இன்று நீரவ், நாளை யார்?

இன்று நீரவ், நாளை யார்?
Updated on
2 min read

saravanan.j@hindutamil.co.in

வழக்கமாக பெரிய அரசியல் தலைவர்களோ அல்லது பெரிய சினிமா பிரபலங்களோ கலந்துகொள்ளும் கூட்டங்களில் கூட்டத்தின் சலசலப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ‘அதோ வருகிறார், இதோ வந்து கொண்டிருக்கிறார், அருகில் வந்து விட்டார்’ என்று கூவிக்கொண்டிருப்பார்கள். கிட்டதட்ட பொருளாதார குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ்மோடி, மெகுல் சோக்ஸி போன்றவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் கதையும் அப்படி ஆகிவிடுமோ என்ற அச்சம் இருந்துவந்தது. ஏனெனில் இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டும் இந்தியாவுக்கு இவர்களைக் கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருந்தன.

தற்போது ஒருவழியாக மூவரில் நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர் இந்தியா அழைத்துவரப்பட இருக்கிறார் என்பதைக் காட்டிலும் சுவாரஸ்யம் அவரது மேல்முறையீட்டு மனுவில் இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் தீர்ப்பு வழங்கிய விதம்தான் என்றால் மிகையில்லை. ரூ.14 ஆயிரம் கோடி அளவில் இந்திய வங்கிகளில் முறைகேடு செய்து கடன் வாங்கிய வைர வியாபாரியான நீரவ் மோடி விசாரணை நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க லண்டனுக்கு ஓடிப் போனார்.

பின்னர் 2019ல் லண்டன் மெட்ரோ ஸ்டேஷனில் வைத்துகைது செய்யப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவரை இந்தியா அழைத்துவருவதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. உடல்நிலையைக் காரணம் காட்டி தொடர்ந்து மேல் முறையீடு செய்துவந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அந்த மனுவை நிராகரித்தார். தீர்ப்பில் அவர் குறிப்பிடுகையில், ‘இவர் இந்தியாவுக்குக் கொண்டுசெல்லப்படுவதால் அவருக்கான நீதியை அவர் பெற முடியாமல் போவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

மேலும் அவர் நேர்மையாகத் தொழில்செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. அவருடைய பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் கரோனா பெருந்தொற்று காரணமாகவும், இந்தியச் சிறைகளின் மோசமான நிலை காரணமாகவும் தனது மனம் மற்றும் உடல்நிலை மோசமாக வாய்ப்புள்ளது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் உடல்நிலையைக் காரணம் சொல்வதாயிருந்தால் அதற்கான ஏற்பாடுகளுடன், அனைத்து மனித உரிமைகளுக்கான உத்தரவாதங்களுடன் அவரை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை என்று கூறினார்.

இந்தத் தீர்ப்பை அடுத்து மீண்டும் நீரவ் மோடி தரப்பில் மேல் முறையீடு செய்வதற்கான காரணங்கள் பெரிய அளவில் இல்லை என்பதால் விரைவில் அவர் இந்தியா அழைத்துவரப்படுவது உறுதியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருக்காக மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மிகுந்த பாதுகாப்புகளும் வசதிகளும் கொண்ட சிறை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய அறையின் வசதிகள், நிலை பற்றி கடிதம் வேண்டுமானால் அனுப்பத் தயார் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே நீரவ் மோடியை இந்தியா அழைத்துவருவதற்கான பணிகள் கிட்டதட்ட முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

நாட்டை விட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் நீரவ் மோடி வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மற்ற குற்றங்களைக் காட்டிலும் பொருளாதார குற்றங்களினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதுவும் வங்கிகளில் நடத்தப்படும் மோசடிகளால் நாட்டின் நிதி நிலைக்கும் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உண்டாகும். மேலும் இந்தக் குற்றங்கள் செய்பவர்கள் சூழ்நிலை கைதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை அனைத்துமே திட்டமிட்ட குற்றங்களாகத்தான் இருக்கும். எனவே இந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள் உடனடியாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும்.

தற்போது நீரவ் மோடி விஷயத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், விஜய் மல்லையா வழக்கில் தொடர்ந்து இழுபறி இருந்துகொண்டே இருக்கிறது. அவர் தனது இரட்டை குடியுரிமை மூலம் தப்பித்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டே இங்கிலாந்து நீதிமன்றம் அவரை இந்தியா அனுப்ப உத்தரவிட்ட நிலையிலும் அவரை இன்னும் அழைத்துவர முடியவில்லை. அதேபோல் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா தீவில் தஞ்சமடைந்திருக்கிறார். ஆண்டிகுவா பிரதமர் மெகுல் சோக்ஸி போன்ற வஞ்சகர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். விரைவில் இந்தியா அனுப்பப்படுவார் என்று கூறினார்.

ஆனால் இதுவரை அதில் முன்னேற்றம் இல்லை. இதுபோன்ற விவகாரங்கள் இருநாட்டு தரப்பு சம்பந்தப்பட்டதாக இருப்பதால் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. அவற்றையெல்லாம் தாண்டி நீரவ் மோடிக்கு அடுத்து இந்தியா வரப்போவது யார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in