

aarati.k@thehindu.co.in
வங்கிகள் மீது மக்களுக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. வங்கிகள் திவால் நிலைக்கு ஆளானாலும், அரசாங்கம் மீட்டெடுத்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, வங்கிகளின் வர்த்தகச் செயல்பாடுகள் குறித்து எந்தவொரு விசாரிப்பும் மேற்கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், திவால் நிலைக்கு ஆளான வங்கிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கியே தலையிட்டாலும், வாடிக்கையாளர்கள் அடிவயிற்றில் பயத்தோடு இருக்க வேண்டியதுதான் நிசர்சனம் என்பதை யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கி விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.
ஒவ்வொரு முறையும் வங்கிகள், அதன் தவறான நிர்வாகத்தின் காரணமாக நிதிப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்களாகவே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நீங்கள் அல்லல் படாமல் இருக்க, உங்கள் வங்கி நிதிப் பிரச்சினையை நோக்கி செல்கிறதா என்பதை எப்படி அடையாளம் காண்பது? நான்கு காரணிகளின் வழியே உங்கள் வங்கியின் நிலைமைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளலாம். முதலாவது காரணி.
வங்கியின் மூலதனத்துக்கும் அது வழங்கும் கடன் அளவுக்கும் இடையிலான விகிதாச்சாரம். இதை சிஆர்ஏஆர் (capital to risk weighted assets ratio -CRAR) என்பார்கள். அதாவது வங்கி இழப்பைச் சந்தித்தால் அதை ஈடுகட்டும் வகையில் வங்கியிடம் எவ்வளவு மூலதன இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கக்கூடியது. இதில் டயர் 1 சிஆர்ஏஅர் என்ற உப பிரிவு இருக்கிறது. வங்கிகளின் முதன்மையான மூலதன ஆதாரங்களை அது குறிக்கிறது.
இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை, அதன் சிஆர்ஏஅர் குறைந்தபட்சமாக 10.875 சதவீதமாகவும், டயர் 1 சிஆர்ஏஆர் 8.875 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. இரண்டாவது காரணி, வாராக் கடன் விகிதம். வங்கிகள் வழங்கிய கடன், நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் திருப்பி செலுத்தபடாவிட்டால் அது வராக் கடனாக பார்க்கப்படுகிறது. அவ்வாறாக, வங்கியின் வாராக் கடன் விகிதம் எவ்வளவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் வங்கியின் நிதிச் செயல்பாட்டை புரிந்துகொள்ள உதவும்.
மொத்த வாராக் கடன் விகிதமும், நிகர வாராக் கடன் விகிதமும் 5 சதவீதத்துக்குக் கீழாக இருந்தால் வங்கியின் நிதிச் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். அதேசமயம் அவற்றை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், ஒவ்வொரு காலாண்டிலும் வாராக் கடன் விகிதம் 0.5 சதவீதம் என்று அதிகரிக்கத் தொடங்கினால், வங்கி நிதிப் பிரச்சினைக்கு உள்ளாகி வருவதாக அர்த்தம்.
மூன்றாவது காரணி, வங்கியின் முதன்மையான மூலதன ஆதாரங்களுக்கும் (டயர் 1 சிஆர்ஏஆர்), வங்கி வழங்கியிருக்கும் மொத்த கடன் அளவுக்குமான விகிதாச்சாரம். இதை லிவரேஜ் விகிதம் (leverage ratio) என்பார்கள். ஆர்பிஐ நிபந்தனையின்படி லிவரேஜ் விகிதம் 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
ஆனால், லிவரேஜ் விகிதம் 5 சதவீதமாக இருப்பது பாதுகாப்பானது. நான்காவது காரணி, ரொக்கமாக மாற்றப்படக்கூடிய சொத்து மதிப்பு விகிதம் (liquidity coverage ratio - LCR). இது, முப்பது தினங்களுக்கான கடனை சமாளிக்கும் அளவில் வங்கியிடம் பணம் இருக்கிறதா என்பதை குறிக்கக்கூடியது. எல்சிஆர் விகிதம் 100 சதவீதத்துக்கு மேலாக இருப்பது நல்லது.
மேற்கூறப்பட்ட நான்கு விகிதாச்சாரங்கள் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படக்கூடியவை. வங்கிகளின் இணையதளங்களில் ‘பேசல் III பில்லர் 3’ என்ற ஆவணத்தில் அவ்விவரங்களை பார்க்க முடியும். இத்தகைய காரணிகளின் அடிப்படையிலேயே வங்கிகளின் நிதிச் செயல்பாடுகளை ஆர்பிஐ மதிப்பிடுகிறது. இதில் பிரச்சினைகள் இருக்கும் வங்கிகளை திருத்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ உட்படுத்தும்.
இவை தவிர்த்து மேலும் சில விவரங்களின் வழியே உங்கள் வங்கி பிரச்சினையில் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம். நீங்கள் முதலீடு செய்துள்ள வங்கியில், நிர்வாக அதிகாரிகள் அவர்களது பணிக்காலம் முடியும் முன்பே பதவியிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால், உங்கள் வங்கியில் நிர்வாக ரீதியிலான பிரச்சினை தீவிரமடைந்திருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல், உங்கள் வங்கியின் தலைமை செயல் அதிகாரியை அல்லது இயக்குநர்கள் குழு உறுப்பினர்களை ஆர்பிஐ நீக்கினாலோ மாற்றி அமைத்தாலோ உங்கள் வங்கியில் நிர்வாக ரீதியிலான பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். வங்கியின் பங்குதாரர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டாலும், வங்கியின் பங்கு மதிப்பு தொடர்ச்சியாக சரிந்துகொண்டிருக்கும் பட்சத்திலும் வங்கியில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.
பொதுத் துறை வங்கிகளைவிடவும், திருத்த நடவடிக்கையின் கீழ் இருக்கும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுத்துறை வங்கி திவால் நிலைக்கு உள்ளாகும் பட்சத்தில் அரசு தலையிட்டு உடனடி மீட்பு நடவடிக்கையில் இறங்கும். தனியார் வங்கியைப் பொறுத்த வரையில் பொருத்தமான முதலீட்டாளர்கள் கிடைக்கும் வரையில் காத்திருக்க நேரிடும். உங்கள் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து, உங்கள் முதலீட்டை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.