Published : 31 Aug 2020 08:47 AM
Last Updated : 31 Aug 2020 08:47 AM

வங்கி சீர்திருத்தம் ஏன் அவசியம்?

ஓவியம்:முத்து

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

கரோனா உலகப் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டிருக்கிறது. அரசுகளின் கஜானாக்கள் வருவாய் இன்றி காலியாக உள்ளன. ஒவ்வொரு தனிநபரின் நிதி நிலையும் மோசமாகியுள்ளது. பலரின் வருமானம் பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கி சென்றிருக்கிறது. பெரும்பாலானோர் பூஜ்யத்தி லிருந்து மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.

இந்த அனைத்து நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரத்தையும் மக்களையும் மீட்டெடுக்க வங்கிகளால் மட்டுமே முடியும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஏனெனில் ஒரு நாட்டின் பொருளாதார மையமாக வங்கிகளே உள்ளன. இந்தக் கரோனா பாதிப்பு சூழலில் அரசே வங்கிகளின் கையை எதிர்பார்த்துதான் நிற்கிறது.

எனவேதான் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து வங்கிகளையும், வங்கிகளின் செயல்பாடுகளிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் வங்கிகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார். வங்கிகள் நிர்வாகக் கட்டமைப்பும், அதன் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நடைமுறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக கடன்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தின் சுழற்சியை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்துவருகின்றன. இந்தியாவின் கடன் சந்தை கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு
வங்கித்துறை பல்வேறு முன்னேற்றகரமான மாற்றங்களைக் கண்டது. டிஜிட்டல் பேங்கிங் மிக முக்கிய அம்சமாக வளர்ந்தது.

மக்களிடையே விழிப்புணர்வு

வங்கி சார்ந்த மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றில் சிறப்பான மாற்றங்கள் உண்டாயின. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டமும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் வங்கித்துறையை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தன. அதன்பிறகு முன்னெப்போதும் விட வங்கிகள் வலுவாக மாறின.

வங்கி சேவைகள், கடன்கள் குறித்து விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்தது. இதன்மூலம் மக்கள் வெளியில் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி நெருக்கடிக்குள்ளாவது போன்ற பிரச்சினைகள் வெகுவாகக் குறைந்தன.

ஆனால், தற்போது மீண்டும் மக்கள் வங்கிகளுக்கு வெளியே தங்களின் நிதித் தேவைகளுக்காக கையேந்த வேண்டிய நிலையை கரோனா பாதிப்பு உருவாக்கியுள்ளது. இப்போது மக்களை வங்கிகள் கைவிட்டால் அது மிகப்பெரிய விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும். மீண்டும் கடன் சந்தை மோசமாக வாய்ப்புள்ளது. மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருப்பதையும் பிடுங்கும் கூட்டத்தின் அட்டகாசமும் அதிகரித்துவிடும். சமீபத்தில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் சில ரிசர்வ்வங்கி உத்தரவையும் மீறி கடன்களைத்
திருப்பிச் செலுத்த சொல்லி வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாகச் சர்ச்சை ஆனது செய்திகளில் வெளியானது. இந்தப் புள்ளியிலிருந்துதான் வங்கிகளின் சீர்திருத்தத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது.

வங்கிகள் நினைத்தால்...

ஒவ்வொரு தனிநபரும் தங்களின் நிதிநிலை, மற்றும் பாதிப்புக்கும் ஏற்ப பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள். வங்கிகள் குறிப்பாக தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

காரணம், மக்களின் வருமானம் குறைந்துள்ளது. ஆனால், பெரும்பாலான பொருட்கள், சேவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களும் மொபைல் சேவைக்கான கட்டணங்களை உயர்த்தப் போவதாகக் கூறியுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் கட்டணங்களை உயர்த்தும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவ செலவுகளும் அதிகரிக்கிறது. இத்தனை சவால்களையும் கடந்து மக்கள் வாழ்ந்தாக வேண்டும். எனவே வங்கிகள் எல்லோருக்குமானதாகத் தீர்வுகளைத் திட்டமிட வேண்டியிருக்கிறது. வங்கிகள் நினைத்
தால் பொருளாதாரத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் நிதி தேவை என்ன என்பதைக் கேட்கும் வகையிலான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

வங்கிகள் இதுவரை திருப்பிச் செலுத்தும் சக்தியை வைத்து கடன்களை வழங்கிவந்தன. சொல்லப்போனால் கடன் தேவைப்படாதவர்களுக்கும் துரத்தி துரத்தி கடன் வழங்கிவந்தன. உண்மையில் இப்போதுதான் மக்களின் நிதி தேவை அதிகரித்துள்ளது. அவர்களுடைய நிதி நிலையைப் புரிந்து நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள். வங்கிகளால் வழங்க முடிந்த தீர்வுகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

குறுகிய கால கடன் திட்டங்கள்

புதிய கடன் திட்டங்களைத் திட்டமிடுவது. கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாக இருக்கும் நிதிநிலையில் இருப்பவர்களுக்கான கால அவகாசம், நீண்டகால கடன்களுக்கான வட்டி குறைப்பு, போன்ற மாற்றங்களைச் செய்யலாம். மேலும் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது, அடமானக் கடன் போன்றவற்றில் கூடுதல் கால அவகாசம் அளித்தல், வங்கி வைகளுக்கான கட்டணங்களைக் குறைத்தல், கடன்களுக்கான செயல்முறைகளை எளிதாக்குதல் போன்றவையும் செயல்படுத்தலாம். முக்கியமாக குறுகிய கால கடன் திட்டங்கள் காலத்தின் அவசியமாக இருக்கின்றன.

