Published : 28 Dec 2020 10:03 AM
Last Updated : 28 Dec 2020 10:03 AM

கரோனா காலத்தில் உலகம் தட்டைதான்!

satheeshkrishnamurthy@gmail.com

வரலாறு காணாத வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிய 2020 ஒரு வழியாக முடியப் போகிறது. காண்டாமிருகம் சைஸிற்கு ஒரு பேண்டமிக் உலகில் உள்ள அனைவரையும் வீட்டில் கிடத்தி ஏற்கனவே மற்றவரிடமிருந்து விலகி நிற்கும் நம்மை மொத்தமாய் பிரித்து வாழ பழக்கியிருக்கிறது.

`இந்த மாதிரி பேண்டமிக்கை புக்குல பார்த்திருப்பீங்க, டீவில பார்த்திருப்பீங்க, ஏன் சினிமால கூட பார்த்திருப்பீங்க. கம்பீரமா உலகம் பூரா நடந்து பார்த்திருக்கீங்களா? அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு டா. பாக்கறியா பாக்கறியா’ என்று சீனாக்காரன் ஊரெல்லாம் பார்ஸல் செய்து படாதபாடு படுத்திவிட்டான். போதாக் குறைக்கு லடாக் என்னுது என்று குடாக்கு போல் நுழைய அவனை நையப்புடைத்து இல்லாத மூக்கை இழுத்து பிடித்து அறுக்கவேண்டியிருக்கிறது.

2020 வருடத்தின் ஒரே நல்ல காரியம் அது சில நாட்களில் முடியப்போகிறது என்பதுதான். பிறக்கும் வருடத்திலும் கரோனா தீட்டு தொடரும் என்றாலும் புது வருடம், புது துவக்கமாய் இருக்கும் என்று நம்புவோம். பிறக்கபோவதாவது நல்லதாய் இருக்கட்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு வருடமும் ஹாப்பி நியூ இயர்பாடுகிறோம். பழக்கத்தை மாற்றவேண்டாம். கூடவே இந்த ஆண்டு பட்டுக்கொண்ட படுத்தல்களிலிருந்து பாடம் பயிலலாம். அனுபவித்த சிரமத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

இப்படி ஒரு பேண்டமிக் வந்து தொலைக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் இது போல் எப்பொழுதும் எந்த ரூபத்திலும் பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்து ``சினாரியோ பிளானிங்’’ செய்து வைத்திருக்கலாம். அட்லீஸ்ட் இனியாவது செய்யலாம். ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் போலவே இருக்கும் என்றே வாழ பழகிவிட்டோம். அதற்காக சதா சர்வ காலமும் அடுத்த பேண்டமிக் பயத்தில் வாழத் தேவையில்லை. எந்நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது போன்ற நேரங்களில் என்ன செய்வது, எப்படி செய்வது என்று திட்டம் தீட்டி அதை செயல்படுத்த தேவையானதை தயாராய் வைத்திருப்பது தான் சினாரியோ பிளானிங்.

இதை Plan B என்றும் கூறலாம். கயிறு மேல் நடப்பவன் கீழே விழுந்தாலும் கபாலத்தில் காயம் பட்டு கைலாசம் போகாமலிருக்க கீழே வலை விரித்து நடப்பது போல! எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் என்று எதிர்பார்த்து தொழில் தடைபடாமல் தொடர்ந்து நடத்த கையில் ரொக்கமாய் கொஞ்சம் பணம் வைத்திருப்பது தொழிலுக்கு நலம் என்பதை 2020 உணர்த்தியது. ``கேஷ் இஸ் கிங்’’ என்பார்கள். தொடர்ந்து நடத்த கையில் காசு இல்லை யென்பதால்தான் தொழில் சரிகிறது. இனியாவது இதற்கொரு வழி செய்யுங்கள். எடுத்தவுடன் லம்பாக ஒரு அமௌண்ட்டை ஒதுக்கி வைப்பது சிரமம் தான்.

பிள்ளையார் சுழி போல் முதலில் ஒரு மாதம் வருவாய் இல்லாவிட்டாலும் பிசினஸ் நடத்தத் தேவையான பணத்தை ஒதுக்கி வையுங்கள். பிறகு மெதுவாக மூன்று மாதம் தொழில் நடத்தத் தேவையான பணம் ஒதுக்குங்கள். அடுத்து ஆறு, ஒன்பது என்று ஒரு வருடம் தொழிலை வருவாய் இன்றி நடத்த ஓவர்ஹெட்ஸ் இன்ஷ்யூரன்ஸ் போல் பணம் சேர்த்து வையுங்கள். கரோனா போல் இன்னொரு வில்லன் வந்தாலும் தருமி போல் புலம்பாமல் தொழிலைத் தொந்தரவில்லாமல் தொடர்ந்து நடத்த முடியும்.

