நிதியியல் விழிப்புணர்வு செய்திகள்!

நிதியியல் விழிப்புணர்வு செய்திகள்!
Updated on
3 min read

டாக்டர் பி. கிருஷ்ணகுமார்
p.krishnakumar@jsb.ac.in

பணம் நமது வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் அவசியமான அங்கம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியானால் பணம் சார்ந்த அடிப்படைக் கல்வியறிவை நாம் பெற்றிருப்பதே, அதனை திறம்படக் கையாளத் தேவையான அம்சம். நிதி தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்வதற்கும், அதனை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கும் மட்டுமின்றி பணம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் ஒரு உன்னதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம்.

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒருவரின் நிதி தொடர்பான முடிவுகளில் எவ்வித செல்வாக்கினையும் செலுத்துவதில்லை என்ற எச்சரிக்கை வரிகளுடன் தொடங்குகிறது இந்தப்புத்தகம். இதில் நிதியியல் திறன்கள், வங்கி தொடர்பான அடிப்படை விஷயங்கள், மின்னணு நிதியறிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு போன்ற நான்கு பிரிவுகளில் மொத்தம் இருபது செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளனர்.

கடன் மற்றும் வட்டி!

கடன் மற்றும் அதற்கான எளிய வட்டியை கணக்கிடும் முறையை, ஒரு வருடத்திற்கான எளிய எடுத்துக்காட்டுடன் முதல் செய்தியில் கொடுத்திருப்பது மிகவும் சிறப்பு. மேலும், கடன் பெறும்போது நாம் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்களையும் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு. அடுத்ததாக கூட்டுவட்டி, அதாவது ஈட்டப்பட்ட வட்டியை முதலுடன் சேர்த்து அதனை திரும்ப முதலீடு செய்வது. இதனை கணக்கிடும் சூத்திரத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதையும் தெளிவாகக் கொடுத்துள்ளனர்.

காலப்போக்கில் உயர்ந்துவரும் பொருட்களின் விலை எவ்வாறு நமது வாழ்க்கைச் செலவுகளை அதிகப்படுத்துகிறது என்பதை ஒரு ஆண்டிற்கான பணவீக்கத்திற்கான கணக்கீட்டுடன் கொடுத்துள்ளனர். மேலும்,பணவீக்கத்தை விடவும் அதிகம் சம்பாதிப்
பதற்கான சரியான முதலீட்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது இந்த தகவல். பணத்தின் நேர மதிப்பினை சொல்கிறது அடுத்த தகவல், அதாவது இன்று உங்களிடம் உள்ள நூறு ரூபாய், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெரும் நூறு ரூபாய்க்கு சமமானது அல்ல என்பதை நன்கு உணர்த்துகிறது இந்தத் தகவல். மேலும், பணம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யப்படவில்லை என்றால், பணவீக்கத்தின் மூலமாக பணம் தனது மதிப்பை இழக்கும் என்பதை ஆணித்தரமாக நினைவில் வைக்கச் சொல்கிறார்கள்.

முதலீடு!

எந்தவொரு முதலீடு அல்லது சேமிப்பாக இருந்தாலும் அதன் முதிர்வு பலனுக்கேற்ப ஆபத்தும் அதில் இருந்தே தீரும் என்பதையும், அந்த ஆபத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் முதிர்வு பலனை மட்டும் நோக்கி ஓடக்கூடாது என்பதையும் தெளிவாக சொல்லியுள்ளனர். மேலும், உங்களது சேமிப்பு முழுவதையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்யாமல், வங்கி வைப்பு நிதி, தங்கம், நிலம் மற்றும் நிறுவனப்பங்குகள் போன்ற பல்வேறு வகைகளாகப் பிரித்து முதலீடு செய்வதற்கான விஷயங்களைப் பேசுகிறது இந்த தகவல்.

வங்கி மற்றும் சேமிப்பு!

