ஜிஎஸ்டி-க்கு பின்னடைவு?

ஜிஎஸ்டி-க்கு பின்னடைவு?
Updated on
2 min read

மத்தியில் ஆளும் பாஜக-வின் பிரதான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒருமுக வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பிரதானமானது. இந்த வரி விதிப்பு முறையை முந்தைய காங்கிரஸ் அரசு தொடங்கியிருந்தாலும் அதற்கு இன்னமும் இறுதி வடிவம் கிடைக்கவில்லை.

மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரி விதிப்புகளால் நுகர்வோர் அடையும் பாதிப்புகள் ஏராளம். அனைத்துக்கும் மேலாக பல முனை வரி விதிப்புகளால் குழம்பிப் போயுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் ஒருமுக வரி விதிப்பு அவசியம் என வலியுறுத்தி வந்தன. 1991-ம் ஆண்டில் தாராள பொருளாதாரத்துக்கு இந்தியா கதவுகளைத் திறந்துவிட்டாலும் ஒருமுனை வரி விதிப்பு என்ற ஜிஎஸ்டிக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டது 2003-ம் ஆண்டில்தான். ஆனால் அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

இரண்டு முறை தொடர்ந்து பதவியில் இருந்த காங்கிரஸ் அரசு இதை அமல் படுத்துவதில் தீவிரம் காட்டுவது போலத் தோன்றியது. ஆனால் செயல் படுத்தவில்லை. தற்போது இதை அமல் படுத்தியே தீர வேண்டும் என பாஜக தீவிரமாக உள்ளபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது காங்கிரஸ். அரசியலில் இது சகஜம் என்றாலும் நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பட்ஜெட்டில் திட்டவட்டமாகக் கூறினார். அதற்கான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களவையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள பாஜக அரசால் இந்த மசோதாவை வெற்றி பெறச் செய்ய முடிந்தது. ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அது அங்கேயே முடங்கியுள்ளது. பிஹார் மாநில தேர்தலும் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக இல்லை.

ஜிஎஸ்டி மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றியபிறகு அது சட்டமாகும். இதை அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி அமலாகும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றாக வேண்டும். இக்கூட்டம் இம்மாதம் 20-ம் தேதி நடைபெறுவதாக உள்ளது. இதில்தான் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்த கேரள மாநில நிதி அமைச்சர் கே.எம். மாணி சமீபத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

இதனால் குறுகிய காலத்திற்குள் புதிய தலைவரை நியமித்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

பெரும்பாலான மாநில நிதி அமைச்சர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தப் பதவி ராசியில்லாத ஒன்று என்ற எண்ணம் பரவலாகத் தோன்றியுள்ளதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

இதற்கு முன்பு அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்த மாநில நிதி அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். அல்லது நிதி அமைச்சர் பதவியை இழந்துள்ளனர்.

இம்மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில்தான் அந்தந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி அமலால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவாதித்து அதை மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அதற்கேற்ப மத்திய அரசு விதிமுறைகள வகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தலைவர் இல்லாமல் இந்த கூட்டம் எப்படி நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் குழுவுக்கு தலைவரைத் தேடுவது, மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தை எட்டி மசோதாவை நிறை வேற்றுவது என பன்முக நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

ஜிஎஸ்டி இம்முறையாவது அமலாகுமா? காத்திருப்போம் ஏப்ரல் வரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in