Published : 23 Nov 2015 10:52 AM
Last Updated : 23 Nov 2015 10:52 AM

உன்னால் முடியும்: ஐடியா ஒன்று போதுமே...

ஐடி நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத் தில் பார்த்துக் கொண்டிருந்த வேலை யை தனது தொழில் ஐடியாவுக்காக உதறியவர் லோகேஷ். சொந்தமாக பேக்கரி கிடையாது.

கேக்குகளை காட்சிப்படுத்தவோ விற்பனை செய்யவோ பிரத்யேக விற்பனையகம் கிடையாது. சொந்தமாக அலுவலகம் கிடையாது. சென்னையில் ஒரு பேச்சிலர் அறையில் வசித்துக் கொண்டே தனது தொழில் ஐடியாவோடு களமிறங்கியவர் இன்று மாதத்துக்கு சராசரியாக 500 கிலோ கேக் ஆர்டரை தனது இணையதளம் மூலம் சென்னை பேக்கரிகளுக்கு வழங்கி வருகிறார். வருகிற மாதங்களில் 1000 - 1500 கிலோ கேக்குகள் ஆர்டர் எடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்கிற இலக்கோடு பரபரப்பாக இருந்தவர், இந்த வாரம் உன்னால் முடியும் பகுதிக்காக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. 2012ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் உடனடியாக காக்னிஸெண்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து சேர்ந்தேன். சென்னையில் நண்பர்களோடு சேர்ந்து தங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆன்லைன் சந்தையில் ஏதாவது தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. பெரிய முதலீடுகள் தேவைப்படாத தொழிலாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் புதிதாகவும் இருக்க வேண்டும்.

இப்படி யோசித்ததில் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை என்கிற ஐடியாவோடு இறங்கினேன். எலெக்ட்ரானிக் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் அருகில் உள்ள விற்பனையகம் மூலம் அதை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது. இதற்கேற்ப சென்னையில் உள்ள விற்பனையாளர்களோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்வது இதுதான் பிசினஸ் மாடல். ஆனால் வேலையிலிருந்து கொண்டே இதை தொடங்கியதில் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. மேலும் விற்பனை யாளர்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக இருந்தது.

எனது அப்பா நாற்பது ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறார். இதனால் இந்த தொழில் குறித்த சில அனுபவங்கள் எனக்கும் தெரியும். இதை மையமாக வைத்து ஆன்லைன் பிசினஸ் செய்யலாம் என யோசித்த போது ஆன்லைன் கேக் ஷாப் ஐடியாவோடு இறங்கினேன். இந்த நேரத்தில் எனது குடும்ப நண்பர் மாதவ்ராஜ் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றிக் கொண் டிருந்தார். அவருடைய ஒத்துழைப்பும் கிடைத்தது. இருவரும் சேர்ந்து சுமார் நான்கு மாதங்கள் இதற்கான இணையதள உருவாக்கம், சந்தை வாய்ப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்டுவருவது என முதற்கட்ட வேலைகளை செய்தோம். தினசரி 4 மணி நேரம் ஐடியாவுக்காக உழைப்பது என முடிவெடுத்தோம்.

சென்னையில் உள்ள 40 க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டட் பேக்கரிகளை அணுகி எங்களது முயற்சியை விளக்கி ஒருங்கிணைத்தோம். எங்களது இணையதளம் மூலமாக, எந்த பிராண்ட், எவ்வளவு விலை, எந்த பேக்கரி கேக் என்பவற்றை ஆர்டர் கொடுத்தால் குறிப்பிட்ட நாளில் டெலிவரி ஆவதுபோல இந்த நெட்வொர்க்கை உருவாக்கிக் கொண்டோம்.

முதல் இரண்டு மூன்று மாதங்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு ஆர்டர் என்கிற அளவில்தான் இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் பெற்ற அனுபவங்களை வைத்து மேலும் முறைப்படுத்திக் கொண்டோம். பேக்கரி தொழிலில் உள்ள சிக்கல்கள் எனக்கும், வாடிக்கையாளர்களை கையாளுவது மாதவ்ராஜூக்கும் பரிச்சயம் என்பதால் இந்த காலகட்டங்களை எளிதாகக் கடந்தோம்.

ஆனால் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு வந்ததால், வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விடாமுயற்சியுடன் இருந்ததால் எதிர்ப்பு நாளடைவில் குறைந்தது. என்றாலும் முதல் நான்கு மாத காலகட்டத்தை திரும்பி பார்த்தால் ஆர்டர்கள் அதிகம் இல்லாததால் கொஞ்சம் சோர்வாகவும் இருந்தது. அந்த சமயத்தில் ஒரு பெரிய கொண்டாட்டத்துக்காக மொத்த ஆர்டர் ஒன்று கிடைக்க, உற்சாகம் தொற்றிக் கொண்டது. இதற்கு பிறகு இருவருமே வேலையிலிருந்து விலகி முழுநேரமாக தொழிலில் இறங்கிவிட்டோம்.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மாதம் 150 கிலோ ஆர்டர் கிடைத்தது. 2015 தொடக்கத்திலிருந்து பிசினஸ் பிக்அப் ஆக தொடங்கிவிட்டது. தற்போது மாதத்துக்கு சராசரியாக 500 கிலோ ஆர்டர் எடுத்து வருகிறோம். தற்போது நேரடியாக 6 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம். அடுத்து தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் தொழிலை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது என்று உற்சாகத்தோடு குறிப்பிட்டார். தொழில்முனைவோராக ஒரு ஐடியா போதுமே என்கிறது இவரது அனுபவம்.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x