ஷாப்பிங் பிரியர்களை வியப்பில் ஆழ்த்திய ஹெச் அண்ட் எம்
கடைக்கு போய் துணி வாங்க ஏது நேரம்? இருக்கவே இருக்கு ஆன்லைன். ஒரு கிளிக், வீடு தேடு பொருள் வந்துவிடும் என்று சொல்கிற ரகமா நீங்கள். உங்களுக்காகவே இந்த கட்டுரை.
சர்வதேச அளவில் முக்கியமான பேஷன் நிறுவனம் ஹெச் அண்ட் எம் (Hennes and Mauritz). இது ஸ்வீடன் நாட்டு நிறுவனமாகும். 58 நாடுகளில் 3,600க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் உள்ளன. கடந்த வாரம் டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவால்க் மாலில் தனது முதல் இந்திய ஷோரூமை இந்த நிறுவனம் திறந்தது. முதலில் வருபவர்களுக்கு சலுகைகள் வழங்குவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதல் நபருக்கு 15,000 ரூபாய் பரிசும், இரண்டாம் நபருக்கு 10,000 ரூபாய் பரிசும், மூன்றாம் நபருக்கு 7,500 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டன. தவிர அடுத்த 1000 நபர்களுக்கு tote bag வழங்கவும் நிர்வாகம் முடிவெடுத்தது. அக்டோபர் 2-ம் தேதி திறப்பு விழா என்றாலும், அக்டோபர் 1-ம் தேதியே அங்கு கூட்டம் வர தொடங்கியது. கடையை திறக்கும்போது 2,500க்கும் மேற்பட்டவர்கள் வெளியே இருந்தனர்.
முதலில் அபினய் என்பவர் 31 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ஆளாக ஷாப்பிங் செய்தார். இவர் ஒரு சார்ட்டட் அக்கவுடன்ட் என்பது கவனிக்கத்தக்கது. இரண்டாவதாக வந்தது ஒரு பெண்.
வரிசையில் காத்திருந்த அத்தனை நபர்களுக்கும் உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை நிர்வாகம் கொடுத்தது. தவிர இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை 20 நிமிடம் வரை வரிசையில் இருந்து வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. 20 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் வரிசையில் இருந்து நீக்கப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த 35க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதுதவிர அவர்களுக்கு பொழுது போக்க நடன நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த ஷோரூம் திறப்பு விழாவுக்கு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள், ரண்வீர் சிங், ஜாக்குலின் பெர்னான்டஸ், சோஹா அலிகான், தமன்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதல் நாளில் ரூ.1.75 கோடி
25,000 சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த ஷோரூம், முதல் நாளில் 11 மணிநேரம் மட்டுமே திறக்கப்பட்டது. ஒரே நாளில் சுமார் 1.75 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்திருக்கிறது. குறைந்தபட்சம் 149 ரூபாய் முதல் அதிகபட்சம் 18,999 வரையிலான பேஷன் வகைகள் விற்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் அதிக நபர்கள் அந்த மாலுக்கு படை எடுத்ததால், அந்த மாலில் இருந்த மற்ற அனைத்து கடைகளிலும் விற்பனை நன்றாக இருந்ததாக அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஹெச் அண்ட் எம் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜாரா, கேப் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து விற்பனை செய்கிறது. ஆனால் ஹெச் அண்ட் எம் நேரடியாக களம் இறங்கி இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே இதற்காக பணிகளை ஹெச் அண்ட் எம் செய்தது. (ஒரே பிராண்ட் பிரிவில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது)
கடந்த வருடம் இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவில் கால் பதித்த போது முதல் நாள் 15,000 நபர்கள் கடைக்கு வருகை தந்திருக்கின்றனர்.
விரிவாக்கம்
இந்த வருட இறுதிக்குள் டெல்லியில் மேலும் ஒரு ஷோரூமையும், பெங்களூருவில் ஒரு ஷோரூமையும் அமைக்க ஹெச் அண்ட் எம் திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 ஷோரூம் அமைக்க 700 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தியேட்டர், கோயில்களில் கூட்டம் இருப்பதை பார்த்திருந்த நமக்கு இந்த கூட்டம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதை பார்க்கும் போது வழக்கமான கடைகளுக்கு இன்னும் பல வருடங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது.
உளவியல்தான் வியாபாரத்தை தீர்மானிக்கிறது என்பதை ஹெச் அண்ட் எம் சரியாக புரிந்துவைத்திருக்கிறது.
