

riyas.ma@hindutamil.co.in
கரோனா காலகட்டத்தில் கரோனா மட்டுமல்ல, ஏனைய நோய்களும் அதன் தீவிரத்தன்மையை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. யாரிடம் பேசினாலும் அதீதத் தலைவலி, அஜீரணம், மலச் சிக்கல், ஆஸ்துமா என அவர்களது உள்ளார்ந்த நோய்கள் தற்போது தீவிரமாக வெளிப்படுவதாகக் கூறுகிறார்கள். கரோனா காலகட்டம் உடல் நலம் குறித்த விழிப்புணர்வையும், அச்சத்தையும் ஒரு சேர ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்.
பலர் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சரிவிகித உணவு என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகர்ந்துவருவதையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. காப்பீட்டுப் பிரிவுகளில், இதுவரையில் குறைவான நபர்களே மருத்துவக் காப்பீடுகள் செய்துவந்தனர். ஆனால், தற்போது மருத்துவ காப்பீடுகள் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை முந்தயை ஆண்டோடு ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
தனியார் மருத்துவக் காப்பீடுகள் பெரும்பாலும், பெரிய நிறுவனங்களால் அதன் பணியாளர்களுக்காக எடுக்கப்படுபவை. வெகு சொற்பமாகவே தனி நபர்கள் மருத்துவக் காப்பீடுகளை எடுக்கின்றனர். ஆனால், கரோனா பரவல் ஆரம்பித்தப் பிறகு நிலைமை மாறியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மருத்துவ காப்பீடுகளில் தனிநபர் காப்பீடு 34 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அதேசமயம், முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டே கரோனா காலகட்டதில் மருத்துவ காப்பீடு அதிகரித்து இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால், யதார்தத்தில் மருத்துவக் காப்பீடு சொற்ப மக்களையே சென்றடைந்திருக்கிறது. நகர்புறங்களில் 81 சதவீத மக்களும், கிராமப் புறங்களில் 86 சதவீத மக்களும் எந்தவித மருத்துவக் காப்பீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்கிறது தேசிய புள்ளிவிவர அலுவலகம்.
இந்த நிலையில்தான் மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி விமர்சனத்துக்குரியதாக மாறுகிறது. மருத்துவ காப்பீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கொண்டுவரப்படுவதற்கு முன்பு வரையில், சேவை வரி 15 சதவீதமாக இருந்தது, ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டப் பிறகு வரி 18 சதவீதமாக உயர்ந்தது. இது தவிர்த்து, தற்போதைய புதிய நடைமுறைகளால் மருத்துவக் காப்பீடுகளுக்கான பிரீமியமும் அதிகரித்து இருக்கிறது.
மருத்துவத்துக்கான செலவீனம் எவரையும் முடக்கிப் போடக்கூடிய ஒன்று. இந்திய மக்கள் தங்கள் வருமானத்தில் 65 சதவீதத்தை மருத்துவத்துக்காக செலவிடுகிறார்கள். இன்றும் மாதம் 6000 ரூபாய் ஊதியம் பெற்று குடும்பத்தை நடத்திச் செல்பவர்கள், அவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு தீவிர உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? நடுத்தர வர்க்கத்தினர் தங்களது மொத்த சேமிப்பையும் இழந்து, கடன் பெற்று, வீட்டையும் விற்று மருத்துவத்துவத்துக்கு செலவிட்டு வாழ்வின் மீதப் பகுதியை வாங்கிய கடனை அடைப்பதற்கு செலவிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.
ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் பொருட்டு, மத்திய அரசு 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற மருத்துவக் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டுவந்தது. அத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 12.6 கோடி மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் விநியோகிக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், மீதமுள்ள 100 கோடி மக்களுக்கு என்ன செய்வது?
இந்தியாவில், முழுமையான அளவில் தரமான இலவச மருத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. விளைவாக, தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர வேண்டியச் சூழலிலே மக்கள் உள்ளனர். எனில், குறைந்தபட்சமாக அவர்களுக்கு குறைந்தத் தொகையில் முழுமையான காப்பீட்டு வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், அரசோ வரியை ஏற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் மருத்துவக் காப்பீட்டை நோக்கி நகர்ந்து வரும் தற்போதைய சூழலில், புதிய செயல்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டை அனைவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அரசு உளப்பூர்வமாக எண்ணும்பட்சத்தில் அது மருத்துவக் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.