

இந்தியாவின் முக்கியமான பெரு நிறுவனங்களில் ஒன்று ஆதித்யா பிர்லா குழுமம். அந்த குழுமத்தின் தற்போதைய தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நான்காவது தலைமுறையை சேர்ந்தவராக இருந்தாலும், குழுமத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய 28 வயதில் குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற இவருக்கு தற்போது வயது 48 ஆகிறது. இவரது 20 வருட தொழில் பயணத்தில் சாதனைகள் சில...
$ 1995-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இவரது தந்தை மரணம் அடைந்தார். அப்போதே குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
$ இவர் பொறுப்பேற்ற போது பிர்லா குழும மூத்த அதிகாரிகளின் இவரை விட வயதில் இரு மடங்கு பெரியவர்கள். அவர்களை எப்படி சமாளிப்பார்? குழுமத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் இவர் பொறுப் பேற்றபோது 200 கோடி டாலராக இருந்த குழும வருமானம் தற்போது 4,100 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. அப்போது எழுந்த சந்தேகங்களுக்கு இந்த 20 ஆண்டு வளர்ச்சியையே பதிலாக்கியவர்.
$ உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி வந்த நிறுவனம் இவர் பொறுப்புக்கு வந்த பிறகு பல துறைகளில் இறங்கியது. வங்கி, தொலைத்தொடர்பு, சில்லரை வர்த்தகம், காப்பீடு, மியூச்சுவல் பண்ட், கார்பன் பிளாக், மின்சாரம், ஜவுளி, சிமென்ட் என பல துறைகளிலும் செயல்படுகிறது.
$ பிர்லா குழுமம் 36 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. குழுமத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது.
$ விற்பனையை உயர்த்துவதன் மூலம் வளர்ச்சியடைவது ஒருவழி, நிறுவனங்களை இணைப்பதன் மூலம் வளர்ச்சி அடைவது இன்னொரு வழி. இவர் இரண்டாவது வழிக்கு முன்னுரிமை கொடுத்தவர். இதுவரை 37 நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறார். அதிக நிறுவனங்களை கையகப்படுத்திய இந்திய பிசினஸ்மேன் என பெயர் எடுத்தவர்.
$ கனடா, சீனா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, எகிப்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்கியுள்ளார்.
சிமென்ட்
எல் அண்ட் டி நிறுவனத்துக்கு சொந்தமான சிமென்ட் நிறுவனத்தில் அம்பானி குழுமத்துக்கு 10 சதவீத பங்கு இருந்தது. அந்த நிறுவனத்தை எல் அண்ட் டி விற்க திட்டமிட்டது. தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் பிரச்சினை என பல காரணங்களால் அம்பானி குழுமம் வாங்கவில்லை. ஆனால் அந்த 10 சதவீத பங்குகளை வாங்கியதோடு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதனை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனமாகவும் மாற்றினார். தற்போது இந்தியாவில் அதிக சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனம் இது.
ஆன்லைன்
தற்போது இ-காமர்ஸ் துறையிலும் ஈடுபட முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவின் முன்னணி பிராண்டுகள் இந்நிறுவனத்தின் வசம் இருப்பதால் நேரடியாக விற்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
டெலிகாம்
ஏடி அண்ட் டி நிறுவனத்தோடு இணைந்து தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடங்கினார். பிறகு டாடா நிறுவனமும் இதில் இணைந்தது. ஆனால் இந்த நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் மூவரும் வெளியேற நினைத்தனர். ஆனால் இந்த தொழில் எதிர்காலத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது என்று கருதி மற்ற இருவரின் பங்குகளை வாங்கினார். நிறுவனத்தின் பெயரை ஐடியா என்று மாற்றினார். 2008ம் ஆண்டு ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனத்தை கையகப்படுத்தினார். தற்போது இந்தியாவில் மூன்றாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனம் இது.
அலுமினியம்
நோவெலிஸ் (Novelis) நிறுவனத்தை 600 கோடி டாலர் கொடுத்து பிர்லா இணைத்தார். குழுமத்தின் மிகப்பெரிய இணைப்பு இது. நோவெலிஸ் நிறுவனம் வேறு சில நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் சரியில்லை, தவிர அதிக கடன் இருந்ததால் குமார் மங்கலம் பிர்லா நியமனம் செய்த குழு இந்த இணைப்பு வேண்டாம் என்று பரிந்துரை செய்தது. ஆனாலும் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி லாபகரமாக மாற்றிக் காட்டினார்.
சர்ச்சை
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு பிரச்சினையில் பிர்லா மற்றும் ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இவரது பெயர் உள்ளது.