

சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, கோயிலினுள் நுழைவதற்கு பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து வருமாறு கோவில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். உறவினர்கள் பலரிடம் பாரம்பரிய உடை இல்லை. ஆனால் கோவில் நிர்வாகத்தினரே வந்திருந்தவர்களுக்கு வேஷ்டி அளித்து சுவாமி தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்தனர். இதில் ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அளித்திருந்த வேஷ்டியில் ‘தமிழ்நாடு விலையில்லா வேஷ்டி’ என அரசாங்க முத்திரை அச்சிடப்பட்டிருந்ததுதான்.
சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், கடந்த மாதம் தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி பிறக்கும் குழந்தையின் தலையிலும் ரூ.60 ஆயிரம் கடன் சுமை உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பத்மநாப சுவாமி கோவிலில் தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி பக்தர்களுக்கு அளிக்கப்பட்டதற்கும், அரசின் கடன் சுமை அதிகரிப்புக்கும் தொடர்பு இருக்கிறது.
இலவச வேஷ்டி, சேலை
தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசால் தொடங்கப்பட்டதுதான் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம். தொடக்கத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு மட்டுமே வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. பிறகு இதில் வரையறை வைக்க வேண்டாம் என அரசு முடிவெடுத்தபோது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தேவையிருந்தாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வழங்க வேண்டும் என்ற நிலை உருவானது. இதனால் தமிழக கைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் வேஷ்டி, சேலையை உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் உருவானது. ஆனால் தேவையான அளவில் உற்பத்தி செய்யமுடியவில்லை. விளைவாக, பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யும் நிலை உருவானது. இத்திட்டத்துக்கென்று தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி செலவிடுகிறது.
இலவச மின்சாரம்
மிகை மின் மாநிலம் எனப் பெருமை பேசினாலும், எந்த நேரத்திலும் கடன் சுமையால் திவாலாகும் சூழலிலே தமிழக மின்சாரத்துறை இருக்கிறது. ஆரம்பத்தில் விவசாயத்துக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒரு விளக்கு மட்டுமே உள்ள வீடுகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதுவரையில் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற போதுதான் மின்வாரியத்தை இருள் சூழ ஆரம்பித்தது.
தமிழகத்தில் 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. ஆனால் வீடுகளின் மின் இணைப்பு 2.5 கோடிக்கு மேல். ஒரே வீட்டில் அப்பா, மகன் என தனித்தனி மீட்டர். ஒரு வீட்டிலேயே 200 யூனிட் வரை இலவச மின்சாரம். விளைவாக, மின்துறை மாதத்துக்கு ரூ. 1,500 கோடி வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால், இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், பலர் ஆழ்துளை கிணறு அமைத்து அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சுகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் சார்ந்து இது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன்
அரசியல் ஆதாயத்துக்காக இலவச டிவி வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையாக ஒரு கட்சி அறிவித்து ஆட்சியையும் பிடித்தது. மற்றொரு கட்சி மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை வழங்குவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தது இதற்காக செலவிட்ட தொகை அரசின் நிதிச் சுமையை சுமக்க முடியாத அளவுக்கு கூட்டிவிட்டது. மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் அரசு வாக்குக்காக இத்தகைய பயனற்றத் திட்டங்களை அறிவிக்காது. மாறாக, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலே கவனம் செலுத்தும்.
அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகள் மட்டுமே இப்போது ஏழை, எளிய மக்களுக்கான புகலிடமாக விளங்குகின்றன. இவற்றின் தரத்தை உயர்த்துவதுதான் சமூக அக்கறை கொண்ட அரசின் செயல்பாடாக இருக்க முடியும். அந்தவகையில் மாணவர்களின் கல்வியை முதன்மைப்படுத்தும் சத்துணவு திட்டம், இலவச பஸ் பாஸ் திட்டம் போன்ற திட்டங்கள் அவசியமானவை. இத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களில் மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்வது மிகவும் துயரமானது.
இன்னும் பாடம் கற்கவில்லை
தமிழகத்தின் கடன் சுமை குறித்து அதிர்ச்சி தெரிவித்த கட்சிகள், அதற்குமாற்று உபாயங்களை ஆராய்ந்த தாகவோ அல்லது இதிலிருந்து தமிழகத்தை எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி சிந்தித்ததாகவோ தெரியவில்லை. தேர்தல் சமயம் என்பதால் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு இலவச சலுகைகளை வாக்குறுதிகளாக அள்ளி வீசுகின்றன. ஒரு கட்சி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. போட்டிக்கு மற்றொரு கட்சியோ ரூ.1,500 மாதந்தோறும் அளிப்போம் என கூறுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையை அளிப்பதால்தான், மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால் தற்போது மகளிர் தின சலுகையாக ஆண்டுதோறும் 6 சிலிண்டரை இலவசமாக அளிக்கப் போவதாக ஒரு கட்சி தெரிவித்திருக்கிறது.
புதிதாக பொறுப்பேற்கும் கட்சி இவ்விதம் அறிவித்தால் கணக்கு தெரியாமல், அரசின் நிதி நிலையை உணராமல் தெரிவிக்கிறது என்று கொள்ளலாம். ஆனால் உண்மையில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த கட்சியே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பது உண்மையிலேயே பொருளாதார நிபுணர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து வரும் அறிவிப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் திணறிப் போய் கலங்கியுள்ளனர் தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள்.
அலட்சியம் வேண்டாம்
அரசின் செலவினங்களை சமாளிக்க நிதி வருவாய் மிகவும் அவசியம். ஏற்கெனவே நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு என்பதாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டு வரி வசூலில் பெரும்பகுதி மத்திய அரசு வசம் சென்றுவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே வரி வருவாய் இழப்பீடு வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி 2022 வரைதான் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதற்குப் பிறகு மாநில அரசுகள்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.
இந்தச் சூழலில், 15-வது நிதிக்குழு தமிழகத்துக்கு பரிந்துரைத்துள்ள நிதிப் பகிர்வு விகிதமானது, 14-வது நிதிக்குழு பரிந்துரைத்த விகிதத்தைவிட குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனையில் செஸ் மற்றும் சர்சார்ஜ் விதிப்பின் மூலம் மத்திய அரசு தனது பங்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதனால் மாநில அரசுக்கான பங்கு குறைந்துள்ளது.
தற்போதைக்கு தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அதிக அளவில் வருமானம் தருவதாகடாஸ்மாக் மட்டுமே உள்ளது. மது விற்பனை வருமானத்தை நம்பியே எவ்வளவு காலம் அரசியல் நடத்த முடியும். எனவே மாற்று வரி வருவாய் தேட வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், நிதி நிலைமை பற்றி எந்தக் கவலையும், பொறுப்பும் இல்லாமல், மக்கள் அனைவரையும் மகிழ்விக்கிறேன் பேர்வழி என அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை அள்ளி வீசுகின்றன. தேர்தல் கால அறிவிப்புகள் நீண்ட காலத்தில் மக்கள் நலனுக்கானவை அல்ல.
இத்தகைய இலவசமாக பொருட்கள் வழங்கும் திட்டங்கள், பொங்கல் பண்டிகையின்போது ரொக்க தொகை வழங்குவது போன்றவையெல்லாம் அரசின் நிதிச் சுமை அதிகரிக்கக் காரணம் என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த சுமையை அரசு சுமக்காது. மக்கள்தான் சுமக்க வேண்டும். அரசியல் லாபத்துக்காக இதை செயல்படுத்துவது மாநிலத்தின் எதிர்காலத்துக்கு சிறந்ததல்ல என்பதை திட்டத்தை அறிவிக்கும் அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
ramesh.m@hindutamil.co.in