

ஜெ. சரவணன்
saravanan.j@hindutamil.co.in
வாழ்க்கை மேலும் மேலும் நிச்சயமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் எல்லோருக்குமே காப்பீடு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. திடீர் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகளை நிதி நெருக்கடி ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் காப்பீடு தேவை. காப்பீட்டின் அவசியத்தை அறிந்தவர்கள் காப்பீடு எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் நமக்கு என்ன ஆகிவிடப்போகிறது, பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பார்கள். எதுவும் ஆகவில்லை என்றால் கட்டிய பிரீமியம் வீண்தானே என்றும் சிலர் நினைப்பதுண்டு. ஆனால், வங்கிக் கணக்கு இருந்தாலே காப்பீடு வசதி கிடைக்கும் விஷயம் பற்றி தெரியுமா?
1 வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மீது ஒவ்வொரு வங்கியும் காப்பீடு வழங்குகிறது. வங்கிக் கணக்கு மூலம் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய இரண்டு காப்பீடு திட்டங்கள் 2015லிருந்தே நடைமுறையில் உள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கிடைக்கலாம்.
2 பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் 18 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கானது. பிரீமியம் வருடத்துக்கு ரூ.330. பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கானது. பிரீமியம் வருடத்துக்கு ரூ.12. இந்த பிரீமியம் தொகை வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துக்கொள்வார்கள்.
3 விபத்து ஏற்படும்போது கண்பார்வை, கை, கால் ஆகியவற்றை நிரந்தரமாக இழந்தால் இந்தத் திட்டங்களில் ரூ.2 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும். ஒரு கண், ஒரு கால், ஒரு கை போன்றவை இழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும்.
4 மேலும் இந்தத் திட்டங்களில் ரூபே கார்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை கிளெய்ம் கிடைக்கும். விசா, மாஸ்டர் கார்டு போன்றவற்றுக்கு அதற்கு ஏற்ப கிளெய்ம் தொகை மாறுபடும். பயனாளியின் வங்கிக் கணக்கின் சேமிப்பு, பணப்பரிவர்த்தனை ஆகியவற்றைப் பொறுத்தும் காப்பீட்டுத் தொகை மாறும். குறிப்பாக ஒரு நபருக்கு பல டெபிட், கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் ஒரே ஒரு கார்டில் மட்டுமே கிளெய்ம் கிடைக்கும். அந்த கார்டு செயல்பாட்டில் இருப்பது அவசியம்.
5 இயற்கையாகவோ தற்கொலை காரணமாகவோ மரணம் ஏற்பட்டால் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திலும், விபத்தால் மரணம் ஏற்பட்டால், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்திலும் க்ளெய்ம் கோரலாம்.
6 இந்தக் காப்பீட்டு திட்டங்களில் கிளெய்ம் பெற முதலில் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். க்ளெய்ம் பெறுவதற்கான விண்ணப்பம், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை மரணம் அல்லது விபத்து நடந்த 90 நாட்களுக்குள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்த்து வங்கிகள் காப்பீடு நிறுவனங்களுக்குத் தங்கள் பரிந்துரைகளை அனுப்பும். பின்னர் கிளெய்ம் தரப்படும்.
7 காப்பீடு பெறுவதற்கு விபத்து எனில் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் மருத்துவ சான்றுகளும், மரணம் எனில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். இந்த ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நபரின் நாமினி வங்கியை அணுக வேண்டும்.
வங்கிக் கணக்கில் கிடைக்கும் இந்தக் காப்பீடு வசதிகளைப் பற்றி வங்கியாளர்களிடம் அனைவரும் கேட்டுத் தெரிந்துகொண்டால் ஆபத்துக் காலங்களில் கைகொடுக்கும்.