

33 சதவீத இட ஒதுக்கீடு கோரி பெண்கள் அமைப்புகள் இன்னமும் போராடி வருகின்றன. அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும் வேலை காலி இல்லாத நிலை. ஆனால் சென்னை யஹமா ஆலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு 50 சதவீத இட ஒதுக்கீடு. ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது உண்மைதான்.
இந்தியாவில் ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லம் வடகல் எனுமிடத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கியுள்ள மூன்றாவது ஆலை இதுவாகும்.
இந்தியாவில் ஏற்கெனவே உள்ள இரண்டு ஆலைகளை விட இது மிகவும் பெரியது. மற்ற இரண்டு ஆலைகளை விட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. இந்த ஆலையின் செயல்பாடு சமீபத்தில் தொடங்கப்பட்டாலும், கடந்த வாரம் செய்தியாளர்கள் சிலர் ஆலை யைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப் பட்டனர். ஆலையின் செயல்பாடு, உற்பத்தி, எதிர்காலத் திட்டங்களை விளக் கினார் யமஹா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தகாஷி டெரபாயஷி.
109 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை ஆண்டுக்கு 4.5 லட்சம் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். தற்போது இங்கு 2 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆலை.
இந்நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் 9 நிறுவனங்கள் இந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ளது. இவை 68 ஏக்கரில் அமைந்துள்ளன. இந்நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 650 கோடியை முதலீடு செய்துள்ளன. இவற்றில் 1,300 பேர் பணிபுரிகின்றனர்.
தயாரிப்பு ஆலையும், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் ஆலையும் ஒருங்கே அமைந்திருப்பது இங்கு மட்டும்தான். சூரிய மின்னாற்றல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மேற்கூரை, ஒரு சொட்டு நீர் கூட விரயமாகாத பயன்பாடு ஆகியன இந்த ஆலையின் சிறப்பம்சங்களாகும்.
யமஹா ஆலையிலிருந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு ஸ்கூட்டர் வெளி வருகிறது. யமஹா நிறுவனத்தின் மற்ற இரு ஆலைகளின் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 70 சதவீத உற்பத்தி பங்களிப்பை அளிக்கிறது சென்னை ஆலை. யமஹா ஆலையின் உற்பத்தித் திறன் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்தப்படும். அப்போது மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் தகாஷி டெரபாயஷி. எனவே மேலும் ஆயிரம் பெண்களுக்கு வேலை நிச்சயம் யமஹா ஆலையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆலையில் தற்போது பாசினோ ஸ்கூட்டர்களும், சல்யூடோ எனும் மோட்டார் சைக்கிள்களும் தயாரா கின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் திட்டமுள்ளதாக அவர் கூறுகிறார். சீறிப்பாயும் வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் அதன் தயாரிப்புப் பின்னணியில் பலரது உழைப்பு குறிப்பாக பெண்களின் உழைப்பு உள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கலாம்.
நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு என்பதை விட, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ள யமஹா நிறுவனத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.