எதிர்பார்ப்பை விட அதிகம் தாருங்கள்

லாக்டவுன் பல தொழில்களை நாக்டவுன் செய்ய, சோஷியல் டிஸ்டன்சிங் பிசினஸை கஸ்டமரிடமிருந்து தள்ளி வைத்துவிட்டது. இத்தனை இருந்தும் சில பிராண்டுகள் மட்டும் அமோகமாய் வளர்ந்து சில கடைகள் மட்டும் சீரும் சிறப்புமாய் செழித்தன. இதற்கு காரணம் அதன் முதலாளிகளுக்கு சுக்கிர திசையோ அவர்கள் ஜாதகத்தில் குரு சரியாய் பெயர்ந்ததாலோ அல்ல.

வாடிக்கையாளர்கள்தான் தொழிலின் ஜாதகத்தை கணிக்கும் கிரகங்கள் என்பதை புரிந்து அவர்களது தேவையை அவர்களுக்குத் தேவைப்பட்டதை விட அதிகம் தந்தவர்கள் சேதாரமின்றி செழித்தார்கள். இன்னமும் செழிப்பார்கள். உங்கள் பொருள் வாடிக்கையாளர் தேவையை மற்றவரை விட பெட்டராய் பூர்த்தி செய்கிறதா? ‘செய்கிறது என்றால் கரோனா என்ன, கலியுக பிரளயமே வந்தாலும் உங்கள் பிராண்டை ஒன்றும் செய்யாது. கரோனா காலத்திலும் கலக்கலாய் கல்லா கட்டிய அத்தனை பிராண்டுகளும் இதற்கு சாட்சி.

வாடிக்கையாளரை வெறுமனே திருப்தி செய்து ஜெயிப்பது 2020ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. மார்க்கெட்டிங் அதையும் தாண்டி புனிதமானது. ‘வாடிக்கையாளர் டிலைட்’ தான் புதிய மார்க்கெட்டிங் சமச்சீர் கல்விமுறை. அதற்கு என்ன செய்வது, தொழிலில் என்ன மாற்றங்கள் தேவை என்பதை உங்கள் மார்க்கெட்டிங் டீமுடன் சேர்ந்து பேசுங்கள். மார்க்கெட்டிங்கை மாற்றான் தாய் போல் பார்க்கும் தொழில் இனி வழுக்கி விழுந்து வழக்கொழிந்து போகும். அதைச் செய்ய கரோனா தேவையில்லை. காக்கா குருவி போதும்!

எங்கிருந்தும் வேலை செய்யுங்கள்

கரோனா கைங்கர்யத்தில் கண்ட இடமெல்லாம் நம் ஆபீஸ் ரூமாய் மாறின. டைனிங் டேபிள் ஆபீஸ் டேபிள் ஆனதென்றால் மொட்டை மாடி மீட்டிங் ரூம் ஆனது. இருந்தும் பெரியதாக உங்கள் பணி தடைப்படவில்லை என்பதை கவனித்தீர்களா. ``வொர்க் ஃபிரம் ஹோம்’’- தான் புதிய நார்மல் என்பதை உணருங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஊழியர்கள் பலருக்கும் அது பொருந்தும்படி தொழிலில் மாற்றங்கள் செய்யுங்கள். ‘பெரிய நிறுவனங்களே தங்கள் சொந்த பில்டிங்கை வாடகைக்கு விட்டு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்திருக்கிறது.

ஆபிசிலேயே சரியாய் வேலை செய்யமாட்டார்கள், இந்த லட்சணத்தில் வீட்டிலிருந்து என்னத்தை கிழிப்பார்கள் என்று வியாக்கியானம் பேசாதீர்கள். எல்லா பணிகளையும் வீட்டிலிருந்து செய்ய முடியாதுதான். முடிந்தவரை தொழிலின் வொர்க் ஃபுளோவை வொர்க் ஃபிரம் ஹோமிற்கு ஏற்றபடி வடிவமையுங்கள். மாற மறுப்பவர்களை சானிடைசர் போட்டு சப்ஜாடாய் கழுவி அதுவும் போறாதென்றால் சீட்டை கிழித்து அனுப்புங்க.

எல்லாவற்றையும் டிஜிடலாக்குங்கள்

பிளாக் அண்ட் ஒயிட் டீவியை கலர் டீவி வந்த மாத்திரம் மாற்றி, பின் எல்இடி, எல்சிடி என்று தாவி, அதை விட பெட்டர் என்று பிளாஸ்மா டீவிக்கு எகிறி இன்று ஸ்மார்ட் டீவி, ஹோம் தியேட்டர் வாங்கியிருக்கிறார்கள். ஷேமம். இத்தனை செய்தவர்களுக்கு தங்கள் தொழிலையும் டிஜிட்டலாக்கவேண்டும் என்று தோன்றவில்லை. இன்னமும் அனலாகை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். லெட்ஜர், பேப்பர், பிரிண்ட் அவுட் என்று ப்ளாக் அண்ட் ஒயிட்டில் தொழில் செய்பவர்கள் கரோனா இல்லாமலே காணாமல் போவர்.

