

இன்று நமக்கு மிகவும் பரிட்சயமான பிராண்டுகள் பல. நாம் பருகும் குளிர் பானங்களிலிருந்து, அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பிரபலமானவை. இவற்றில் பல நிறுவனங்கள் தொடங்கி நூறாண்டுகளைக் கடந்தவை. கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் இன்றளவும் தங்களைத் தக்கவைத்துள்ள சில நிறுவனங்களின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானவை.
ஜெனரல் எலெக்ட்ரிக்
பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்த நிறுவனங்களில் ஒன்று. தாமஸ் ஆல்வா எடிசன் 1878ல் தொடங்கிய நிறுவனம். மின்சார பல்பு முதற்கொண்டு விமான சேவை வரை பல நூறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
வீட்டு உபயோகப்பொருட்கள், எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம், விமான சேவை, போக்குவரத்து, மருத்துவம் என பல துறைகளிலும் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபெர்பீல்டு நகரில் தலைமையகம் அமைந்துள்ளது.
பணியாளர்கள் 3,05,000
ஆண்டு விற்பனை 14,845 கோடி டாலர்
ஃபோர்டு
கார் உற்பத்தியில் பல நுட்பங்களைப் புகுத்திய ஹென்றி ஃபோர்டு 1903ஆம் ஆண்டு தொடங்கினார். அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளில் தனது தொழிற்சாலைகளை வைத்துள்ளது. வாகனக் காப்பீடு, முதலீட்டு நிறுவனம், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் மிக்கிசன் மாகாணத்தில் டெபோர்ன் (Dearborn) நகரில் தலைமையகம் அமைந்துள்ளது.
பணியாளர்கள் 1,87,000
ஆண்டு விற்பனை 14,408 கோடி டாலர்
கோல்கேட்
தனிநபர் சுகாதாரம் சார்ந்து தொடங்கப்பட்ட நிறுவனங்களில் நூற்றாண்டுகளை கண்ட முக்கிய நிறுவனம். பற்களுக்கான தயாரிப்புகள், வீட்டுச் சுகாதார பொருட்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கான உணவுகள் தயாரிப்பில் உள்ளது.
பற்பசை, பவுடர்களில் முன்னணி பிராண்டுகளைக் கொண்டுள்ளது. வில்லியம் கோல்கேட் என்பவரால் 1806ல் தொடங்கப்பட்டது. 2015 மே மாதம் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் மதிப்புமிக்க பிராண்டுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலைமையகம் அமைந்துள்ளது.
பணியாளர்கள் 37,700
ஆண்டு விற்பனை 1,728 கோடி டாலர்
நெஸ்லே
உலக அளவில் உணவுப்பொருட்கள் துறையில் உள்ள மிகப்பெரிய சுவிட்சர்லாந்து நிறுவனம். குடிநீர், உணவு, நொறுக்கு தீனி வகைகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
ஹென்றி நெஸ்லே என்பவரால் 1866-ல் தொடங்கப்பட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா கண்டங்களில் 197 நாடுகளில் ஆலைகள் வைத்துள்ளது. நியூசிலாந்தின் விவெய் (Vevey) நகரில் தலைமையகம் அமைந்துள்ளது.
பணியாளர்கள் 3,39,000
ஆண்டு விற்பனை 10,008 கோடி டாலர்
கோகோ கோலா
குளிர்பான துறையில் இருக்கும் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்று. 1886 ஆம் ஆண்டு ஆசா கிரிக்ஸ் காண்ட்லர் (Asa Griggs Candler) என்பவர் அமெரிக்காவில் தொடங்கினார்.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என உலகம் முழுவதும் ஆலைகளை வைத்துள்ளது.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலேயே 44 நாடுகளில் தனது சந்தையை இந்நிறுவனம் வைத்திருந்தது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் தலைமையகம் அமைந்துள்ளது.
பணியாளர்கள் 1,29,200
ஆண்டு விற்பனை 4,591 கோடி டாலர்
ரோலக்ஸ்
செல்வந்தர்களின் அந்தஸ்தின் அடையாளம் ரோலக்ஸ். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தலைமையகம் அமைந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. லண்டலில் சுவர் கடிகார விநியோகம் செய்து வந்த ஹான்ஸ் வில்ஸ்டோர்ப் என்பவர் தனது 24 வது வயதில் 1905ல் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
1926லேயே தண்ணீர் புகாத கை கடிகாரத்தை தயாரித்த நிறுவனம், உலகின் முன்னணி விளையாட்டு வீரர்கள் இதன் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். டைகர் உட்ஸ், பில் மைக்கேல்சன், ரோஜர் பெடரர், லிண்ட்ஸே வோன் என பலரும் ரோலக்ஸ் வாட்ச் அணிகின்றனர்.
பணியாளர்கள் 37,700
ஆண்டு விற்பனை 46 கோடி டாலர்
பிலிப்ஸ்
ஹெல்த்கேர், லைட்டிங், நுகர்வோர் பொருட்கள், என பல துறைகளிலும் தொழில் செய்து வரும் நெதர்லாந்து நிறுவனம் இது. டெலிவிஷன், ஆடியோ, வீடியோ, மல்ட்டி மீடியா என பல தொழில்களை மேற்கொண்டுள்ளது. லைட்டிங் துறையில் டியூப் லைட் வரை தயாரித்து வருகிறது.
பிடரிக் பிலிப்ஸ், ஜெரார்டு லியோனார்ட்டு பிலிப்ஸ், ஆண்டன் பிலிப்ஸ் என்பவர்களால் 1891 ஆண்டு தொடங்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தலைமையகம் அமைந்துள்ளது.
பணியாளர்கள் 1,05,070
ஆண்டு விற்பனை 2,971 கோடி டாலர்