Published : 19 Oct 2020 09:58 AM
Last Updated : 19 Oct 2020 09:58 AM

நோபல் பரிசை வென்ற ஏல கோட்பாடு!

பேராசிரியர் ரு.பாலசுப்ரமணியன்
(rubalu@gmail.com)

ஏல விற்பனை குறித்த புதிய பொருளியல் கோட்பாடுகளை உருவாக்கியதுடன் அக்கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய ஏல முறைகளை வடிவமைத்ததற்காக அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பொருளியல் நிபுணர்களான ராபர்ட்வில்சன் மற்றும் பால் மில் குரோம் ஆகியோருக்கு இவ்வாண்டிற்கான பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பொருள்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏல நடைமுறையைப் பயன்படுத்துவது தொன்றுதொட்டு இருந்துவரும் ஒரு வழக்காகும். பண்டைய ரோமாபுரியில் கடன் வாங்கியவர்கள் தங்கள்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது அவர்களின் சொத்துகளை ஏலம் விடுவதன் மூலம் கடன் கொடுத்தவர்கள் கடனை வசூல் செய்தனர்.

சமகாலத்தில் விலை மதிப்பு மிக்க கலைப் பொருட்கள் முதல் தொலைத்தொடர்பு அலைக்கற்றை, வணிக நிறுவனங்களின் பங்குகள், பொதுச் சொத்துக்கள், அரசுப் பத்திரங்கள், இணைய விளம்பரங்கள் வரை பல்வேறு வகையான பொருட்களும் சேவைகளும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மின்சாரத்தின் விலை கூடமண்டல அளவிலான மின்சார ஏலத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல பொதுப்பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் அரசுத்துறையினரால் ஏலநடைமுறை மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தனி மதிப்பும்பொது மதிப்பும்

ஏல விற்பனையில் உள்ள சில அடிப்படைக் கூறுகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும். ஏலத்தின் மூலம் விற்கப்படும் பொருளின் தன்மையைப் பொறுத்து ஏல விதிமுறைகள் மாறுவதுண்டு. விலை உயர்ந்த கலைப் பொருட்கள், விராட் கோலியின் மட்டை போன்றவற்றை ஏலம் எடுக்க நினைப்பவர்கள் அவற்றின் சந்தை மதிப்பு பற்றிக் கவலைப்படுவதில்லை. தாங்கள் அப்பொருளை எந்த அளவுக்கு மதிப்பு மிக்கதாகக் கருதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிக விலைக்கு ஏலம் கோருகின்றனர்.

இதைத் தனிப்பட்ட மதிப்பீடு (private value) என்பர். ஆனால், இணைய வழி விளம்பரம், தொலைத் தொடர்பு அலைக்கற்றை போன்றவற்றை ஏலம் எடுப்பவர்கள் அவற்றின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டே ஏலம் கோருவர். இத்தகைய சந்தை மதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாக (சமமாக) இருப்பதால் இதைப் பொது மதிப்பீடு (common value) என்பர். மூன்று முக்கிய ஏல முறைகள்(Auction format) உள்ளன.

1. ஆங்கிலேய ஏலம் (English Auction)

இம் முறையில் ஒரு பொருளை விற்பனை செய்ய விரும்புவர் ஏல விற்பனையை குறைந்த விலையில் ஆரம்பித்த பின் வாங்க விரும்புவர்கள் அப்பொருளைப் பற்றிய தங்களின் மதிப்பீட்டுக்கேற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக விலையை ஏற்றிக் கொண்டே போட்டி போட்டு ஏலம்கோருவர். மிக அதிக விலையைக் கோருபவருக்கு அப்பொருள் விற்கப்படும். இதில் வெளிப்படை ஏல முறை மற்றும் ரகசிய ஏல முறை என்ற இருவகை உள்ளன.

வெளிப்படை ஏல முறையில் ஏலம் கோருபவர்கள் வாய் வழியாகத் தமது விலையை ஏல விற்பனையில் பங்கேற்றிருக்கும் அனைவரும் அறியும் வகையில் உரக்கக் கோருவர் (open bidding). ஆனால், ரகசிய ஏலமுறையில் (secret or sealed bidding) ஏலம்கோர விரும்புவர்கள் தங்களின் அதிகபட்ச விலையை எழுத்து மூலமாக சீல்வைக்கப்பட்ட உறையில் வைத்து ஏல விற்பனையாளருக்கு அனுப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு பெறப்பட்ட உறைகளை உடைத்து அவர்களில் யார் அதிக விலைக்குக் கோரியுள்ளாரோ அவருக்கு அப்பொருள் விற்கப்படும்.

