

riyas.ma@hindutamil.co.in
நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கல் எழுத்தாளரான யோசே சரமாகோவின் புகழ்பெற்ற நாவல் ‘பார்வை தொலைத்தவர்கள்’(blindness). ஒரு நகரில் உள்ள அனைவருக்கும் திடீரென்று பார்வையிழப்பு ஏற்படுகிறது. உலகம் அவர்களுக்கு இருள்கிறது என்பதாக அந்நாவல் செல்லும். கடந்த வாரம் ஆஸ்திரேலியர்கள் இப்படியான ஒரு தருணத்தை எதிர்கொண்டனர். அதிர்ச்சி அடைய வேண்டாம். பார்வையிழப்பு ஏற்படவில்லை. காலை கண்விழித்து பேஸ்புக் கணக்கைத் திறந்தால் முகநூல் நண்பர்களின் புகைப்படங்கள், பதிவுகள்,விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், செய்திகள் எதுவும் வரவில்லை. நண்பர்களை அழைத்து அவர்களது முகநூல் கணக்கில் செய்திகளுக்கான இணைப்பு வருகிறதா என்று விசாரிக்கின்றனர். எவருக்கும் வரவில்லை.
என்ன ஆயிற்று என்று அனைவரும் குழப்பத்துக்கு ஆளாயினர். பேஸ்புக்,கூகுள் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்தி நிறுவனங்களின் இணைப்புகள் பகிரப்படுவதற்கு, அந்தந்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒரு சட்டத்தை கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்றியது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியே அரசின் இந்தச் சட்டத்தை ஏற்க மறுத்த கூகுள், பிறகு சில செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இசைந்தது. ஆனால், பேஸ்புக் நிறுவனமோ வேறு முடிவை எடுத்தது. தங்களுடைய மொத்த வருவாயில் செய்திகளின் மூலம் கிடைக்கும் வருவாய் மிக மிகக் குறைவு.செய்தி நிறுவனங்களால் தங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை.
அதனால், அந்நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, தங்கள் தளத்தில் செய்திகள் பகிரப்படுவதை நிறுத்துவதாகக் கூறி பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அதன் தளத்தில் செய்திகள் பகிரப்படுவதற்கான வசதியை முடக்கியது. இந்த நிகழ்வானது ஆஸ்திரேலிய அரசுக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளின் அரசுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலிய அரசோ பின்வாங்கவில்லை. விளைவாக, பேஸ்புக், கூகுள் ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தன. அதன்பின்னர் ஆஸ்திரேலிய அரசு அந்தச் சட்டத்தில் பேஸ்புக், கூகுளுக்குச் சாதகமாக சில தளர்வுகளை அறிவித்தது.
எனினும்,அரசை விடவும் தாங்கள் பலம் பொருந்தியவர்கள் என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நிகழ்வு மூலம் உணர்த்தியுள்ளன. தற்போது உலகின் பெருநிறுவனங்களைப் பட்டியலிடும்போது அவற்றில் தொழில்நுட்ப நிறுவனங்களே முதன்மையாக உள்ளன. பேஸ்புக், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகிய ஐந்து நிறுவனங்கள் உலகின் மிகப்பெரும் தொழில்நுட்பநிறுவனங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அரசுகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்நிறுவனங்களின் வளர்ச்சி இருந்துவருகிறது. மொத்தமாக இந்நிறுவனங்களின் வருடாந்திர வருவாய் 800 பில்லியன் டாலர். இந்தத் தொகையானது சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளின் ஜிடிபியை விட அதிகம்.
அரசியல் அதிகாரத்தை நோக்கி
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வணிகத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் பலமிக்கவையாக மாறிவருகின்றன. அமெரிக்கத் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். பலர் சமூக வலைதளங்களில் வன்முறைப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். உடனடியாக பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் டிரம்பின் கணக்கை முடக்கின. அதேபோல் வன்முறையைத் தூண்டும் பதிவாளர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டன.
