Published : 11 Jan 2021 09:58 am

Updated : 11 Jan 2021 10:13 am

 

Published : 11 Jan 2021 09:58 AM
Last Updated : 11 Jan 2021 10:13 AM

என்ன செய்யப்போகிறது இந்தியா?

india

riyas.ma@hindutamil.co.in

புதிய ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். உலக அளவில் சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக மிக முக்கியமான மாற்றங்களுக்குக் கடந்த ஆண்டு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. கரோனா பரவலைத் தடுத்தல், காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்குத் தீர்வு காணுதல், செயற்கைத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, தற்போதைய யுகத்துக்கு ஏற்றாற்போல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்குதல் என்ற நெருக்கடிகளை உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கிறது.


பேரழிவுகளும் மாற்றங்களும்

வரலாறு நெடுக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களில் பெரும்பாலானவை இதுபோன்ற பேரழிவுக் காலகட்டத்தில் ஏற்பட்ட சூழல் நிர்பந்தம் காரணமாகவே நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய சமூகக் கட்டமைப்பை மாற்றியதில் பிளேக்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதுவரை தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படாமல், பண்ணையடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர். பிளேக்குக்கு பிறகு சூழல் மாறி, அவர்கள் தங்களுக்கான உரிமையை குறைந்தபட்சமாகவேனும் பெற்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது. அதேபோல் கடந்த நூற்றாண்டு உதாரணமாக இரண்டாம் உலகப் போரை எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகே உலக நாடுகளிடையே பரஸ்பர அமைதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலக ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவை உருவாக்கப்பட்டன. பேரழிவு காலகட்டத்தில் மட்டுமே மனிதகுலம் அதன் போதாமையை உணருகிறது. அந்த வகையில் தற்போது பொருளாதாரக் கட்டமைப்பு, நாடுகளிடையேயான உறவுகள், இயற்கை மீதான மனிதனின் உறவு ஆகியவற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தேவையை கரோனா உருவாக்கி இருக்கிறது.

இருவகை மதிப்பு

உலகின் போக்கை தீர்மானிக்கக்கூடிய முதன்மையான காரணிகளில் ஒன்று பொருளாதாரம். அந்த வகையில் தற்போதைய பொருளாதாரம் தொடர்பாக இருவகை மதிப்புகளை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஒன்று ‘அனுபவ மதிப்பு’ (experiential value) மற்றொன்று ‘பரிவர்த்தனை மதிப்பு’(exchangevalue). பள்ளி ஆசிரியர் ஒருவர் அவரது மாணவர்கள் மீது தனிக் கவனம் எடுத்து பள்ளி நேரம் முடிந்த பிறகும் பாடம் சொல்லித்தருகிறார். மாணவர்கள் மீதான அக்கறையின் காரணமாக, தன் வேலை நேரம் முடிந்த பிறகும் அவர்களுக்கு கற்றுத் தருவதில் அந்த ஆசிரியருக்கு ஒரு மன நிறைவு கிடைக்கிறது. அந்த ஆசிரியர் மீது மாணவர்களுக்கு கூடுதல் பற்றும் மரியாதையும் உருவாகிறது.

இங்கு கற்றுத் தருதல் என்ற செயல்பாடு ‘அனுபவ மதிப்பை’ப் பெறுகிறது. அதுவே அந்த ஆசிரியர் கூடுதல் நேரம் ஒதுக்கி கற்றுத் தருவதற்கு அம்மாணவர்களிடம் பணம் வாங்குகிறார் என்றால் அப்போது அந்தக் கற்றுக் கொடுத்தல் செயல்பாடு ‘பரிவர்த்தனை மதிப்பை’ப் பெற்றுவிடுகிறது. ‘பரிவர்த்தனை மதிப்பு’ ஏற்படும்போது அது சந்தைப் பண்டமாக மாறிவிடுகிறது. இவ்வாறு ‘அனுபவ மதிப்புகளா’க இருப்பவை முதலாளித்துவ சமுதாயத்தில் ‘பரிவர்த்தனை மதிப்பா’க மாற்றப்படுகின்றன. அதாவது மனிதர்கள் மீது அக்கறை என்பது முற்றிலும் அழிந்து லாபம் ஒன்றே இலக்கு என்று நிலை உருவாகி விடுகிறது.

