

ஏர்டெல்லின் 4- ஜி சேவைக்கான விளம்பரங்களைப் பார்த்தீர்களா? துருதுருவென ஒரு இளம்பெண். படிப்பது பள்ளியிலா அல்லது கல்லூரியிலா என்று சொல்வது கடினம். ``உங்க ளிடம் ஏர்டெல்லை விட வேகமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பு இருந்தால் வாழ்நாள் முழுவதும் இலவச சேவை கிடைக்கும்’’ என்று சவால் விட்டு சிரிப்பதை ரசித்திருப்பீர்கள்.
ஆனால் நான் சொல்ல வந்த கதை வேறு. வாடிக் கையாளர்களின் எண்ணிக்கையின் படி உலகின் முதல் நான்கு நிறுவனங்களுக்குள் இருக்கும் இந்நிறுவனம் 20 நாடுகளில் சேவை செய்கிறதாம். ஆனால் அவர்களால் ஆப்பிரிக்காவிலோ, வங்கதேசத்திலோ, இலங்கை யிலோ தாக்குப்பிடிக்க முடிகிறதா? இங்கே வருமானம், அங்கே செலவு என்கிற ரீதியில் மாட்டிக் கொண்டு விட்டார்களே! ஐயா, நாட்டுக்கு நாடு மக்களின் கலாச்சாரம் வேறு, சட்டதிட்டங்கள் வேறு!!
போர்ப்ஸ் சொல்லும் ஸ்ரீரேணுகா சுகர்ஸின் கசப்பான கதையையும் கேளுங்கள். சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரேசிலில் இரண்டு நலிவடைந்த சர்க்கரை ஆலைகளை வாங்கியது. அப்பொழுது அவர்கள் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது வேறொன்று! இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியானது தேவையை விடக் குறைவு; அது இறக்குமதியால் சரிசெய்யப்படுகிறது. மேலும் பிரேசிலிலும் இந்தியாவிலும் பருவமழையும் கரும்பு அறுவடையும் கால இடைவெளியில் இருப்பதால் பலன் பெறலாம் என்று திட்டமிட்டார்களாம்.
ஆனால் அவர்கள் எதிர்பாராமல் வறட்சியும், பனியும் வந்துவிட்டதாம். மேலும் அந்நாட்டில் ஆலைகள் விவசாயிகளிடம் கரும்பு வாங்குவதில்லை. ஆலை நிறுவனங்களே பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு உற்பத்திக்கு எடுத்துக் கொள்வார்களாம். கரும்பு சாகுபடியில் அனுபவம் இல்லாததாலும், வெகுதூரத்தில் இருந்த ஆலையின் பிரச்சினைகளை சமாளிப்பது கடினமாக இருந்ததாலும் ஏண்டா அங்கு போனோம் என்கிற நிலை வந்து விட்டதாம்.
தொழில் நிறுவனங்கள் திரைகடலோடியும் திரவியம் தேடலாம்; விடலாமா? அங்குள்ள அரசியலமைப்பு, தட்ப வெப்பநிலை, தொழிலாளர்களின் மனப்பாங்கு, அந்நிய செலவாணிப் பிரச்சினைகள் முதலானவற்றைத் தெரிந்து கொண்டு, பின் புரிந்து கொண்டு செல்வது தானே நன்று? “நாங்கள் இங்கே மிகப்பெரிய நிறுவனம்; பல ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்; ஆள் பலமும், பண பலமும் உண்டு” என்பதெல்லாம் வேறு நாட்டில் செல்லுபடி ஆகுமா? அங்குள்ள சவால்கள் வேறு மாதிரியாக இருக்குமே! அட போங்கப்பா, நம்ம நாட்டிலேயே கூட மாநிலம் விட்டு மாநிலமோ, ஊர் விட்டு ஊரோ போகனும்னாலும் அப்படித்தானே!
பகைவரை எதிர்கொள்வதற்கு சாதகமான இடத்தில் மட்டும்தான் போரைத் தொடங்க வேண்டுமென்கிறது குறள். போட்டியாளரை இகழாமல், புதிய இடத்தின் தன்மைகளைப் புரிந்து கொண்டு இறங்குவது தானே நன்று? ஆழம் தெரியாமல் காலை விடலாமா?
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின் அல்லது (குறள் - 491)
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com