Published : 09 Nov 2020 09:49 AM
Last Updated : 09 Nov 2020 09:49 AM

கரோனா காலத் தொழில்கள்: நாம் பயில வேண்டிய சில பாடங்கள்

slvmoorthy@gmail.com

இந்தக் காரோனா காலகட்டம் பல தொழில்களை முடக்கியது எவ்வளவு உண்மையோ, அது போலவே பல தொழில்களை உருவாக்கவும் செய்திருக்கிறது. தாங்கள் ஒரு தொழில் தொடங்குவோம் என்று நினைத்திராத பலர், தற்போது சுய தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். ஆன்லைன் வாயிலாக ஆடைகள், உணவுப் பண்டங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை என சிறிய அளவிலான தொழில்கள் அதிகம் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் என்று பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்த சில்லறை வியாபாரச் சந்தையை ஆக்கிரமித்து வருகிற நிலையில், இத்தகைய சுயாதீன தொழில்கள் வரவற்கப்படக்கூடியது மட்டுமல்ல, ஆரோக்கியமான போக்குகூட.

ஒருவகையில் இணைய காலகட்டத்தில் தொழில் தொடங்குவது சிரமமான காரியமும் அல்ல. கடை வாடகை, விற்பனை செய்வதற்கு ஆட்கள் என்று பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. எனவே, பலரும் நினைத்த நேரத்தில் தொழில் தொடங்கிவிடுகிறார்கள். அதேசமயம் அவர்களால் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு நீடிக்க முடியாமல் திணறுவதையும் பார்க்கிறோம். இங்குதான் நாம் சில படிப்பினைகளைப் பெற வேண்டியதாக இருக்கிறது.

அமேசான், பிளிப்கார்ட் போன்று பெருநிறுவனங்களாக மாறுவது நமது இலக்காக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் விற்கும் தயாரிப்புகள் தனித்துவமிக்கதாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் இருப்பதுஅவசியம். இந்தத் தன்மையை ஒரு நிறுவனம் கொண்டிருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்நிறுவனம் மீது நம்பிக்கை ஏற்படும். தொழிலும் வளர்ச்சி காணும். எனவே நம் குறைகளைக் களைந்து, நம் தரத்தை உயர்த்திக்கொள்ள சில அறிவியல் பூர்வமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது பென்ச்மார்க்கிங்.

ஜெராக்ஸின் கோட்பாடு

பிற நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணங்களை ஆராய்ந்து, அந்த வழிமுறைகளை நம் தொழிலிலும் நடைமுறைப்படுத்துவதை பென்ச்மார்க்கிங் என்று சொல்லாம். இந்தக் கொள்கையை கண்டுபிடித்தது நாம் ‘போட்டோ காப்பி’ எடுக்கும் மிஷினைக் கண்டுபிடித்த ஜெராக்ஸ் நிறுவனம் தான். 1961-ல் ஜெராக்ஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டததைத் தொடர்ந்து பல அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்களும் ‘போட்டோ காப்பி’ மிஷின் தயாரிப்பில் இறங்கின.

ரிக்கோ (ricoh), கேனன் (canon) போன்ற ஜப்பானிய கம்பெனிகள், போட்டோ காப்பி மிஷின் விற்பனையில் ஜெராக்ஸ் நிறுவனம் கொண்டிருந்த சந்தையை கைப்பற்றத் தொடங்கின. 1974-ம் ஆண்டில் ‘போட்டா காப்பி’ மிஷின் விற்பனையில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் பங்கு 86 சதவீதமாக இருந்ததது. அந்தப் பங்கு 1984-ம் ஆண்டில் 17 சதவீதமாக வீழ்ந்தது. இந்தச் சூழலில், கம்பெனித் தலைவராகப் பொறுப்
பேற்ற டேவிட் கீர்ன்ஸ், நிறுவனத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்து ராபர்ட் காம்ப் என்பவரை அதற்கான திட்டப்பணிக்கான தலைவராக நியமிக்கிறார்.

