

நீங்கள் சென்னைவாசியா, அல்லது அடிக்கடி அங்கு செல்பவரா? சென்னையில் வாசமிகுந்த மகிழம்பூ, ஜாதிப்பூ, முல்லைப்பூ, அடர்த்தியாய்க் கட்டிய மல்லிகைச்சரம் முதலியன கிடைக்கும் இடம் ஒன்று சொல்லுங்கள் பார்க்கலாம். சும்மா கோயம்பேடு சந்தை எனக் கூறித் தப்பிக்கக்கூடாது. சரி, இப்பவாவது ஞாபகம் வருகிறதா? பனகல்பூங்கா அருகில் நல்லி, குமரன் கடைகளின் வாசலிலும் பாண்டிபஜார், நாயுடுஹால் எதிரிலும் மாலை நேரங்களில் இவற்றைப் பார்த்திருப்பீர்கள்; விலை அதிகம் என்றாலும் வாங்கியிருப்பீர்கள்! இந்த இடங்களில் அந்த நேரத்தில் இவை விற்கப்படுவதேன்? மக்கள் பட்டுச்சேலை, நகைகள் என ஷாப்பிங் மூடில் இருப்பதால் தானே?
பெங்களுரூ கமர்சியல் தெருவில் அந்தி வேளையில் உங்களுக்கு உயரிய வகை லெச்சி, வங்குஸ்தான் பழங்கள் கிடைக்கும். அங்கு விற்கப்படும் நறுக்கிய ரோஸ் நிற கொய்யாப்பழங்களை வாங்காமல் போய் விட்டால் உங்களுக்கு நிறைய மன உறுதியோ அல்லது சர்க்கரை நோயோ இருக்கிறதென்று பொருள்! நேரத்தை ஜாலியாகக் கழிக்க வருபவர்களைக் குறி வைத்து நடக்கும் விற்பனை இது!.
அதிகாலையில் நடை பயில்பவர்களை பல ஊர்களில் பார்த்து இருப்பீர்கள். பூங்கா வாயிலில் காலை வேளைகளில் அருகம்புல், கற்றாழைச் சாறுகள் கிடைக்கும். ஆரோக்கிய வாழ்வை தேடும் மக்கள் கூடும் இடம் அதுதானே.
டெல்லி போன்ற பெருநகரங்களில் ஷாப்பிங் மால்களின் திரையரங்குகளில் சோலப்பொரியே 300 ரூபாய்! அதை ‘TUB’ என்பார்கள்! திரைப்படத்தின் இடைவேளை எனும் நேர நெருக்கடி. வெளியே போய் வாங்க முடியாதென்ற இட நெருக்கடி. என்ன விலையானாலும் கொடுப்பார்கள். சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும் இடத்தில் பார்த்தால், கண்ணில்படும்படி சாக்லேட்கள், ஷேவிங் பிளேடுகள் வைக்கப்பட்டிருக்கும். பில் போட காத்திருக்கும் நேரத்தில் பலர் அவற்றை பில்லில் சேர்க்க சொல்வார்கள்.
வாடிக்கையாளரை ஒருபொருளை எப்படி வாங்க வைப்பது என்பதுதான் புரியாத புதிர்; விற்பனை வித்தகர்கள் தேடும் மெய்பொருள். அப்பொருளை வாங்கும் முடிவை வாடிக்கையாளர் எப்படி எடுக்கிறார் ஏன் எடுக்கிறார் என்கிற கேள்விகளுக்கு விடை வேண்டும். இதற்கான ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் பொருள் கிடைக்கும் இடமும் நேரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதும் அவையே விலையையும் முடிவு செய்கின்றன என்பதும் நிதர்சனமான உண்மைகள்!
இன்று மடிக்கணிணியும், கைபேசியும் வாடிக்கையாளரின் வாங்கும் நேரத்தை 24x7 ஆக மாற்றி வருகின்றன! அதைப் போன்றே விற்கும் இடத்தையும் உலகளாவியதாக ஆக்கி வருகின்றன!! அப்புறம் எப்படி வாங்குவோர் கூட்டம் சேர்ப்பது. எனவே தான், பண்டிகை காலம், வருடப்பிறப்பு, Big Billion Sale போன்ற சிறப்புத் தள்ளுபடி விற்பனைகள் மூலம் சிறப்பு உந்துதல் கொடுக்கப்படுகிறது.
வள்ளுவர் தம் குறளில் சரியான நேரத்தில் ஏற்ற இடத்தில் முயற்சி செய்தால் உலகையே அடைய நினைத்தாலும் கைகூடும் என்கிறார். இது சந்தைப்படுத்துதலுக்கும் வெகுவாகப் பொருந்துகிறது! எனவே சரியான இடத்தைப் பார்த்து கடை போடுங்கள்! ஏற்ற நேரம் பார்த்து கடை விரியுங்கள்!!
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் -குறள்: 484
somaiah.veerappan@gmail.com