2. டச்சு ஏலம் (Dutch auction)

17- ஆம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் நிலவுடைமைகள் மற்றும் ஓவியங்களை விற்பதில் இம்முறை பின்பற்றப்பட்டது. தற்போது மலர்கள், பழங்கள், பெருந்தொழில் நிறுவனப்பங்குகள், அரசுக்கடன் பத்திரங்கள் போன்ற அதிக அளவுடைய பொருட்களை விற்கப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. இம்முறையில், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்து நாற்பத்தெட்டாயிரம், நாற்பத்தாறாயிரம், நாற்பத்து நான்காயிரம் என்று ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குறைத்துக்கூறிக் கொண்டேவரும் போது யார் முதலில் தங்களுக்குப் பொருத்தமான விலை கூறப்படும் போது தன் விருப்பத்தை தெரிவிக்கிறாரோ அவருக்கு அப்பொருள் விற்கப்படும்.

3. விக்ரி ஏலமுறை (Vickrey Auction)

தபால் தலைகளை ஏலம் விடுவதற்காக இம்முறை 1893 முதல் பயன்பட்டு வந்தாலும் இதைப் பொருளியல் ரீதியாக விளக்கியவர் 1996 ஆம் ஆண்டு பொருளியல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் விக்ரி என்பதால் இதுவிக்ரி ஏலமுறை எனப்படுகிறது. இது ரகசிய ஏலமுறை என்பதால் சீல் வைக்கப்பட்ட உறையில் ஏலதாரர்கள் தங்கள் விலைக் கோரல்களை (bids) அனுப்பவேண்டும். அதிக விலை கோரியவருக்குப் பொருள் விற்கப்படும்; ஆனால், அவர் தனக்கு அடுத்தபடியாக யார் அதிக விலைக்குக் கோரினாரோ அந்த விலையைக் கொடுத்தால் போதும்.

நோபல் அறிஞர்களின் பங்களிப்பு

ஏலத்தின்போது உருவாகும் போட்டியின் காரணமாக அதிக விலைக்கு ஏலம் கோரிப் பொருளை வாங்கியவர், தான் அப்பொருளின் உண்மையான விலையைவிட அதிகமாகக் கொடுத்துவிடும்நிலை ஏற்படுவதுண்டு. அதை "வென்றவரின் சாபக்கேடு" (Winner's Curse) என்று கூறுவார்கள். ஏல விற்பனை முறையிலுள்ள முக்கியமான சிக்கல் இதுதான். இதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏலம் விடப்படும் பொருளின் சந்தை மதிப்பைவிடக் குறைவான மதிப்பிற்கு ஏலம் கோர முனைவதால் விற்பனையாளருக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய இழப்பைத் தவிர்ப்பதற்குப் பொருத்தமான ஏல முறையை வடிவமைப்பது ஒரு பெரும் சவாலாகும். அதே போல், பொருளின் உண்மையான மதிப்பு பற்றி ஏலதாரர்களுக்கு அரை குறையான விவரங்கள் கிடைக்கும்போது விலையை மேலும் குறைத்து ஏலம் கோரும் போக்கும் இருக்கிறது. இவற்றை விளக்கிக் கூறியவர் ராபர்ட் வில்சன். பொருளின் உண்மையான மதிப்புக் குறித்து உறுதியற்ற நிலை நிலவும் பொழுது மிகப் பொருத்தமான ஏலஉத்தி (bidding strategy) என்னவாக இருக்கவேண்டும் என்பதை விளக்கிக் கூறியதுடன், பொருளின் உண்மையான மதிப்புக் குறித்த சரியான தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் மிகக் குறைவான விலைக்கு ஏலம் கோருவது அல்லது ஏல விற்பனையிலிருந்தே விலகிவிடும் போக்கையும் அவர் கண்டறிந்து விளக்கினார்.