ராபர்ட் காம்ப், ஜெராக்ஸ் நிறுவனத்தின் தோல்விக்கான காரணங்களை, ரிக்கோ, கேனன் நிறுவனங்களின் வெற்றிக்கான காரணங்களோடு ஒப்பீடு செய்து அலசினார். அப்போது அவர் சில முடிவுக்கு வந்தார். ரிக்கோ, கேனன் நிறுவனங்களின் மிஷினிங்களின் விலை ஜெராக்ஸ் நிறுவனத்தின் மிஷின்களின் விலையை விட பாதிதான். காரணம், அந்நிறுவனங்களின் உற்பத்தி செலவு ஜெராக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செலவில் 40 சதவீதம்தான். எப்படி இது சாத்தியமானது? அவருக்கு சில பதில்கள் கிடைத்தன.

ஜெராக்ஸ் நிறுவனத்தில், 1,000 மெஷின்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் 30 மிஷின்கள் குறைபாடு உடையவையாக இருந்தன. ரிக்கோ, கேனன் நிறுவனங்களில் 1,000 மிஷின்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் மூன்றே முன்று மிஷின்கள் மட்டுமே குறைபாடு உடையதாக இருந்தன. உற்பத்தி தொழில்நுட்பத்தில் அந்நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்திவந்ததை அவர் கண்டு கொண்டார்.

அதேபோல், அந்த நிறுவனங்கள் அதிகம் உற்பத்தி செய்து தேக்கி வைக்காமல், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்துகொண்டன. இதனால் அந்நிறுவனங்களுக்கு பராமரிப்புச் செலவு குறைந்தது. ஜெராக்ஸ் நிறுவனத்துக்கு 5,000 சப்ளையர்கள் இருந்தார்கள். ரிக்கோ, கேனன் நிறுவனங்களுக்கு 1,000 சப்ளையர்கள்தான் இருந்தார்கள். இதனால் அந்நிறுவனங்களால் பொருட்கள் வாங்குவதையும், உற்பத்தியையும் சுலபமாக ஒருங்கிணைக்க முடிந்தது. இவ்வாறாக அந்நிறுவனங்களின் சிறந்த வழிமுறைகளை காம்ப் அடையாளம் கண்டார். ஆனால், அதை அப்படியே தங்கள் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. பதிலாக, ஜெராக்ஸ் நிறுவனம் எந்தெந்த அம்சங்களில் பலவீனமாக இருக்கிறதோ, அந்த அம்சங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பட்டியலிட்டார்.

அந்நிறுவனங்களின் வழிமுறைகளை ஆய்வுசெய்து அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். உதாரணமாக; தொழிற்சாலை வடிவமைப்பு தொடர்பாக, மாபெரும் சாதனைகள் படைத்திருந்த ‘ஃபோர்ட்’,‘கம்மின்ஸ் என்ஜின்கள்’; தர முன்னேற்றத்துக்கு, டொயோட்டா, ஃப்ளோரிடா பவர் லைட் ; சப்ளையர் மேனேஜ்மென்டுக்கு ஹோண்டா; அக்கவுன்ட்டிங் முறைகளுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி.

இவர்கள் அனைவரையும் காம்ப் தொடர்புகொண்டு, அந்தக் குறிப்பிட்டப் பிரிவுகளில் அவர்களுடைய அபரிமித வெற்றிக்கு என்ன காரணங்கள் என்று விசாரித்தார். அவர்களும் இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அடுத்த ஐந்தே வருடங்களில் ஜெராக்ஸ் நிறுவனம், தன் அத்தனை பலவீனங்களையும் வென்று மீண்டும் முதல்இடத்தைப் பிடித்தது. ஜெராக்ஸ் கடைப்பிடித்த இந்தக் கொள்கைக்கு பென்ச்மார்க்கிங் என்று காம்ப் பெயர் வைத்தார்.