டிரம்பின் நடவடிக்கைகள் சரியா, தவறா என்பதல்ல இங்கு விவாதம். தொழில்நுட்ப நிறுவனங்கள் நினைத்தால் ஒரு நாட்டின் அதிபரையே மக்களுடனான தொடர்பிலிருந்து துண்டித்து விட முடியும் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இந்தியாவிலும் அப்படியான நிகழ்வு கடந்த மாதத்தில் நடந்தது. விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில், போராட்டத்தை தூண்டும் விதமான பதிவுகளை நீக்க வேண்டும் என்று ட்விட்டரிடம் இந்திய அரசு கேட்டது. அதற்கு ட்விட்டர், ‘பயனாளர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட முடியாது’ என்று கூறி பதிவுகளை நீக்க மறுத்துவிட்டது. விவகாரம் தீவிரம் அடைந்ததும் சர்ச்சைக்குரிய பதிவுகளை ட்விட்டர் நீக்கியது. எனினும், ஆரம்பத்தில் இந்திய அரசின் அழுத்தத்துக்கு ட்விட்டர் நிறுவனம் பணியாமல் இருந்தது கவனத்துக்குரியது.
ஆனால்,இந்த சுதந்திரத்தன்மை தொழில்நுட்ப நிறுவனங்களின் பல பரிமாணங்களில் ஒன்றுதான் தவிர, முழுமையான முகம் அல்ல. சூழலுக்கு ஏற்ப அரசுகளுக்கு கைப்பாவையாகவும் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. ‘ஸ்பிளின்டர்நெட்’ (splinternet), ‘இண்ட்ராநெட்’ (intranet) என்று பதங்கள் உருவாகி இருக்கின்றன. இந்தப் பதங்களானது தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நாட்டின் பிராந்திய எல்லைக்குள், அந்நாட்டு அரசின் கட்டுபாட்டுக்கு உட்பட்டு செயல்படுவதை குறிப்பவை. தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு வழியே அந்நாட்டு அரசுகள் தங்கள் மக்களைக் கட்டுப்படுத்த முடியும். சீனாவில், தென்கொரியாவில் நிகழ்ந்து கொண்டிருப்பது இதுதான். அந்நாடுகள் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தங்களின் அரசியல் கருவியாக பயன்படு'த்திக்கொண்டிருக்கின்றன.
தொழில்நுட்ப பிரபுத்துவம்
கடந்த 40 ஆண்டுகளாக உலகை ஆண்டுவரும் தாராளவாதப் பொருளாதாரம் முடிவுக்கு வந்துள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். தாராளவாதப் பொருளாதாரம் கோடீஸ்வரர்கள் ஏழைகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வை மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கரோனா காலகட்டம், தாராளவாத பொருளாதாரத்தின் அழிமுகத்துக்கு சாட்சியாக அமைந்தது. சரி, தாராளவாதப் பொருளாதாரம் அதன் முடிவை எட்டி இருக்கிறது என்றால், தற்போது எவ்வகையான பொருளதாரக் கட்டமைப்பு உருவாகிக்கொண்டிருக்கிறது? சமத்துவத்தை உருவாக்கும் பொருளாதாரக் கட்டமைப்பா? இல்லை. முதலாளித்துவத்தை விட ஆபத்தான பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்று தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உருவாகிவரும் புதிய பொருளாதாரக் கட்டமைப்பை ‘தொழில்நுட்ப பிரபுத்துவம்’ (Techno fedualism) என்று வரையறுக்கின்றனர்.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை எடுத்துக்கொண்டால்,ஒரு நிலவுடமையாளரின் நிலத்தில் விவசாயிகள் பயிரிட்டுக்கொள்வார்கள். அதற்கு ஈடாக அவருக்கு வாடகை செலுத்துவார்கள். நிலமும் அந்த விவசாயிகளுக்குச் சொந்தமில்லை. விளைவிக்கும் பயிர்கள் மீதும் அவர்களுக்கு முழு உரிமை கிடையாது. அதாவது, உற்பத்தியின் வாயிலாக மட்டுமல்ல விவசாயிகளின் இருப்பின் வாயிலாகவும் அந்தப் நிலவுடமையாளர் லாபம் ஈட்டிக்கொள்வார். முதலாளித்துவ சமூகத்தில் லாபமானது, உழைப்பாளர்களின் மிகை உற்பத்தியிலிருந்து பெறப்படுகிறது என்றால், நிலபிரபுத்துவ முறையில் லாபமானது வாடகை மூலம் பெறப்பட்டது. தற்போது தொழில்நுட்ப பிரபுத்துவம் அதைத்தான் செய்கிறது. அதாவது, உற்பத்தி வழியாக அல்லாமல் சேவைகளின் வழியாக அதிக லாபம் ஈட்டுகின்றன.
