உயிர் பறிக்கும் பொருளாதார நெருக்கடி

உயிர் பறிக்கும் பொருளாதார நெருக்கடி
Updated on
2 min read

riyas.ma@hindutamil.co.in

சென்ற ஆண்டில் 1.4 லட்சம் அளவில் இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறுகிறது சமீபத்தில் வெளியான தேசிய குற்றப் பதிவுகள் அறிக்கை. பெரும்பாலான தற்கொலைகளுக்கு குடும்பப் பிரச்சினை, திருமண விவகாரங்கள், காதல் விவகாரங்கள் முதன்மையான காரணங்களாக கூறப்படுகின்றன. அதேபோல், பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, கடன் சுமை, போதைப் பழக்கம் போன்றவற்றின் காரணமாகவும் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்ந்துவருகின்றன. குடும்பக் காரணங்களைவிட பொருளாதார காரணங்களால் நிகழும் தற்கொலைகள் நாடு எதிர்கொண்டுவரும் அபாயகரமானச் சூழலை உணர்த்துபவையாக உள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் 9,052 தொழில் முனைவோர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2018-ம் ஆண்டில் பதிவான தொழில் முனைவோர்களின் தற்கொலை எண்ணிக்கையை விட 13 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு ‘கஃபே டே’ நிறுவனர் சித்தார்த்தா நீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தொழில் முனைவோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்தார்த்தா பிரபல நபர் என்பதால் அவரது தற்கொலைச் செய்தி தேசிய செய்தியாக மாறியது. ஆனால், பொருளாதார நெருக்கடி, கடன் தொல்லை, தொழில் முடக்கம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சிறு, குறு தொழில் முனைவோர்கள் பற்றிய தகவல்கள் பொதுக் கவனத்துக்குப் பெரிதாக வருவதில்லை.

‘கடன் சுமையால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை’ என்பது பழகிப்போன செய்தியாகவே மாறிவிட்டது. சென்ற ஆண்டில் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் 12 சதவீதம் பேர் சுய தொழில் செய்பவர்களாகவும், 23 சதவீதம் பேர் தினக்கூலி பெறுபவர்களாவும் உள்ளனர். குடும்பப் பிரச்சினை, உறவுச் சிக்கல்கள் போன்றவை தனிநபர் சார்ந்த காரணங்களாக உள்ளன. ஆனால் பொருளாதார நெருக்கடி ஒருவரை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது என்றால், அதற்கு அரசாங்கமும் ஒரு பொறுப்பாகிறது. இவ்வகைத் தற்கொலைகள் ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பின் தோல்வியையே பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் தற்கொலைக்கான காரணங்களில் வேலையின்மை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்ற ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் 10 சதவீதம் பேர் வேலைவாய்ப்பற்றவர்கள். குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குப்பட்டவர்களே வேலையின்மையால் அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஏற்கெனவே பல்வேறு சமூகக் காரணிகள் மக்களிடம் எளிதில் மன அழுத்தத்தை உண்டாக்கிவிடுகின்றன.

இந்தச் சூழலில் பொருளாதார நிலையும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும்போது சாமான்யர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடுகிறது. வாழ்க்கையின் மீதான பிடிப்பையும் இழக்கச் செய்கிறது. இளைஞர்கள் மிக இளம் வயதிலேயே வெறுமைக்கும் விரக்திக்கும் உள்ளாகி, அதன்விளைவாக எளிதில் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகின்றனர். போதைப் பழக்கத்தினால் நிகழும் தற்கொலை எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி இருக்கிறது.

சென்ற ஆண்டில் மட்டும் 7,860 பேர் போதைப் பழக்கத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமீப ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்களிடையேயும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இவை அனைத்துக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வும், வேலையின்மையும் முதன்மையான காரணிகளாக உள்ளன. தற்கொலை செய்திகள் வரும்போதெல்லாம் அதை கோழைத்தனம் என்று கடந்துவிடுவதால் ஒருபோதும் அதற்கு தீர்வு காண முடியாது. ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் சமூகப் பொருளாதார காரணிகளை ஆராய்வதும், அவற்றை மாற்ற முயல்வதுமே முறையான அணுகுமுறையாக இருக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in