பென்ச் மார்க்கிங் ஒரு கோட்பாடாக அறிமுகம் செய்யப்பட்டப்பிறகு, பென்ச்மார்க்கிங் கொள்கையைக் கடைப்பிடிக்காத வெற்றிகரமான நிறுவனங்களே உலகில் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. தற்போது தொழில் தொடங்கும் பலரும், ஆரம்பத்தில் கிடைக்கும் லாபத்தைக் கண்டு, மெத்தனமாக இருந்துவிடுகிறார்கள், தொழில் என்பது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு செயல்பாடு. தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் ஒருகட்டத்தில் தேக்கம் கண்டுவிடும். கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வழியிலான வியாபாரம் மிகப் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. கரோனா பயம் காரணாமாக வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கின்றனர். மட்டுமில்லாமல், இணையத்தில் வாங்குவது அவர்களுக்கு கூடுதல் செளகரியமாகவும் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் இந்த மனமாற்றத்தால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல வளர்ச்சி கண்டுவருகிறது. அதேசமயம், ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

புதிதாக தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களின் தொழிற்செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். பெரும்பாலானோரின் பொருட்கள் தரமானவையாக இருக்கின்றன. விலைகளும் நியாயமாக இருக்கின்றன. ஆனால் தொழிலில் வளர, நீடித்து நிற்க இவை மட்டும் போதாது, அவர்களில் பலரிடமும் ஒரே விதமான குறையைப் பார்க்க முடிகிறது. கூரியர் செய்பவர்களிடம் பொருட்களை கொடுத்துவிட்டால் தங்கள் பொறுப்பு தீர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் கைகளில் பொருட்களை சேர்ப்பது வரை தங்கள் வேலை என்று அவர்கள் உணர்வதில்லை.

டெலிவரியில் ஏதாவது பிரச்சினை என்று வந்தால், கூரியர்களை கையைக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். பேக்கிங் அத்தனை திருப்திகரமானதாக இல்லை. கூரியரில் பலநூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கஸ்டமரிடம் வந்து சேரும்போது பொருட்கள் சேதமடையக்கூடும். இத்தகைய சேதங்கள், தவறான சப்ளை, தரக்குறைவு போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தால், சரியான திருத்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அமேசான் இந்த அம்சத்தில் மிக மிக முன்னேற்றத்தில். வாங்கிய எந்தப் பொருளையும் காரணமே சொல்லாமல் திருப்பிக் கொடுக்கலாம்; அவர்களின் ஆட்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்கிறார்கள். பொருட்களின் தரத்திலும், வாடிக்கையாளர்கள் சேவையில் சிறிய நிறுவனங்கள் பலவும் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.

விருதுநகர் மாவட்டம் கரியப்பட்டியில் இருந்து இயங்கும் “தாய்வழி” (Mother’s Way) கருப்பட்டிக் கடலை மிட்டாய், எள் உருண்டை ஆகிய தயாரிப்புகளின் பேக்கிங்க்கு ஐந்து நட்சத்திர அங்கீகாரம் தரலாம். மூலப்பொருட்களின் தரத்திலும், இவர்கள் பலருக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். சென்னையிலிருந்து இயங்கும் “ப்ரஷாந்த் சாரீஸ்”, கடையைச் சேர்ந்த பிருந்தா பத்மநாபன் தினமும் 30 சேலைகளைஅறிமுகம் செய்கிறார்.

சுமார் 20 நிமிட வீடியோக்களில், புடவைகளின் நிறம், பார்டர், தலைப்பு, விலை ஆகிய அத்தனை விவரங்களையும் ரத்தினச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறார். கேரளாவில் நூரணி கிராமத்திலிருந்து செயல்பட்டுவரும் ‘Mamees Foods’ முறுக்கு, தட்டை, சீடை போன்ற
பட்சணங்கள் தயாரிக்கிறார்கள். பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தப் பிறகுதான் பில்லே அனுப்புகிறார்கள். அதன் வழியே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார்கள்.

தற்போது சகலமும் ஆன்லைன் நோக்கி நகர்ந்துவந்து கொண்டிருக்கிற நிலையில், அத்துறையில் வெற்றிப் பாதையில் பயணிக்கும் சிலரின்வழிமுறைகளைப் ஆராய்ந்து, அதிலிருந்து நமக்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் நாம் நமக்கான வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x