

riyas.ma@hindutamil.co.in
ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சிக்கலில் இருக்கிறது. தனக்குப் போட்டியாக வளரும் நிறுவனங்களை விதிமுறைக்குப் புறம்பாக விலைக்கு வாங்கி விடுவதாகவும், அதன் வழியே தன்னை பெரும் சக்தியாக நிலைநிறுத்தி வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமெரிக்க ஒன்றிய வர்த்தக ஆணையமும், அமெரிக்காவிலுள்ள 46 மாகாணங்களும் கடந்த வாரம் ஃபேஸ்புக் மீது தனித் தனியாக வழக்குத் தொடுத்துள்ளன. ஒரு வகையில் இந்த வழக்குகள் சமூக வலைதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் போக்கை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் போட்டியாக வளர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் தற்போது ஃபேஸ்புக்கின் கீழ் சென்றுவிட்டன. 2012-ம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 1 பில்லியன் டாலருக்கும், 2014-ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கும் ஃபேஸ்புக் வாங்கியது. அவை தவிர கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் ஒனாவோ (150 மில்லியன் டாலர்), ஆக்குலஸ் வீஆர் (2 பில்லியன் டாலர்), லைவ்ரயில் (500 மில்லியன் டாலர்), சிடிஆர்எல் லேப்ஸ் (1 பில்லியன் டாலர்), கஸ்டோமர் (1 பில்லியன் டாலர்) போன்ற நிறுவனங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
இவ்வாறு தனக்கு போட்டியாக வளரும் நிறுவனங்களை எல்லாம் தனக்கு கீழ் கொண்டு வரும் போக்கை அனுமதிக்கக்கூடாது. அது எதிர்காலத்தில் ஆபத்தாக முடியும் என்ற நிலைப்பாட்டில்தான் தற்போதைய வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. இவ்வழக்குகளில் ஃபேஸ்புக் தோற்றுவிட்டால் இன்ஸ்டாகிராமும், வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனி நிறுவனங்களாக மாற்றப்படுவதற்கான சாத்தியமுள்ளது. தற்போது ஃபேஸ்புக் எதிர்கொண்டிருப்பது போலான ஒரு தருணத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக எதிர்கொண்டது. இண்டர்நெட் அறிமுகத்தைத் தொடர்ந்து அதற்கான செயலிகள் உருவாக்கத்
தில் பல நிறுவனங்கள் கவனம் செலுத்திவந்தன.
ஆனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘இண்டர்நெட் எக்ஸ்புளோரர்’ செயலியை அதன் விண்டோஸ் இயங்குதளத்தோடு இணைத்து வெளியிட்டு இண்டர்நெட் செயலி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அமெரிக்க நீதித் துறை மற்றும் அமெரிக்காவின் 20 மாகாணங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் போக்குக்கு எதிராக 1998-ம் ஆண்டு வழக்குத் தொடுத்தன. அதன் பிறகே கூகுள் குரோம் போன்ற செயலிகள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. இருப்பத்தியோரம் நூற்றாண்டை செயற்கைத் தொழில்நுட்பங்களின் காலகட்டம் என்று சொல்லலாம். உலகின் போக்கை தீர்மானிப்பதில் செயற்கை தொழில் நுட்பங்களின் ஆதிக்கம் அதிகரித்து இருக்கிறது. மிகவும் குறிப்பாக கூகுள், பேஸ்புக், ட்விட்டர், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களே உலகை ஆட்டுவிக்கக் கூடிய சக்தியாக உருப்பெற்று இருக்கின்றன.
அதன் நீட்சியாகவே, ‘தகவல்களை’ புதிய எண்ணெய் வளம் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு தகவல்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. ‘ஸ்டார்ட் அப்’தொடங்குவது முதல் பிரதமர் தேர்தலில் வெற்றி பெறுவது வரையில் தகவல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. தகவல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே உலகின் ஆதிக்க சக்தியாக மாறக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்தச் சூழலில் தகவல் பாதுகாப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உலக நாடுகள் தகவல் பாதுகாப்பு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் மட்டுமல்ல கூகுள், டிக்டாக், அமேசான் போன்ற நிறுவனங்களும் இத்தகையே சட்ட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
கூகுள் நிறுவனம் பயனாளிகளின் தகவல்களை விதிகளுக்குப் புறம்பாக பயன்படுத்துகிறது என்று கடந்த அக்டோபர் மாதத்தில் அமெரிக்க நீதித் துறையும், அமெரிக்காவின் 11 மாகாணங்களும் வழக்குத் தொடர்ந்தன. அதுபோல, தகவல்களை கையாளுவதில் விதிக்குப் புறம்பாக நடந்துகொண்டதாக கடந்த வாரத்தில் கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசின் தகவல் கட்டுபாட்டு அமைப்பு 120 மில்லியன் டாலர் அபராதமும், அமேசான் நிறுவனம் மீது 35 மில்லியன் டாலர் அபராதமும் விதித்துள்ளது. தகவல் பாதுகாப்பைக் காரணம் காட்டியே இந்திய அரசு ‘டிக் டாக்’ செயலியைத் தடை செய்தது.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர் போன்றவை நமக்கு இலவசமாக சேவை வழங்குகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தெரிவுகள், தேடல்கள்தான் நாம் அவர்களுக்கு அளிக்கும் விலை. அதாவது நாம் எந்தப் பாலினம், எந்த பிராந்தியத்தைச் சார்ந்தவர் என்பது முதல் நாம் எதைத் தேடுகிறோம், ஏன் தேடுகிறோம் என்பது வரைக்குமான தகவல்கள்தான் அந்நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான மூலதனம். ஒரு பயனாளியாக நாம் நமது தகவல் தொடர்பாக எப்போது கவனத்துடன் இருந்துகொண்டிருக்க முடியாது. இத்தகையச் சூழலில் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகிறது.