மின் நிலையம் இங்கே, மின்சாரம் எங்கே?

மின் நிலையம் இங்கே, மின்சாரம் எங்கே?
Updated on
2 min read

தொழில்துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தொழில்துறை வளர்ச்சியடைவதோடு நாட்டின் பொருளாதாரமும் உயரும், வேலையில்லாத் திண்டாட்டமும் கணிசமாகக் குறையும் என்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

ஆனால் 23 ஆண்டுகளாக தனியா ரால் தொடங்கப்பட்ட மின்னுற்பத்தித் திட்டம் இன்னமும் செயல்படாமல் ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப் படாமல் இருப்பதை என்னவென்று சொல்வது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மண்டலேஸ்வர் எனுமிடத்தில் ரூ. 736 கோடி முதலீட்டில்  மகேஸ்வரி நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடங்க 1992-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஜவுளித் துறையில் கோலோச்சிய எஸ் குமார்ஸ் நிறுவனம்தான் 400 மெகாவாட் மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது. நர்மதா அணையிலிருந்து நீர் மின்சாரம் தயாரிப்பதுதான் இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.

இத்திட்டத்துக்கு மத்தியப் பிரதேச மாநில அரசு அனுமதி அளித்தது.

ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத் தப்பட்டால் 61 கிராமங்களைச் சேர்ந்த 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று நர்மதா அணை காப்பு போராட்டக் குழுவினர் (நர்மதா பச்சாவ் அந்தோலன்) போராட்டம் நடத்தினர்.

இதனால் இத்திட்டப் பணிகளைத் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்ட மதிப்பு செலவு 6 மடங்கு உயர்ந்தது.

இத்திட்டம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டபோது இந்த நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 2.64 என்ற விலையில் வாங்க மத்தியப் பிரதேச மின் நிர்வாக நிறுவனம் (எம்பிபிஎம்சி) ஒப்பந்தம் போட்டது. இப்போதைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 11 விலையில் வாங்கினால் மட்டுமே இத்திட்டம் சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதிக விலை கொடுத்து மின் சாரத்தை வாங்க மாநில அரசு தயாராக இல்லை. இதனால் 2012-ம் ஆண்டு மின் கொள்முதல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎப்சி) ரூ. 700 கோடி, கிராமப்புற மின்வசதி ஏற்படுத்தும் நிறுவனம் (ஆர்இசிஎல்) ரூ. 250 கோடி, ஹட்ரோ ரூ. 250 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ. 180 கோடி, எஸ்பிஐ ரூ.200 கோடி, எல்ஐசி ரூ.106 கோடி கடன் அளித்துள்ளன.

மத்திய அரசு நிறுவனங்களும், வங்கி களும் இத்திட்டத்துக்கு அளித்துள்ள கடன் தொகை மட்டும் ரூ.2,200 கோடி யாகும். இத்திட்டத்தைச் செயல்படுத்து வதற்காக 2014-ம் ஆண்டு மாநில தலைமைச் செயலர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம், திட்டத்துக்கு கடன் அளித்த நிறுவனங்கள், மின் கொள் முதல் செய்யும் மாநில மின் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண இக்குழு பணிக்கப்பட்டது. புதிய முதலீடுகளை திரட்டி மின்னுற்பத்தியை நிறுவனம் தொடங்காவிட்டால் இந்நிறுவனத்தை அரசு ஏற்று நடத்தலாம் என குழு தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இந்த ஆலை செயல்பட வேண்டுமெனில் ரூ.2 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதில் ஆயிரம் கோடி ரூபாய் ஆலையை செயல்படுத்துவதற்கும், அங்குள்ள கிராம மக்களை வேறிடங்களில் குடியமர்த்துவதற்கு ஆயிரம் கோடி ரூபாயும் தேவைப்படுகிறது.

இத்திட்டத்துக்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 1,000 கோடி அளவுக்குத் திரட்ட நிறுவனம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் நிறுவனத்தை மறு சீரமைக்க பிஎப்சி நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி நிர்வகிக்கும் கணக்கில் ஒரு பைசாவைக் கூட அந்நிறுவனம் போடவில்லை.

இத்திட்டத்தை செயல்படுத்த புதிய முதலீடுகளை இந்நிறுவனம் போடாத நிலையில் இத்திட்டம் அரசு வசமாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிறுவனத்தை அரசு நிறுவனமாக ஏற்பது தொடர்பான அறிவிப்பை மத்திய மின் அமைச்சகம்தான் எடுக்க வேண்டும். அவ்விதம் அறிவித்தால் இந்த ஆலை என்ஹெச்பிசி அல்லது என்ஹெச்டிசி வசமாகலாம்.

அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியார் வசம் விடுத்து நிர்வாகத்தை மட்டுமே அரசு கவனிக்க வேண்டிய சூழலில் தனியார் நிறுவனத்தை அரசு எடுத்து நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பிரச்சினை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் சந்திக்கும் என்பதற்கு 23 ஆண்டுகளாக செயல்படாமலிருக்கும் இத்திட்டமே மிகச் சிறந்த சான்றாகும்.

புதிய நிறுவனங்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும், கிடப்பில் உள்ள திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் முடங்கிப் போன பல்லாயிரம் கோடியை மீட்கவும் வழியேற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in