பாலினப் பாகுபாடும் பெண்கள் தினமும்

பாலினப் பாகுபாடும் பெண்கள் தினமும்
Updated on
2 min read

ஆணும் பெண்ணும் சமம்; பாலினத்தை காரணம் காட்டி உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்று சட்டங்கள் கூறுகின்றன. ஆனால், யதார்தத்தில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது? சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில், உலகில் தற்போது நிலவும் அதீத ஏற்றத்தாழ்வுக்கு பாலினப் பாகுபாடு ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்தியாவில் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கான பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. 15 முதல் 18 வயதுக்குட்ட இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களை திருமண வாழ்வுக்கு தயார் செய்வதுதான் இந்திய சமூகத்தின் அடிப்படை பணியாக இருக்கிறது.

ஒரு பெண், நல்ல நிறுவனத்தில் நல்ல வேலையைப் பெற்றாலும், திருமணத்துக்குப் பிறகு, குடும்பக் கடமைகளையும் குழந்தை வளர்ப்பு பொறுப்புகளையும் காரணம் காட்டி வேலைக்குப்போவதைத் தடுத்துவிடுகிறார்கள். வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணிலிருந்து, பெப்சி கோ நிறுவனத்தின் உயர் பதவி வகித்த இந்திரா நூயி வரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.

படிப்பைப் பாதியில் விடுவது, வேலையிலிருந்து நிற்பது எல்லாம் பெண்களின் வாழ்க்கையில் இயல்பான நிகழ்வாகிவிட்டது.
பெரும் போரட்டத்துக்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்தாலும், பணியிடங்களில் பாலினப் பாகுபாடு எனும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளை விடவும் இந்தியாவில்தான் பெண்கள் பணியிடங்களில் அதிகப் பாகுபாடை எதிர்கொள்வதாக லிங்டுஇன் ஆய்வு கூறுகிறது.

அதில் இந்தியாவில் 85 சதவீப் பெண்கள் பாலினப் பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளை இழக்கின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3.7 சதவீதமாக இருக்கிறது. ஊதியமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆண் ஒரு மணி நேரத்தில் ஈட்டும் ஊதியத்தை அதே வேலையை செய்வதற்கு அந்த ஊதியத்தில் 65 சதவீதம்தான் பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. கரோனா காலகட்டத்தில் பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக மாறி இருக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் 48 சதவீதம் பெண்கள்தான். ஆனால், இந்திய வேலைசார் பங்களிப்பில் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதம் மட்டுமே. ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டால், 2025ல் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை விட 60 சதவீதம் உயரும் என்று மெக்கென்சி க்ளோபல் இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கை கூறுகிறது. அந்த வகையில் இந்தியாவின் வளர்ச்சி பாலினப் பாகுபாடு காரணமாக தடைபடுகிறது.

இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் சாவால்களை படிப்பு, வேலை, குடும்பம் என்பதோடு மட்டும் குறுக்கிவிடக்கூடாது. தெருவில்,சாலையில் ஒரு பெண் பாதுகாப்பாக உணரமுடிவதில்லை. எப்போதும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க நிர்பந்திக்கப்பட்டு இருக்கின்றனர். வன்முறையின் நடுவே அவர்களது அன்றாடப் பயணம் இருந்துகொண்டிருக்கிறது. இப்படியான ஒரு சூழலில்தான் நாம் பெண்கள் தினத்தை ஒவ்வோராண்டும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in