

riyas.ma@hindutamil.co.in
சில வாரங்களுக்கு முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவி ஒருவரைச் சந்தித்தேன். அவர் தற்போதுதான் முதுகலை படிப்பை நிறைவு செய்திருக்கிறார். வேலை பெறுவதற்காக பல்வேறு இடங்களுக்கு விண்ணப்பித்து வருகிறார். அவ்வாறாக, ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்.
நேர்காணலின் போது, அந்தக் கல்லூரி தரப்பு அவரிடம் கேட்கிறது, ‘உங்களுக்குப் பார்வை இல்லையே, நீங்கள் எப்படி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பீர்கள், எவ்வாறு விடைத்தாள் திருத்துவீர்கள், மாணவர்களை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள்’ என்று. அந்த மாணவி அவர்களிடம் பார்வையற்றவர்கள் கல்வி கற்கும் முறை, பிறருக்குக் கற்பிக்கும் முறை, அலுவலகச் செயல்பாடுகளை செய்யும் முறை ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார்.
பார்வையற்றவர்களின் உலகம் குறித்து அந்தக் கல்லூரித் தரப்புக்குத் தெரியவில்லை. அந்த மாணவி கூறியவை, அக்கல்லூரி நடைமுறைக்கு சாத்தியமற்றதெனக் கருதி அவர்கள் அவருக்கு வேலை வழங்க மறுக்கின்றனர். இது இந்திய பொது சமூகத்துக்கும் மாற்றுத்திறனாளிகளின் உலகத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளிக்கான ஒரு உதாரணம் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலை இழந்தனர். பொது உரையாடலில் வேலையிழப்பு, ஊதியக் குறைப்புப் பற்றி பேச்சுகள் அதிகம் இடம் பிடித்தன. ஆனால், அவற்றில் மாற்றுத்திறனாளிகளின் வேலை வாய்ப்பு சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய உரையாடல்களைப் பார்க்க முடியவில்லை.
உலக நாடுகளில் இந்தியாவில்தான் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகம். மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 7 கோடிக்கு மேல் இருக்குமென்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உடற்குறைபாடு, புலன் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு என மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகள் பல வகைகளாக உள்ளன.
இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பின்றி ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். வேலை செய்பவர்களும் முறைசாரா துறைகளில் அன்றாடக் கூலிகளாகவே இருக்கின்றனர். இங்குள்ள மாற்றுத் திறனாளிகளில் 45 சதவீதம் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். 30 லட்சம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வதில்லை என்று யுனஸ்கோ மற்றும் யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கின்றன. அவர்கள் பள்ளிப் படிப்பை தொடராமல் இடைநிற்பதற்கு இந்தியச் சூழல்தான் காரணமாக இருக்கிறது.
44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவைகளாக உள்ளதாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்கு, மாற்றுத்திறனாளிகளின் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு. 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1171.77 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவானது. அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடும், உயர் கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன. வேலைக்கும், உயர் கல்விக்கும் தகுதியான மாற்றுத் திறனாளிகள் கிடைப்பதில்லை என்பது காரணமாக கூறப்படுகிறது.
அரசு இடது ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும், கல்லூரிப் படிப்பு முடித்தவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பெறமுடியாத நிலையிலே உள்ளனர். இந்திய நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை உள் இணைக்கும் வகையில் இல்லை. வெகு சில நிறுவனங்களே மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புச் சார்ந்து முன்னுதாரணமாகச் செயல்படுகின்றன. ஏனைய நாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. அவர்களின் மேம்பாட்டுக்கு அந்நாட்டு அரசுகள் பெரும் அக்கறை எடுக்கின்றன.
அங்குள்ள கட்டடங்கள், போக்குவரத்து அமைப்பு போன்றவை மாற்றுத்திறனாளிகளை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள கட்டடங்களையும், போக்குவரத்து அமைப்பையும், அலுவலச் சூழலையும் நினைத்துப் பாருங்கள்? மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதியே இங்கு முறையாக செய்துகொடுக்கப்படவில்லை. இவ்வாறு இந்திய அரசும், பொது சமூகமும் மாற்றுத்திறனாளிகள் குறித்து அக்கறையும் புரிதலும் அற்று இருப்பதால், சமூக மைய ஓட்டத்தி
லிருந்து அவர்கள் விலக்கப்பட்டு இருக்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் அவர்கள் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மாற்றுத்திறானாளிகளுக்கான சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, கல்வி சார்ந்து தெளிவான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமாக அரசு பொறுப்பேற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு நல்வாழ்வு அளித்திடுவது ஒரு குடிமைச் சமூகத்தின் கடமை என்பதை அரசு உணர வேண்டும்.