மக்களுக்கு மருத்துவ வசதி, கல்வி, உணவு, இருப்பிடம் ஆகிய அடிப்படையான தேவைகளை நிறைவேற்றித் தருவது அரசு என்ற அமைப்பின் முதன்மையான கடமை. இதற்கான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்குத்தான் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் முதலாளித்துவச் சூழலில் லாபம் என்பதே பிரதானமாகி, மக்கள் நலம் என்பது பின்னுக்குச் சென்றுவிடுகிறது. சமீபத்தில், எழுத்தாளரும் கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சருமான யானிஸ் வருஃபாகிஸ் கரோனா முடக்கிப்போட்ட 2020-ம் ஆண்டைப் பற்றி தனது பார்வையை முன்வைத்தார்.

நமது அரசு என்ற அமைப்புக்கு அதிகாரமில்லை என்று நினைத்து வந்தோம். ஆனால், கரோனா காலகட்டம் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியது. அரசுக்கு, மிகப் பெரிய அளவில் அதிகாரம் இருக்கிறது. ஆனால், பெரு நிறுவனங்களின் அதிகாரத்துக்கு இடையூறு விளைவிக்க அரசு விரும்பவில்லை என்பது அவரது கருத்தின் சாராம்சம். மேலும் தற்போது முதலாளித்துவம் முடிவுக்குவிட்டது என்றும் முதலாளித்துவம் தொழில்நுட்ப பிரபுத்துவமாக மாற்றமடைந்திருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். அதாவது, அமேசான், பேஸ்புக், கூகுள் போன்ற பெருநிறுவனங்களே உலகின் போக்கை தீர்மானிக்கக் கூடியதாக உருவாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் நிலவரம்

இந்தியாவைக் எடுத்துக்கொண்டால், பொருளாதார ரீதியாகவும், சமூகப் பிரச்சினை ரீதியாகவும் கடந்த ஆண்டு மிக மோசமான காலகட்டமாக அமைந்திருக்கிறது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவின்றி, பணமின்றி, இருப்பிடமின்றி தங்கள் சொந்த ஊர்களை நோக்கி கால்நடையாகவே நடந்த சென்ற நிகழ்வு இந்தியாவின் வரலாற்றுக் கறையாக மாறி இருக்கிறது. மிக மோசமான பொருளாதார சரிவு, வேலையிழப்பு, தொழில் முடக்கம் என பொருளாதார ரீதியாக மிக நெருக்கடியான சூழலுக்குள் இந்தியா நுழைந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது. இரண்டாம் காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் சரிவடைந்திருக்கிறது.

தற்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான நெருக்கடி வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது. கரோனாவுக்கு முன்பே இந்தியாவில் வேலையின்மை உச்சத்தில் இருந்தது. கரோனாவுக்குப் பிறகு நிலைமை இன்னும் தீவிரமடைந்துள்ளது. நிறுவனங்கள் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பில் இறங்கியுள்ளன. வேலையிழந்தவர்கள், புதிதாக படிப்பு முடித்தவர்கள் வேலை பெறுவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோல், ‘வீட்டிலிருந்து பணி புரிதல்’ வேலை சார்ந்த கட்டமைப்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. ப்ரீலான்ஸ் வேலை வாய்ப்புகளே இனி அதிக அளவில் உருவாகும் என்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

வேலையின்மை அதிகரித்து இருப்பதனால் குறைந்த ஊதியத்துக்கு ஆட்கள் பணியமர்த்துப்படும் அவலமும் நிகழும். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. தங்கள் தொழிலை டிஜிட்டலுக்கு மாற்றாதவர்கள் தற்போதைய சூழலில் தாக்குப் பிடிப்பது மிக கடினம் என்றாகி இருக்கிறது. இணைய வழி வணிகம் பெருக்கம் அடைந்திருக்கிறது. கல்வி, மருத்துவம் என அடிப்படையான பலவும் இணையம் வழியிலானதாக மாறி இருக்கின்றன. இந்தச் சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை கையாளும் திறன் கொண்ட நபர்கள் வேலைச் சந்தையில் தேவைப்படுகின்றனர்.