ஆனால், பெரும்பாலான பொருட்கள் பொது மதிப்பையும், தனி மதிப்பையும் கொண்டுள்ளன. எனவே, இவ்விரு மதிப்புகளையும் கொண்டுள்ள பொருட்களில் "வெற்றியாளரின் சாபக்கேடு", பொருளுக்கு விலை கோருவதில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கியவர் பால் மில் குரோம். ஆங்கில ஏல முறையில் ஏலதாரர்கள் விலை உயர உயர ஒருவர் பின் ஒருவராகப் பின்வாங்கிக் கொள்வதால் பிற ஏலதாரர்களுக்கு பொருளின் மதிப்புப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, அவர்கள் பொருட்களின் விலையை மிகவும் குறைத்து ஏலம் கோருவது தவிர்க்கப்படுகிறது. ஆனால், டச்சு ஏல முறையில் இத்தகைய தகவல் கிடைக்கப் பெற வாய்ப்பில்லாததால் அம்முறையில் பொருட்களின் உண்மையான மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு ஏலம் கோரும் போக்கு அதிகமாக உள்ளதாக மில்குரோம் கண்டறிந்தார்.

இவர்களின் முக்கியமான பங்களிப்பு சிக்கலான சூழ்நிலைகளில் பயன்படக்கூடிய புதிய ஏல முறைகளை வடிவமைத்ததாகும். உதாரணமாக, தொலைத் தொடர்பிற்குப் பயன்படும் ரேடியோ அதிர்வலைகளை (Radio frequency) தொலைபேசி நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கு உகந்த புதிய ஏல முறையை அறிமுகப்படுத்தினர். அதற்கு முன்பு அமெரிக்காவில் ரேடியோ அலைக்கற்றை லாட்டரி (Random) முறை மூலம் தொலைபேசி நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அமெரிக்கா முழுவதையும் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்தனியாக லாட்டரி முறைமூலம் அலைக்கற்றைப் பகிர்ந்தளிப்பு நடந்தது. லாட்டரி முறை மூலம் அலைக்கற்றைப் பகிர்ந்தளிப்பு நடந்தபோது அரசு கிட்டத்தட்ட இலவசமாகவே பகிர்ந்தளித்தது; அத்துடன் லாட்டரி முறை மண்டல அளவில் நடைபெற்றதால், தேசிய அளவிலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படாத அலைக்கற்றைகளையே ஏலம் பெற முடிந்தது. எனவே, இந்நிறுவனங்கள் தமக்குள் அதிர்வலைக் கற்றைகளை வாங்கி, விற்றுக் கொள்ளும் இரண்டாம் நிலைச்சந்தைகள்(Second - hand markets) உருவாகின.

ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்தனியாக ஏலம் நடத்தப்பட்டதால், ஒவ்வொரு மண்டலத்திற்குமான அலைக் கற்றைகளை தனித்தனியான பொருட்களாகவே கருத வேண்டும். ஆனால், இவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை. ஏனெனில், ஒரு மண்டலத்தில் அலைக்கற்றையை ஏலம் பெறுவதில் வெற்றியடையும் நிறுவனம் பிற மண்டலங்களிலும் அலைக்கற்றையைப் பெற்றால் மட்டுமே நாடு தழுவியஒரு தொலைத் தொடர்பு இணைப்பை (network) உருவாக்க முடியும். இல்லையேல் அது தொழில் நுட்பரீதியில் சிக்கலைஏற்படுத்துவதுடன் அனைத்து மண்டலங்களிலும் ஏலம் பெறமுடியாத நிறுவனங்கள் இரண்டாம்நிலைச் சந்தையில் (Second - hand markets) அலைக்கற்றையை வாங்க நேரிடுகிறது.

எனவே, இத்தகைய ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருட்களை (ஒவ்வொரு மண்டலத்திற்குமான அலைக்கற்றைகள்) ஒரே சமயத்தில் ஏலம் விடும் பொருட்டு, ஒரே சமயத்திலான பல்சுற்று ஏலமுறையை (Simultaneous Multiple Round Auction) வில்சனும் மில் குரோமும் வகுத்தளித்தனர். இது ஆங்கிலேய ஏலத்தின் அடிப்படையிலான பல்சுற்று ஏல முறையாகும்.1994-ஆம் ஆண்டு முதல் இம்முறையைப் பின்பற்றியதால் அலைக்கற்றை ஏலம் மூலம் அமெரிக்க அரசுக்குப் பல கோடிக்கணக்கான டாலர்கள் வருவாய் கிடைத்தது.

அத்துடன் இவர்கள் வடிவமைத்த ஏலமுறை கனடா, பின்லாந்து, நார்வே, சுவீடன், போலந்து, இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற பலநாடுகளில் பின்பற்றப்படுகிறது. தற்போது, இம்முறைதொலைத்தொடர்பு அலைக்கற்றை மட்டுமல்லாது மின்சாரம், இயற்கை எரிவாயு போன்றவற்றை ஏல விற்பனை செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x