பட்ஜெட் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதையும், பட்ஜெட்டின்மூலமாக செலவினங்களைக் கட்டுக்குள்வைத்து அதன்மூலமாக நமது எதிர்காலவாழ்க்கைக்கான சேமிப்பை மேம்படுத்துவதைப்பற்றியும் கூறியுள்ளனர். மேலும், சேமிப்பு என்றால் என்ன? சேமிப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளும்போது நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் ஆகியவற்றைப்பற்றி தெளிவுபடுத்தியுள்ளனர். கடன் பெறுவதைப்பற்றிய விஷயங்களோடு, சரியான மதிப்பைப் பெறக்கூடிய மற்றும் சிறந்த பலனைக் கொடுக்கக்கூடிய விஷயங்களுக்காக மட்டுமே நாம் கடன்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இந்தப்பகுதி.

வைப்புநிதி பற்றிய தகவல்களை பேசும் செய்தியில், நாமினி பற்றிய தெளிவான புரிதலைத் தருவதோடு, முன்கூட்டியே வைப்பு நிதியில் உள்ள பணத்தை திரும்பப்பெறுவதற்கான விபரங்களையும் கூறியுள்ளனர். அடுத்ததாக, நம்மால் இன்று அதிகம் பேசப்படும் கிரெடிட் ஸ்கோர் பற்றிய ஆழ்ந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?, ஏன் இது இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது மற்றும் இந்த கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்வதற்கான வழி
முறைகள் என்ன? ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை விவரிக்கிறது. இவை மட்டுமின்றி, வங்கிப் பிரதிநிதி அல்லது முகவர்கள்
பற்றியும், அவர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் வங்கிச்சேவைகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவர்களைப்பற்றிய விபரங்களை எவ்வாறு சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் சரிபார்த்துக்கொள்வது என்பதைப்பற்றியும் கூறியுள்ளனர்.

மின்னணு வங்கி!

வங்கிக்கிளை, இணையவழி, மொபைல் பேங்கிங் போன்ற நவீன பணபரிமாற்ற முறைகளில் எவ்வாறு விரைவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது என்பதைச் சொல்கிறது இந்தப்பகுதி. இதில் பரிவர்த்தனைக்கான கால அளவு, வேலை நேரம், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகை போன்றவற்றையும் விவரிக்கிறது. மேலும், மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளில் நாம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைப் பட்டியலிடுகிறது இந்தப்பகுதி.

அடுத்ததாக, வங்கிச்சேவைகளில் முக்கியமானதாக கருதப்படும் ஏடிஎம் பற்றிய அனைத்து பரிணாமங்களும் விளக்கப்பட்டுள்ளது. நமது ஏடிஎம் அட்டை தொலைந்துபோனாலோ அல்லது திருடுபோனாலோ நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும், ஏடிஎம் உபயோகத்தின்போது நாம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களைப்பற்றியும் சொல்கிறது இந்தச்செய்தி. மேலும், ஏடிஎம் பரிவர்த்தனைகளின்போது நமக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய புகார்களை எங்கு தெரிவிப்பது?, அந்தப் புகார் எவ்வளவு நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் அவ்வாறு தீர்க்கப்படவில்லை என்றால் வங்கி நமக்கு தரவேண்டிய இழப்பீடு என்ன என்பதை சிறப்புடன் கொடுத்துள்ளனர்.

பாதுகாப்பு!

அதிக வட்டி தருவதாகவும், கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறியும் ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து விலகியிருக்க அறிவுறுத்துகிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஆர்பிஐ, செபி போன்ற அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற அல்லது இவற்றின் பதிவுபெற்ற அமைப்புகளிடம் மட்டுமே நமது முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை எச்சரிக்கையாக வலியுறுத்துகிறது இந்தப்பகுதி. மேலும், பொய்யான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை நம்பி நமது வங்கிக்கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு விபரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் ஆர்பிஐ மற்றும் வங்கிகள் ஒருபோதும் இவ்வாறான தகவல்களை வாடிக்கையாளர்களிடம் கேட்பதில்லை என்பதையும் சொல்லியுள்ளனர். குறுஞ்செய்தி, பத்திரிகை, பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் வாயிலாக நிதி மோசடிகள் தொடர்பான பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஆர்பிஐ தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

வங்கி, சேமிப்பு, முதலீடு போன்ற நிதி தொடர்பான எவ்வித அடிப்படை விஷயங்களும் தெரியாதவர்கள் கூட, எளிதில் இவை அனைத்தையும் அறிந்துக்கொள்வதற்கான அத்துனை அம்சங்களையும் உள்ளடக்கியது இந்தப் படைப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in