ஆன்லைன் கம்பெனிகளும் பெரிய நிறுவனங்களும் தங்கள் தொழிலை டிஜிடலாக்கி அது தரும் எபிஷியன்சி மூலம் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் நிறைந்த சேவை தருகிறார்கள். அவர்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தாத தொழில்கள் சிட்டிங் டக்ஸ். சௌகரியாய் சுட்டு தள்ள முடிகிறது. 2021ல் உங்கள் தொழிலை அஜைலாக்குங்கள். செல்போன் மூலம் தொழிலின் சகலத்தையும் கட்டுப்படுத்தும் ‘ஆர்டர் ஈசி’, ‘கோ டெலிவர்’ போன்ற மொபைல் அப்ளிகேஷன்ஸ் இருந்தும் அதை பயன்படுத்தாத தொழில்களை எந்த வேக்சீனும் காப்பாற்றாது.

எவரும் ஊரே யாவரும் கேளிர்

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உலகமும் உலக மக்களும் எந்த அளவு பின்னி பிணைந்திருக்கிறோம் என்பதை கரோனா மீண்டும் ஒரு முறை படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறது. ‘உலகம் உருண்டையல்ல, தட்டை’ என்று ‘தாமஸ் ஃப்ரீட்மென்’ கூறியது உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட ஸ்பேஷிஷ் பிளேக் முதல் உலகப் போர்கள் வரை, இண்டர்நெட் தாக்கம் முதல் கரோனா பிராப்ளம் வரை உலகின் ஒரு மூளையில் நடப்பது மறுமுனை வரை பரவும் என்பது பட்டவர்தனமாகியிருக்கிறது.

அமெரிக்க காலில் அடிபட்டால் ஆசிய கழுத்தில் நெரி கட்டுகிறது. ஐரோப்பாவை அடித்தால் ஆஸ்திரேலியா அழுகிறது. உலகம் சைக்கிள் ஸ்டாண்ட் போல் ஆகிவிட்டது. ஒரு சைக்கிளை தள்ளினால் கடைசி சைக்கிள் வரை விழுகிறது. ஆத்மநிர்பார் அவசியம்தான். அதற்காக உலகமயமாகியிருக்கும் வர்த்தகத்தை ஒதுக்குவது சிரமம் என்பதை உணர்வது உசிதம். அது சரி, ’யாதும் ஊரே’ என்று தானே சொல்வார்கள், நீ ஏன் ’எவரும் ஊரே’ என்கிறாய் என்று நெற்றிக்கண் திறப்பவர்களுக்கு. ’எ’ என்று துவங்கும் வார்த்தைகளாக பத்தி பிரித்து எழுதி வந்ததால் அதே ஃபுளோவை மெயிண்டெயின் செய்தேன். அது உங்கள் கண்ணை உறுத்துகிறதாக்கும். 2021ல் இருந்தாவது இது போல் என் எழுத்தில் குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள்! விடியல் இல்லாத இரவில்லை.

விடியும் என்ற நம்பிக்கையும் தொழில் விரியும் என்ற கனவும் இருந்தால் எத்தகைய இருளும் அகலும். பட்டுக்கொண்டதிலிருந்து பாடமும் சுட்டுக்
கொண்டதிலிருந்து படிப்பினையும் பெற்று 2021ல் தொழில் புரியுங்கள். செய்த தவறை திருத்திக்கொள்ளாதவன் அதே தவறை மீண்டும் செய்ய விதிக்கப்படுவான் என்றார் ஸ்பானிஷ் அறிஞர் ’ஜார்ஜ் சண்டாயனா’. அசுர வேகத்தில் காலம் கடக்கிறது. வருங்காலம் நம்மை தாண்டி போய் வெகு காலம் ஆகிவிட்டது. சரியாய் படிக்காமல் சென்று எழுதும் பரிட்சை போல் உங்கள் தொழில் ஆகாமல் இருப்பது இனி உங்கள் கையில்தான் இருக்கிறது. புதிய வருடத்தில் பழைய தவறுகளைக் களைந்து புதிய வாழ்க்கையும் புத்தொளி வீசும் வியாபாரமும் பிறக்க பிள்ளையார் சுழி போட்டு 2021-ஐ வரவேற்போம்.

ஹாப்பி நியூ இயர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x