Published : 14 Sep 2015 12:47 PM
Last Updated : 14 Sep 2015 12:47 PM

உன்னால் முடியும்: வெற்றிபெற வைத்த உழைப்பின் வண்ணம்

தேனி பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜுலு. மதுரையில் பிஎஸ்இ கெமிஸ்ட்ரி பட்டம் படித்து, சிவகாசியில் அனுபவம் பெற்று, சென்னையில் தொழில் செய்து வருகிறார். ப்ளூட்போர்டு ஸ்கீரின் பிரிண்டிங்கில் தனது தனித்திறமை மூலம் வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்ந்து நிற்கிறார்.

வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் நோ பார்க்கிங் போர்டு தயாரிப்பதில் சென்னையில் பெரிய சந்தையை வைத்துள்ளார். வணிக வீதி வாசகர்களுக்காக இந்த வாரம் அவரது தொழில் அனுபவம் இடம்பெறுகிறது.

பள்ளிக்கூட காலத்திலிலேயே பல்வேறு வேலைகள் செய்துள்ளேன் என்கிற அறிமுகத்தோடு பேசத் தொடங்கினார் கோவிந்தராஜூலு.

பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு நாள்கூட சும்மா வீட்டில் இருந்ததில்லை. உறவினர் ஒருவர் சிவகாசியில் அச்சகம் வைத்திருந்ததால் அங்கு வேலைகளுக்குச் சென்று விடுவேன். அச்சகத்தில் அந்த வயதிலேயே கட்டிங் வேலைகள் செய்துள்ளேன்.

மதுரையில் கல்லூரி படிப்பு. பிஎஸ்இ கெமிஸ்ட்ரி படித்தேன். அப்போதும் நேரம் கிடைக்கும்போது அச்சக வேலைகள் செய்த பணத்தில்தான் படித்தேன். கெமிஸ்ட்ரி படித்ததால் பயன்பாட்டு கெமிக்கல்கள், கலர் சேர்க்கைகள் போன்றவற்றில் இயல்பாகவே ஆர்வம் உருவானது. படித்து முடித்ததும் சிவகாசியில் ஒரு ஸ்கீரின் பிரிண்டிங் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தவிர நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே போட்டோ ஷாப், கிராபிக்ஸ் டிசைன் போன்ற வடிவமைப்பு சார்ந்த வேலைகளையும் கற்றுக் கொண்டேன்.

படித்து முடித்த பிறகு சிவகாசியில் எட்டு மாதங்கள் ஸ்கீரின் பிரிண்டிங் வேலை செய்த அனுபவத்துக்குப் பிறகு சென்னைக்கு வேலை தேடி வந்தேன். ஒரு நிறுவனத்தில் டிசைனராக வேலை கிடைத்தது. அந்த வேலையை இரண்டு ஆண்டுகள் செய்தேன்.

தெரிந்த வேலையை கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும் என திட்டமிட்டேன். கையிலிருந்த முதலீட்டைக் கொண்டு சின்னதாக ஸ்கீரின் பிரிண்டிங் வேலைகளை தொடங்கிவிட்டேன்.

நானே டிசைனர் என்பதால் வாடிக்கை யாளர்களுக்கு பிடித்த வகையில் வேலை செய்ய முடிந்தது. ஆரம்ப முதலீடு பதினைந்தாயிரம் ரூபாய்தான். தொடர்ந்து சின்ன சின்ன விளம்பர ஏஜென்சி நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கியது. இந்த தொழிலை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் நேரடியாக தேடிவருவது ஒரு வகை என்றால், விளம்பர ஏஜென்சி நிறுவனங்கள் அவர்கள் எடுக்கும் ஆர்டர்களுக்கு ஏற்பவும் வேலை கிடைக்கும்.

முக்கியமாக ப்ளூட்போர்டு பிரிண்டிங், அக்ரலிக் ஷீட் பிரிண்டிங் உள்ளிட்ட பல போர்டுகளில் பெரிய வேலைகள் மட்டுமல்ல, ஐடி கார்டு ரோப் வரையிலும் ஸ்கீரின் பிரிண்டிங் செய்து தந்தேன்.

ஆர்டர்கள் வர வர தி.நகரில் சின்னதாக ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து நிறுவனத்தை நடத்தி வந்தேன். தற்போது திருவல்லிக்கேணியில் எனது வேலைகளுக்கு ஏற்றதுபோல ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன். தற்போது பிரிண்டிங் தவிர, இதற்கு தேவையான மையை சொந்தமாக நானே தயாரித்துக் கொள்கிறேன். பிற ஸ்கிரீன் பிரிண்டர்கள் ரெடிமேடான மையை வாங்கி பயன்படுத்துவதற்கும் எனது மைக்கும் வித்தியாசம் இருக்கும். தேவைக்கு ஏற்ப எந்த காம்பினேஷனிலும் மையை தயார் செய்து கொள்கிறேன். இதனால் எனது எண்ணத்துக்கு ஏற்ப வேலை செய்ய முடிகிறது.

பொதுவாக இந்த தொழில் வொயிட் காலர் ஜாப் என்கிற வகையில் இருக்காது. வண்ணங்களுடன் புழங்குவதால் இடமும் பல வண்ண கலவையாக இருக்கும். இதை வெளியிலிருந்து பார்ப்பவர் களுக்கு தொழிலின் மீது பெரிய மதிப்பு இருக்காது.

ஆனால் சரியான பிசினஸ்மேன்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு தொழில் புரியும் இடம் இப்படித்தான் இருக்கும் என்கிற புரிதல் இருக்கும் அதுதான் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.

தவிர இந்த தொழிலை பொறுத்தவரை எங்கும் தேடிப்போய் ஆர்டர் எடுக்க வேண்டிய தேவையில்லை. நமக்கு ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களே புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வருவார்கள். தவிர எனது இணையதளம் மூலமும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்

தற்போது எட்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறேன். அடுத்த கட்ட தொழில் முயற்சியாக வண்ணக் கலவை விற்பனை செய்வதற்கான திட்டத் தையும் வைத்துள்ளேன்.

போட்டிகள் இருந்தாலும், புதியதாக செய்தால் தனித்து தெரிவோம் என்பதுதான் எனது அனுபவம் கற்றுக் கொடுத்துள்ள பாடம் என்கிறார் கோவிந்தராஜூலு.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x