இது உங்கள் கப்பல்

இது உங்கள் கப்பல்
Updated on
3 min read

somasmen@gmail.com

இது நம்முடைய கப்பல் என்பதை ஒவ்வொரு கப்பல் ஊழியர்களும் உணர்ந்துகொண்டால் பயணம் எவ்வாறு சிறக்குமோ அதுபோலத்தான் ஒவ்வொரு ஊழியர்களும் இது நமது நிறுவனம் என்பதை உணர வைக்கும் புத்தகம்தான் "IT'S YOUR SHIP". நாம் பணிபுரியும் நிறுவனங்களும், நடத்துகின்ற வர்த்தகமும் கப்பல்களுக்கு சமம்தான்.

பணியில் குறைபாடுகள் கப்பலை எவ்வாறு மூழ்கடிக்கச் செய்யுமோ அதுபோலத்தான் நிறுவனங்களும். கடற்படையில் சிறந்து விளங்கிய பென்ஃபோல்ட் கப்பலில் மேற்கொண்ட மேலாண்மை உத்திகளைக் கப்பல் கேப்டன் அப்ரஷாஃப் " IT'S YOUR SHIP என்ற புத்தகத்தில் தந்திருக்கிறார் நிறுவனங்களும் வணிகர்களும் தங்களது ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் பல்வேறு சவால்களை சந்திக்கின்றன.

பயிற்சி பெற்ற ஊழியர்கள் விலகும்போது நிறுவனம் உற்பத்தி திறனை இழந்து கூடுதல் பயிற்சி மற்றும் ஆள்சேர்ப்பு செலவுகளை செய்கிறது. கேப்டன் டி. மைக்கேல் அப்ரஷாஃப் ஊழியர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வண்ணம் அவர்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதை இந்த புத்தகத்தில் விளக்குகிறார். நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது தலைமைத்துவத் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது என்றும் ஊழியர்களை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதையும் தனது அனுபவத்தின் மூலம் கண்ட பாடங்களை விளக்குகிறார்.

கப்பல் படையில் இருக்கும் மற்ற கப்பல்கள், தங்களது செலவுகளைக் குறைத்து ஊழியர்கள் தக்கவைப்பு விகிதங்களை எட்டிப்பிடிக்க முயற்சிக்கும்போது ,அவர்கள் அனைவரையும் பொறாமைப்பட வைக்கும் வகையில் தனது 310 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய குழுவினரை திறம்பட வழிநடத்தி பசிபிக் கடற்கரையில் இருக்கும் மற்ற அனைத்து கப்பல் நிறுவனங்களையும் விஞ்சிய கதை இது.

கப்பலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலிருந்து தனது ஊழியர்களின் முக்கிய குறைகளை நிவர்த்தி செய்ய தீர்மானித்தார். முதல்கட்டமாக கப்பலில் உள்ள அனைவரின் பெயர்களையும் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்கத் தொடங்கினார் .அவர்களது தேவைகளை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் குழு உறுப்பினர்களின் திறமையும், அவர்களுக்கு ஏற்ற பணிகளையும் ஊழியர்களின் தனிப்பட்ட குறிக்கோள்கள், ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் அவற்றை பொருத்தினார்.

மாலுமிகள் முக்கியமானது எது என்று கருதும் ஒரு ஆய்வை மேற்கொண்டு, அதில் ஊதியம் ஐந்தாவது இடத்தைத் தான் பிடிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். அவற்றிற்கு மேலாக முக்கியமானவை மரியாதையுடன் நடத்தப்படுவது, அவர்கள் கூறுவதை கேட்பது, அவர்கள் கூறும் விஷயங்களை நடைமுறைப்படுத்துவது போன்றவை என்பதை உணர்ந்தார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சுவர்களை உடைத்ததோடு எல்லா ஊழியர்களும் சாப்பிடும் உணவகத்திலேயே தானும் சாப்பிட்டார். கப்பலில் உள்ள சமையல்காரர்களை சமையல் கற்றுக் கொள்வதற்காக சமையல் பள்ளிகளுக்கு அனுப்பினார். தனது குழுவினர் ஓய்வு நேரங்களை கழிக்கும்போது அனைவரும் ஒன்றாக இருக்கும் வண்ணம் பார்பெக்யூக்கள் மற்றும் திரைப்பட இரவுகள் போன்றவற்றில் பங்கு பெறச் செய்தார்.

தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஊழியர்களின் பரிந்துரைகளை கவனமாக கேட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் குழு பணி,நட்புறவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு SLOGAN-முழக்கங்களை கப்பலில் உருவாக்கினார். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் “இது உங்கள் கப்பல்- IT’S YOUR SHIP” என்ற முழக்கமாகும்.