வங்கிக் கடன்கள் ஏற்கெனவே உள்ள நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்கும் வகையிலான கடன்களாக இல்லாமல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கு வழக்கமான வட்டி விகிதங்கள், வழக்கமான விதிமுறைகள் ஆகியவற்றையே பின்பற்றாமல் சில தளர்வுகளுடன் கடன்களைத் திட்டமிட வேண்டும். அதேபோல் கடன்களைத் திரும்பச் செலுத்தும் விதத்திலும் மாற்றங்கள் தேவை. எந்த நேரத்திலும் கடனை அடைப்பது எளிதாக இருக்க வேண்டும்.

கரோனா பேரழிவை கடந்து வந்த மக்கள் நிதி சார்ந்த பேரழிவுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமெனில் வங்கிகள் தங்களின் பொறுப்பை உணர வேண்டிய நேரம் இது. ஆனால் சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் தயாராக இருக்கிறதா வங்கித் துறை?

அதிகரிக்கும் வாராக்கடன்

கரோனாவுக்குப் பிறகு வங்கித் துறையின் செயல்பாடுகளே தலைகீழாக மாறியுள்ளது. வங்கித் துறையின் செயல்பாடுகள், ஊழியர்களின் பணி கட்டமைப்பு, வாடிக்கையாளர்களின் நிதி நிர்வாகம் ஆகிய அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வங்கிகளின் டெபாசிட் அதிகரித்து, கடன்கள் வாராக்கடன்களாக மாறும் சூழலும் உண்டாகியிருக்கின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்
பட்டுள்ள ஆறு மாத கடன் தவணை ஒத்திவைப்பு வசதியினால் வங்கிகளுக்கு லாப இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான கடன்கள் வாராக்கடன்களாகும் நிலை உண்டாகியுள்ளது.

ஆனாலும் வேறு வழியில்லை வங்கிகள் சில சீர்திருத்தங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் அரசும், ரிசர்வ் வங்கியும் ஈடுபட்டுள்ளது. கேவி காமத் குழு இதுதொடர்பாக அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. வங்கிகள் தங்களின் நிதி நிலை, கடன்கள் போன்றவற்றை ஆராய்ந்து சீர்திருத்தங்கள் குறித்த தங்கள் அறிக்கையைச் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நீண்டகால கடன்களில் மாற்றம்

வங்கிகளும் கடன்கள் வாராக்கடன்களாக ஆகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றன. எனவே மாற்றங்களைக் கொண்டு வர தயாராக இருக்கின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டதுபோல் கடன் தவணை ஒத்திவைப்பை இரண்டு வருடங்
களுக்கு அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளன. ஏற்கெனவே 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பு வசதி வழங்கப்பட்டதன் காரணமாக கடன் தவணை காலம் 14 மாதங்கள் கூடுதலாகியுள்ளது. மேலும் இந்த வசதியை நீட்டிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளன. மேலும் கடன்களில் ஏற்படுத்தக்கூடிய தளர்வுகளும் அவற்றின் வட்டி சார்ந்தே தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளன. நீண்டகால கடன்களில் மாற்றங்களைக்கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மிகப் பெரிய அழுத்தம்

கடன்களை மறுசீரமைப்பு செய்ய வங்கிகளின் கடன் - பங்கு இடையிலான விகிதம், மற்றும் ரியல் எஸ்டேட், ஏவியேஷன் போன்ற துறைகளுக்கு வங்கிகள் கொடுத்துள்ள கடன் உள்ளிட்டவைஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ள ரூ.1500 கோடிக்கும் அதிகமான கடன்களும் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் குரலுக்கும் செவிசாய்த்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

வங்கிகள் இதுவரையிலான சாதகமான சூழலில் அடைந்த வளர்ச்சி மற்றும் லாபத்தை இந்த கரோனா பாதிப்பு நெருக்கடியிலிருந்து பொருளாதாரமும், மக்களும் மீண்டுவர பயன்படுத்தலாம். ஆனால், வங்கிகள் அனைத்துமே இந்தகரோனா நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவும் நிலையில் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல பொதுத்துறை வங்கிகளின் சேவைகளே இன்னும் தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில் பின்தங்கித்தான் இருக்கிறது. வங்கிகள் பலவும் பல காலாண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வருகின்றன. மேலும் வாராக்கடன் என்பது மிகப்பெரும் அழுத்தமாக இருக்கிறது.

கூடுதல் பொறுப்பு

எனவே பல்வேறு சவால்களுக்கு மத்தியில்தான் வங்கிகளின் சீர்திருத்தங்கள் திட்டமிடப்பட வேண்டும். அனைத்து சாதக, பாதகங்களையும் திட்டமிட்டு, தற்போதைய நெருக்கடி நிலையைச் சரி செய்ய முடிந்த அனைத்து விதமான முயற்சிகளையும் அரசும், ரிசர்வ்வங்கியும் செயல்படுத்த வேண்டும். அதற்கு வங்கிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொருளாதாரம், மக்கள்,
வங்கிகள் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்தவை. வங்கிகள்மேலும் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டிய தருணம் இதுதான். எனவேதேவையான அனைத்து சீர்திருத்தங்களையும் வங்கிகள்முயற்சிக்கலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x