

கார்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் விற்பனை யகத்தைப் பார்த்திருக் கிறோம். நம்மில் பலர் இத்தகைய விற்பனையகங்களுக்குச் சென்று காரோ, மோட்டார் சைக்கிளோ வாங்கி யிருக்கக்கூடும். ஆனால் பஸ்ஸுக்கு விற்பனையகம் எங்காவது பார்த் திருக்கிறீர்களா, அல்லது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதற்கு பதில் இல்லை என்றுதான் இருக்கும். ஆனால் இனிமேலும் அப்படிக் கூற முடியாது. ஆம் சென்னையில் முதலாவது பஸ் விற்பனையகத்தை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ்.
பொதுவாக பஸ்,லாரி போன்ற கன ரக வாகனங்களைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கான இன்ஜின், சேசிஸ் ஆகியவற்றை மட்டுமே பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும். இவற்றின் மேற்பகுதி (பாடி) பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள்தான் கட்டித் தருகின்றன. ஆனால் இப்போது முழுமையாக கட்டப்பட்ட பஸ்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். முதலாவது விற்பனை யகம் அரும்பாக்கத்தில் கடந்த வாரம் திறக்கப்பட்டது.
பஸ்களின் பல்வேறு மாடல்கள், அதில் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிரத்யேக சிறப்பு வசதிகளை கூடுதலாக செய்து தருவதற்கு தொழில் நுட்ப நிபுணர்கள் அடங்கிய விற்பனையகமாக இது திகழ்கிறது.
நவீன வசதிகளை உள்ளடக்கியதாக அதாவது வாடிக்கையாளர்கள் கலந் துரையாடல் அறை, வைஃபை இணைப்பு உள்ளிட்ட வசதிகள் இந்த விற்பனையகத்தில் உள்ளன. இந்த விற்பனையகம் 772 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சேவை மையம்:
விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை அளிக்கக் கூடிய சர்வீஸ் சென்டரையும் டாடா மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. அதிக பஸ்களை பழுது பார்க்க வசதியாக இந்த மையம் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பழஞ்சூர் கிராமம் (இருங்காட்டுக் கோட்டைக்கு முன்) அருகே தொடங்கியுள்ளது. ஒரே சமயத்தில் 12 பஸ்களை இங்கு பழுது பார்க்கும் வசதி உள்ளது.
இந்த மையம் 2,990 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. பழுது நீக்குவதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் இங்கு உள்ளன. வீல் அலைன்மென்ட் பிரிவு, ஏசி பஸ்களுக்கு வாயு நிரப்பும் பிரிவு உள்ளிட்ட வசதிகளும் இங்குள்ளன.
இங்கு டிரைவர்கள், உதவியாளர்கள் இரவு தங்குவதற்கான வசதிகள் உள்ளன. மின்னணு மற்றும் பயோ மெட்ரிக் அடிப்படையிலான வருகைப் பதிவு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இயக் கப்படும் பஸ்களுக்கான சேவைகளை அளிக்க இந்த மையம் உதவியாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன பிரிவின் செயல் இயக்குநர் ரவி பிஷ்ரோடி தெரி வித்துள்ளார்.
பொது போக்குவரத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் பஸ்களுக்கான விற்பனையகமும்,விற்பனைக்கு பிந்தைய சேவை மையமும் தொடங்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றே.