இவை பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு சார்ந்த சவால்கள். இவற்றின் மைய தளத்தில் இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று அதன் சரிசமமற்ற வளர்ச்சி. இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து தொழிற் செயல்பாடுகளும் ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகரையும், அதன் ஒரு சில முக்கிய நகரங்களையும் மட்டுமே மையப்படுத்தி நிகழ்கின்றன. இதனால் அதிகாரம் ஒரு இடத்தில் குவிக்கப்படுகிறது. அந்த நகரங்கள் மட்டும் வளர்ச்சியை எட்டுகின்றன. பிற சிறு நகரங்கள் தேங்கி விடுகின்றன.

இந்நிலையில் தற்போது அந்தந்த சிறு நகரங்கள், கிராமங்களை முக்கியத்துவம் கொண்டதாக மாற்ற வேண்டும். இதுவே இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதார ரீதியான ஏற்றத் தாழ்வுகளை குறைந்தபட்சமாகவேனும் ஈடுசெய்யும். ‘வீட்டிலிருந்து பணிபுரிதல்’ வழியே அதற்கான சாத்தியங்கள் தற்போது உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் நகரக் கட்டமைப்புச் சார்ந்து புதிய திட்டங்களை வகுக்க வேண்டிய தருணத்தில் இந்தியா இருக்கிறது.

சமூக மறுகட்டமைப்புக்கான தருணம்

அனைத்துக்கும் மேலாக, இந்தியா வளர்ச்சி குறித்த அதன் பார்வையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. இந்திய மக்களில் 30 சதவீதத்தினர் எவ்வித அடிப்படை மருத்துவ வசதிகளையும் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி செலவிடும் இந்தியா, அதில் கால் பங்கைக்கூட மருத்துவத்துக்கு செலவிடுவதில்லை. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.69,000 கோடி அளவிலேயே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மொத்த ஜிடிபியில் 0.3 சதவீதம் மட்டுமே.

10,000 நபர்களுக்கு 6 மருத்துவர்கள் என்ற ரீதியிலேயே இந்தியாவில் மருத்துவர்கள் விகிதாச்சாரம் உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு ஒரு அரசு மருத்துவமனை என்ற வீதத்திலும் 2,046 பேருக்கு ஒரு படுக்கை என்ற வீதத்திலுமே இங்கு மருத்துவ வசதி உள்ளது. விளைவாக, மருத்துவ செலவினங்களில் 65சதவீதம் அளவில் மக்கள் தங்கள் சொந்தப் பணத்தையே செலவிடுகின்றனர். ஆனால், இந்தியாவின் ஆதாரப் பிரச்சினை வேலைவாய்ப்பு சார்ந்தோ, நகரக் கட்டமைப்பு சார்ந்தோ, மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு சார்ந்தோ மட்டும் இல்லை.

இந்தியா என்ற நாடு சமத்துவமின்மையால் கட்டமைக்கபட்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினப் பாகுபாடு என்ற சமூக ரீதியான ஏற்றத் தாழ்வுகள் சரி செய்யப்படாமல் எந்த வளர்ச்சியும் இங்கு சாத்தியமில்லை. அந்த வகையில் இந்தியா பொருளாதாரக் கட்டமைப்பை மட்டுமல்ல, சமூகக் கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கிறது.


இந்தியாபுதிய ஆண்டுபேரழிவுகள்மாற்றங்கள்இருவகை மதிப்புஇந்தியாவின் நிலவரம்பொருளாதாரம்சமூகப் பிரச்சினைபொருளாதார வளர்ச்சிவேலைவாய்ப்புசமூக மறுகட்டமைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x