ஊபர், ஓலா, ஓயோ, ஏர்பிஎன்பி (airbnb) போன்ற நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றிடம் வாகனங்களோ, வீடுகளோ, ஹோட்டல்களோ கிடையாது. ஆனால் வாகனங்கள், ஹோட்டல்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து அந்நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன. இப்படி புரிந்துகொள்ளலாம். ஒருவரிடம் வீடு இருக்கிறது, கார் இருக்கிறதென்றால் அவை அவருக்கான உடமை மட்டுமல்ல ஏர்பிஎன்பி, ஓயோ ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கான மூலதனமும் கூட.
கூகுள், அமேசான் என தொழில்நுட்ப நிறுவனங்களின் இயங்குமுறையும் இத்தகையதுதான். பயனாளர்கள் இத்தளங்களைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், அவர்களின் பயன்பாடு அதிகரிக்கஅதிகரிக்க மேலும் அதிக தரவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி அவை தங்களுக்கான லாபத்தை அடைகின்றன. நிலபிரபுத்துவக் காலகட்டத்தில் இருந்த பண்ணை அடிமைகள் போல், தற்போது மக்கள் தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிமைகளாக மாறுவதும், பெருநிறுவனங்களுக்கு மூலதனத்தைப் பெருக்கித் தருவதுமான இந்தப் போக்குதான் தொழில்நுட்ப பிரபுத்துவத்தின் கட்டமைப்பாகிறது.
அடுத்த பொருளாதார நெருக்கடி
2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட சரிவே முக்கிய காரணமாக அமைந்தது.தற்போது அடுத்த பொருளாதார நெருக்கடி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் வழியாக உருவாகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்க முடியாத அளவுக்கு சிக்கல் நிறைந்ததாக உள்ளன. வரியிலிருந்து தப்பிப்பதற்காக, இந்த நிறுவனங்கள் அதன் சொத்தில் பெரும்பங்கை வரிச் சொர்க்கம் என்றழைக்கப்படும் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் பாதுகாக்கின்றன.
கரோனா தீவிரம் அடைந்தபோது உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்டது. ஆனால் பங்குச் சந்தை உச்சத்துக்கு சென்றுகொண்டிருந்தது. காரணம் என்னவென்றால், கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்தன. ஆனால், அதனால் பயன் அடைந்தது ஏழை மக்களோ, சிறு, குறு நிறுவனங்களோ அல்ல. பெருநிறுவனங்கள்தான்.
இதனால் அந்தப் பெருநிறுவனங்கள் அதன் பங்குகளை மீண்டும் வாங்கின. பிற நிறுவனங்களின் கடன் பத்திரங்களை வாங்கின. இதனால் அந்தந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகரிக்கிறதே தவிர, நாட்டின் பொருளாதாரத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படுவதில்லை. இதில் உள்ள முக்கியமான பிரச்சினை என்னவென்றால், உற்பத்தித் துறையில் முதலீடுகள் குறைந்து, சேவைத் துறைகளில் முதலீடுகள் அதிகரிப்பது. இந்தப் போக்கு நீண்ட கால அளவில் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை கொண்டு வரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறாக தனிமனித அளவிலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏகபோக அதிகாரத்தை கைப்பற்றி வருகின்றன. இவற்றின் இந்த ஏகபோக போக்கை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை உலக நாடுகள் தீவிரமாக சிந்தித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அவற்றின் வணிகச் செயல்பாடு, தகவல்களைக் கையாளுவது தொடர்பான நடைமுறைகளை நெறிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திர வெளியை முடக்குவதாக அமைந்து விடக்கூடாது.
ஏனென்றால், பத்திரிகை, செய்திச் சேனல்கள் போல் அல்லாமல் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தனி நபர்களும் கருத்து தெரிவிப்பதற்கான வெளியை ஏற்படுத்தி சூழலை ஜனநாயகப்படுத்தி உள்ளன. எப்படியாயினும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வர்த்தக போட்டியையும், அவை தனிமனித வாழ்வில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.