புத்தகத்தில் குறிப்பிடப்படும் கொள்கைகள் பொட்டில் அடிப்பது போல நேரடியாக தாக்குபவை

1. பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் .ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஊழியர்களை ஈர்ப்பதும், தக்கவைத்துக் கொள்வதும், ஊக்குவிப்பதும் ஒரு சவால்தான். ஒரு நிறுவனம் அவ்வாறு செய்வதில் வெற்றி பெற்றால் அங்குள்ள ஊழியர்கள் அதிகமான ஆர்வம் ஆற்றல் உற்சாகத்துடன் செயல்படுகிறார்கள்

2. நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருந்து குழுவை வழி நடத்துங்கள். உங்களுக்கு கீழே உள்ளவர்கள் உங்கள் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் உங்கள் ஊழியர்களின் நடத்தைகளில் உங்களது நடத்தைகள் அதிக செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஊழியர்கள் தங்களது பணியை எவ்வாறு உணர்கிறார்கள் என்பது தலைவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் மற்றும் அவர்கள் சொல்வதை அடிப்படையாகக் கொண்டது

3. ஊழியர்கள் கூறுபவைகளை கவனமாக காது கொடுத்து கேட்டுக் கொள்ளுங்கள்.

4. உங்களது தொடர்புகளை காரணத்தோடு அர்த்தமுள்ளதாக்குங்கள். ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதன் ரகசியம் ஊழியர்கள் பொதுவான ஒரு இலக்கிற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிவதில் தான் இருக்கிறது. எனவே குறிக்கோள்கள் விதிகள் எதிர்பார்ப்புகள் குறித்து பயனுள்ள மற்றும் வெளிப்படையான தொடர்புகள் நிறுவனத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்

5. நம்பிக்கையான சூழலை உருவாக்குங்கள்.

6. ஒவ்வொரு செயலுக்கும் முடிவுகளை மட்டும் தேடுங்கள். கூழைக் கும்பிடை எதிர்பார்க்காதீர்கள்.

7. அளவோடு ரிஸ்க் எடுங்கள்

8. வழக்கத்திற்கு மாறான நடைமுறைகளை பயன்படுத்துங்கள். வழக்கமான நடைமுறைகளுக்கு அப்பால்தான் புதுமையும் முன்னேற்றமும் இருக்கின்றன.எனவே பழைய பணிகளை கையாளுவதற்கும், புதிய சிக்கல்களை கையாளுவதற்கும் புதிய வழிகளையும் அணுகுமுறைகளையும் கண்டறிய வேண்டும்.

9. உங்களது ஊழியர்களை ஒன்றுசேர்த்து பலப்படுத்துங்கள். நல்ல தலைவர்கள் தங்கள் ஊழியர்களை பயிற்சி அளித்து ஊக்குவிப்பதன் மூலமும்,
தங்களைப் பற்றியும் அவர்களின் வேலைகளைப் பற்றியும் நன்றாக உணர உதவுவதன் மூலமும் தங்கள் அமைப்பை பலப்படுத்துகிறார்கள். இது நிகழும்போது, மன உறுதியும் உற்பத்தித்திறனும் மேம்படுவதால் நிறுவனத்திற்கு அதிக லாபங்களை ஈட்டி தருகிறது.

10. ஒற்றுமையை உருவாக்குங்கள்; நிறுவனத்தில் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் ஆதரிக்காவிட்டால் சீர் செய்ய முடியாத சிக்கல்களை அமைப்புகள் சந்திக்கக்கூடும்

11. உங்கள் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துங்கள்.

பென்ஃபோல்ட் என்ற இந்த கப்பலில் கேப்டன் அப்ரஷாஃப்பால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமான ஒழுங்கு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவைப்படுபவை. அங்கு அதிகமாக பயன்படுத்தப்பட்ட மந்திரச் சொற்கள் - பயிற்சி மற்றும் தொடர்பு (Training & Communication). எந்த ஒரு நிறுவனத்திலும் முக்கியமான இந்த இரண்டு அம்சங்களை கையாண்டால் அவை வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குழு உறுப்பினர்கள் தங்களையும் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதை எளிதாகவும், அதனால் அவர்களுக்கு பலனளிப்பதாகவும் மாற்ற வேண்டும். பொறுப்பை எவ்வாறு, எப்போது ஒப்படைக்க வேண்டும் என்பதை தலைவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் ஊழியர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள் அவர்களது வேலைகளுக்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்குங்கள். வெற்றி நிச்சயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in