

பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை இந்த ஆண்டு தொடக்கம் முதலே நிலையற்றதாக இருந்துவருகிறது. இத்தகைய சூழலில் பங்கு முதலீட்டாளர்கள் பாதுகாப்பற்றதாக உணர்வார்கள். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தை முதலீட்டுக்குப் புதிதாக வந்தவர்கள். செல்வத்தை உருவாக்கும் முயற்சியில், சுழற்சியில் முதலீடு செய்வது முக்கியமானது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இத்தகையச் சூழல்நிலையில், ஒருவர் ‘எஸ்ஐபி’(SIP – systematic investment plan) திட்டத்துடன், முதன்மையான பங்கு நிதிகளிலும் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் பங்குச் சந்தையின் ஏற்ற மற்றும் இறக்கச் சுழற்சியில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புக் கிடைக்கும். பங்குகளில் போதுமான அளவுக்கு முதலீடு செய்தவர்கள், பங்குச் சந்தையின் இயக்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ஏனென்றால், தற்போது இருக்கும் முதலீட்டு அமைப்பானது சந்தை ஏறுமுகத்துக்குச் செல்லும்போது அதைக் கைப்பற்றுவதை முதன்மையாகக் கொண்டது. நினைவில் கொள்ளுங்கள், எப்போது சந்தை மதிப்பீடுகள் அதிகரிக்கிறதோ, அப்போது பங்குச் சந்தைகளில் நிலையற்றத் தன்மையும் அதிகரிக்கும். மேலும், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் தற்போது பங்குச் சந்தையில் நுழைவது என்பது தாமதமானது அல்ல.
பத்து ஆண்டுகால அடிப்படையிலான முதலீட்டுத் திட்டத்தில், வேறெந்த சொத்து பிரிவுகளைவிடவும் பங்குகளில் முதலீடு செய்வது அதிக வருவாயைத் தரக்கூடியது. சொத்து பிரிவு (asset classes) என்பது பங்கு, கடன் பத்திரம், ரியல் எஸ்டேட், உள்ளிட்டவற்றைக் குறிப்பது. சந்தை ஒரு குறிப்பிட்டக் கட்டத்தில் விலை உயர்ந்ததாக இருக்கும்போதும்கூட இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில்- பொருளாதாரம் 7 சதவீதத்துக்கு மேலான விகித்தில் வளரும்போது - நீண்ட கால அடிப்படையில் பங்குகளின் மூலம் அதிக வருவாய் ஈட்டக் கூடிய சாத்தியம் இருக்கிறது.
அதே நேரத்தில் நீண்டகால முதலீட்டில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. சொத்து ஒதுக்கீடுதான் அது. சொத்து ஒதுக்கீடு என்பது ஒருவர் அவர் பொருளாதார இலக்கில், எந்தெந்த சொத்து பிரிவுகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்குகிறார் என்பதைக் குறிப்பதாகும். இத்தகைய சொத்து ஒதுக்கீடுகளுக்கு உதவுவதற்காகவே, தற்போது பரஸ்பர நிதித் திட்டங்களில் ஒன்றாக ‘டைனமிக் அசட் அலோகேஷன் ஃபண்ட்ஸ்’ (dynamic asset allocation funds)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி அமைப்பானது, சொத்து பிரிவுகளில் அடிப்படையில்பங்கு மற்றும் கடன் பத்திரத்தில் சரியான ஒதுக்கீட்டை வழங்க முயற்சிக்கிறது.