Published : 05 Oct 2015 11:46 AM
Last Updated : 05 Oct 2015 11:46 AM

உன்னால் முடியும்: இந்தியா தவிர வேறெங்குமே தொழில் புரிய முடியாது- சாதித்த இளைஞர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை

இந்தியாவில் மட்டும்தான் தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தொழில் போட்டிகள் அதிகம், இங்கு தொழில் புரிவது மிகவும் கடினமானது என்று கூறுவது பொய். இங்கு தொழில் புரியாவிட்டால் உலகில் வேறு எங்குமே தொழில் புரிய முடியாது என்று முதல் தலைமுறை தொழில் முனைவோரான அருண் கூறினார்.

சமீபத்தில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தமிழ் இந்து நாளிதழில் திங்கள்கிழமை தோறும் வெளியாகும் வணிக வீதி இணைந்து நடத்திய இந்த விழாவில், வணிக வீதியில் தனித்து ஜெயித்த சாதனையாளர்கள் பலரில் 5 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

பொறியில் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பெரும் திரளான மக்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

வணிக வீதி கட்டுரையில் அடையாளம் காணப்பட்ட ஃபைவ்பிங்கர்ஸ் நிறுவனம் சார்பில் மூன்று இளைஞர்கள் அருண், ஆனந்த், இம்ரான் ஆகியோர் பங்கேற்றனர். இக்குழுவினர் நாமக்கல்லில் நான் ஓவன் பைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட் டுள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இவர்களது தயாரிப்புகள் ஏற்றுமதியாகிறது.

இதேபோல உடுமலைப் பேட்டையில் ஆரோக்கியம் சிறுதானிய அங்காடியை உருவாக்கி அதை சிறப்பாக நடத்தும் முதல் தலைமுறை தொழில் முனைவோரான எம்.லட்சுமி பங்கேற்றார்.

சிறுவயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இதனால் சிறிதும் சோர்வடையாமல் குழந்தைகளுக்கான சத்துமாவு தயாரிப்பில் இன்று முன்ன ணியில் உயர்ந்துள்ளார் செண்பகம். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள முத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது  செண்பகா புட் புராடெக்ட்ஸ் கிராமத்து குழந்தைகள் மட்டுமல்ல நகரத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவுதான். இவரும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அருண்:

இந்தியாவில் மட்டும்தான் 5 ரூபாய்க்கும் டீ விற்க முடியும். 500 ரூபாய்க்கும் டீ விற்க முடியும். அந்த அளவுக்கு பல தரப்பட்ட பொருளாதார நிலைகளில் உள்ள மக்கள் உள்ளனர். இங்கு தொழில் தொடங்குவதும் அதில் நிலைத்திருப்பதும் எளிது. இங்கு தொழில் தொடங்குவது கடினம் என்றால் உலகில் வேறு எங்குமே தொழில் செய்ய முடியாது என்றார்.

ஆனந்த்:

பொறியியல் மாணவர்கள் பற்றி சமூக வலை தளங்களில் தவறான அபிப்ராயம் உலா வருகிறது. பரோட்டா மாஸ்டருக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம். பொறியியல் படித்த மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் என்பன போன்ற தகவல்களால் மாணவர்கள் நிலை குலைந்து போக வேண்டியதில்லை. திறமையானவர்களுக்கு இன்றும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. எனவே மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தொழில் முனைவோரை குழந்தைகள் என்று கூறினர்.

குழந்தை நடக்கும் போது விழுவது சகஜம். ஆனால் விழுவது ஓரிடம், எழுவது குறைந்தபட்டம் ஒரு அடி முன்னேறித்தான் எழும். அதைப்போலத்தான் தொழில் முனைவோரான நாங்களும் விழுந்தோம். ஆனால் ஒரு அடி முன்னேறித்தான் எழுந்தோம். ஒவ்வொரு முறை தோல்வி ஏற்பட்டபோதும் அது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழியேற்படுத்துவதாகத்தான் இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களாக உங்களைப் போல இருந்தோம். இன்று மேடையேறி பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இதைப் போல நீங்களும் அடுத்து தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்றார்.

செண்பகம்:  செண்பகா புட் புராடக்ஸ், முத்தூர் :

சிறு வயதில் திருமணம், மாமனார் நடத்தி வந்த அரிசி ஆலை நலிவடைந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என ஆராய்ந்தபோது. குழந்தை களுக்கான ஊட்டச் சத்து மாவுக்கான தேவை இருந்ததைக் கண்டுபிடிக்க முடிந்தது. முதலில் உறவினர்களின் குழந் தைகளுக்குத் தயாரித்து தந்தது அடுத்து கிராமத்து மக்களுக்காக விரிவு படுத்தினேன். இப்போது பன்னாட்டு நிறுவ னங்களின் தயாரிப்புகளோடு போட்டியிடும் அளவுக்கு தயாரிப்பு வளர்ந்துள்ளது. தரமான தயாரிப்பை அளித்தால் மக்களிடையே வரவேற்பைப் பெறலாம். வாய்ப்புகளைக் கண்டறிந்து அதில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்றார்.

லட்சுமி (ஆரோக்கியம் சிறு தானிய அங்காடி, உடுமலைப்பேட்டை):

மேடையேறி பேசும் அனுபவம் புதிது. நடுக்கம் நீங்கவில்லை என்று பேச்சைத் தொடங்கிய அவர், பாரம்பரிய உணவு வகைகளை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றும் பாரம்பரிய உணவுகள்தான் நமக்கு ஆரோக்கியமளிக்கக் கூடியது என்றார். இந்தப் பொருள்களை விளைவிப்பதும் மிகச் சிறந்த தொழிலே. வீடுகளிலும் இவற்றை பயிரிடலாம் என்றார். சிறு தானியங்களை பயிரிடுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x