பிக்கக்கூடியவை. எப்படி சமைக்க வேண்டும், எப்படி ஆடை உடுத்த வேண்டும், எப்படித் தூங்க வேண்டும், எப்படி பஞ்சர் பார்க்க வேண்டும் என அனைத்தும் அங்கு கற்பிக்கப்படுகின்றன. மாஸ்டர்கிளாஸ் என்று துறைசார் நிபுணர்கள் தங்கள் அனுபவங்களை சந்தைப் பண்டமாக மாற்றுகிறார்கள். இதன் நீட்சியாகவே பள்ளி, கல்விப் பாடங்களும் சந்தைப் பண்டங்களாக மாறியிருக்கின்றன.
அரசுப் பணி மற்றும் மேற்படிப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், திறன் மேம்பாடு, புதிய மொழிகளைக் கற்றல், நிரல் எழுதுதல் போன்ற பிரிவுகளில் இணையவழிக் கற்றல் அதிகரித்து இருக்கிறது. இணையவழிக் கல்விச் சந்தையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. பைஜூஸ், அன்அகாடமி, அப்கிரேடு, வேதாந்து போன்ற நிறுவனங்கள் இணையவழிக் கல்வியில் முதன்மை நிறுவனங்களாக வளர்ந்துள்ளன.
ஒருவகையில், கற்றல் நடைமுறையை இணையவழிக் கல்வி மாற்றி அமைத்திருக்கிறது. நேர நெறிமுறை, ஆசிரியர்- மாணவர் என்பது இல்லாமல்,கற்றலை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது; கற்றலை பரந்துபட்டதாக மாற்றியிருக்கிறது. ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழங்களில் உள்ள ஆசிரியர்களின் வகுப்புகளை இந்தியாவில் சிறு நகரில் உள்ள மாணவன் கேட்கும் வாய்ப்பு உருவாகிவந்திருக்கிறது. உண்மையில், இது மிகப் பெரும் பாய்ச்சல்தான். ஆனால், இணையவழிக் கல்வி இத்தகைய திறந்த அமைப்பாக, அனைவருக்குமானதாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. ஆனால்,கல்வியை சந்தைப் பண்டமாக அணுகுவதும், கல்வித் துறையை லாபம் ஈட்டும் சந்தையாக மாற்றும்போதுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
இணையவழிக் கல்வி நிறுவனங்களின் வருகை காலத்தின் கட்டாயம்என்று கருதினாலும், அந்நிறுவனங்கள் கல்வியை, மாணவர்களை அணுகும்போக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. கல்வி என்பதை வேலைக்குச் சேர்ந்து பணம் சம்பாதிக்க உதவும் சாதனமாக அவை முன்வைக்கின்றன. மாணவர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகின்றனர். வொயிட்கேட் ஜூனியர் என்ற இணையவழிக் கல்விநிறுவனம் ஆறு வயது குழந்தைகளுக்குகூட நிரல் எழுதக் கற்றுத் தருவதாகவும், அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பதாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குழந்தைகளை, மாணவர்களை வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றும் போக்கின் வெளிப்பாடுதான் அது.
ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக் கல்வி என்பது தனியொரு குழந்தையின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது அல்ல; அது சமூகம் சம்பந்தப்பட்டது. எனவே, பள்ளிக் கல்வியை அணுகும்போது அதை சமூகம் சார்ந்த கண்னோட்டத்துடன் அணுக வேண்டும். ஆனால்,இணையவழிக் கல்வி நிறுவனங்கள் சமூகம் என்பதை பின்னுக்குத் தள்ளிதனிமனிதக் கற்றலை முதன்மைபடுத்துகின்றன. ஒரு நிறுவனமாக அது இவ்வாறு செயல்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், வணிக நிறுவனங்கள் சமூகத்தை தனி மனிதர்களாகவும், நுகர்வோர்களாக அணுகுவது போல் அரசு அணுகக்கூடாது;அரசுக்கு இங்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
இந்தியாவில் இணைய வசதி 24 சதவீதக் குடும்பங்களிலும், கணினி வசதி 11 சதவீதக் குடும்பங்களில் மட்டுமே இருக்கிறது. கரோனா ஊரடங்கு நாட்களில் பள்ளிகள் இணையவழி வகுப்புகளுக்கு மாறியபோது, ஸ்மார்ட்போன், இணையவசதி இல்லாமல் கிராமப்புற மாணவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டனர். இப்படியான சூழலில்தான்இந்தியக் கல்வி முறை இணையத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
பள்ளிக் கல்வியானது இணையத்தோடு இணைவது தவிர்க்க முடியாத ஒன்று. எனில், சமூக,பொருளாதார ரீதியாக மேம்பட்ட பின்புலத்திலிருந்து வரும் மாணவனையும், பின்தங்கிய பின்புலத்திலிருந்து வரும்மாணவனையும் உள்ளடக்கிச் சிந்தித்து இணையக் கல்வி தொடர்பாக கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். இல்லையென்றால், கல்வியில் பெரும் ஏற்றத்தாழ்வு உருவாகும். அது ஏற்கனவே ஏற்றத்தாழ்வால் பெரும் துயரை அனுபவித்துக்கொண்டிருக்கும் சமூகத்தை இன்னும் பிளவுபடுத்திவிடும்.