யாருமில்லா அறைகள்

யாருமில்லா அறைகள்
Updated on
2 min read

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

சீனாவைக் கடந்து பிற நாடுகளுக்கு கரோனா பரவத் தொடங்கியதும், அதன் தீவிரம் முதலில் எதிரொலித்தது சுற்றுலாத் துறையில்தான். மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணப்படுதலே கரோனா பரவலுக்கு முக்கியமான காரணம் என்று உலக நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடியபோது ஏனைய துறைகளைவிடவும் சுற்றுலாத் துறை உடனடியாக வருவாய் இழப்பை எதிர்கொண்டது. இந்தியாவில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருகிற நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இந்திய சுற்றுலாத் துறை ரூ.15 லட்சம் கோடி அளவில் வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்று இந்திய சுற்றுலாத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் இந்தியாவின் ஜிடிபியில் சுற்றுலாத் துறை 10 சதவீதம் அளவில் பங்கு வகிக்கிறது. மொத்தமாக சுற்றுலாத் துறை 4.5 கோடி பேருக்கு மேலாக வேலை வாய்ப்பு அளிக்கிறது. இது கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புகளில் 8 சதவீதம் ஆகும். இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புகளில் எட்டில் ஒன்று நேரடியாகவோ மறைமுகவோ சுற்றுலாத் துறையை சார்ந்திருக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பானது அதைச் சார்ந்து இயங்கும் பல்வேறு சிறு, குறுந் தொழில்களை மிக மோசமாக பாதித்துள்ளது.

மலைப் பிரதேசங்கள், பனிப் பிரதேசங்கள், பாலை நிலங்கள், தொன்மை வாய்ந்த நிலங்கள் என பலதரப்பட்ட கலவையான நிலப்பரப்புகளையும் ஆன்மீகம், இயற்கை மருத்துவம், நாட்டுப்புற கலைகள், யோகா என பலவிதமான கலாச்சார செறிவுகளை உள்ளிடக்கிய நாடு இந்தியா. அந்தவகையில் உலகளாவிய அளவில் இந்தியா முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறிவருகிறது. சுற்றுலாவுக்காக இந்தியா வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவருகிறது. 2014-க்கு பிறகு மட்டுமே சுற்றுலாத் துறை தொடர்பாக 1.5 கோடிக்கு மேலாக வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இந்தச் சூழலில் கரோனா பரவல் சுற்றுலாத் துறைக்கு பெரிய பாதிப்பைத் தந்துள்ளது.

சுற்றுலாத்துறை என்பது தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், கைவினைப் பொருட்கள், அந்தந்த பிராந்தியங்கள் சார்ந்த தயாரிப்புகள் என பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது.

தங்கும் விடுதிகளை எடுத்துக்கொண்டால் சுற்றுலாவுக்கான மாதங்கள் தவிர்த்து அவ்விடுதிகளில் வாடிக்கையாளர்கள் வருகை மிகக் குறைவானது. சுற்றுலா காலகட்டங்களில் மட்டுமே அவை வருமானம் ஈட்டும். இந்தியாவைப் பொருத்தவரையில் பள்ளி விடுமுறை காலகட்டமான ஏப்ரல், மே மாதங்கள் சுற்றுலாவுக்கானது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்காணல் இந்த மாதங்களில் அலை மோதும். ஆனால்இந்த ஆண்டு அவை அனைத்தும் வெறிச்சோடிக்கிடக்கின்றன. நாடு முழுவதுமுள்ள சுற்றுலாத் தளங்களில் உள்ள விடுதிகள் பயணிகளில் அற்று தனித்து இருக்கின்றன.

தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிற நிலையில் கோவா போன்ற சுற்றுலா நகரங்களில் விடுதிகளை குறிப்பிட்ட சதவீத அளவில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. தங்கும் விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டால் தொழில் நிமித்தமாக பயணப்படுபவர்கள் வருகை அதிகரிக்குமே தவிர, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏனென்றால், அன்றாட வேலைகளுக்காக பொது இடங்களுக்கு செல்வதே அச்சத்துக்குரியதாக உள்ள தற்போதைய சூழலில் சுற்றுலாவுக்காக பயணம் செய்வதை மக்கள் விரும்புவார்களா என்பது சந்தேகம்தான். தவிரவும், சுற்றுலா என்பது ஓய்வுடன், பொருளாதார தன்னிறைவுடன் தொடர்புடையதாக உள்ளது. அந்த வகையில் தற்போது பலரும் வேலையிழப்பைச் சந்தித்தும், வருவாய் இழந்தும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகிற நிலையில் சுற்றுலாவுக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இத்தகைய சூழலில் இந்த ஆண்டு இறுதிவரையில்சுற்றுலாத் துறை மீள்வதற்கான வாய்ப்பில்லை என்பதே அத்துறையினரின் கருத்தாகவும் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in