Last Updated : 14 Sep, 2015 12:29 PM

 

Published : 14 Sep 2015 12:29 PM
Last Updated : 14 Sep 2015 12:29 PM

குறள் இனிது: சமயம் பார்த்து அடிக்கணும்!

சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. தனது மனைவி கண்ணகியின் மாணிக்கச் சிலம்பை விற்பதற்கு மதுரைக்கு வரும் கோவலன் ஒரு பொற்கொல்லனைச் சந்திக்கிறான். அரசியின் முத்துச் சிலம்பைத் திருடியிருந்த அந்தப் பொற்கொல்லன் கோவலனை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு அரண்மனைக்குச் செல்கிறான். அங்கு அந்தப்புரம் சென்று கொண்டிருக்கும் அரசனிடம் சிலம்புடன் திருடன் பிடிபட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது.

மன்னன் அவனிடம் அச்சிலம்பு இருந்தால் அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருமாறு ஆணை இடுகிறான். இதனால் வாழ்தல் வேண்டி மதுரை வந்த கோவலன் அங்கு அநியாயமாகக் கொல்லப்படுகிறான். உண்மை அறிந்த பின்னர் பாண்டிய நெடுஞ்செழியன் “நானோ அரசன்? நானே கள்வன்!” என உயிர் துறக்கிறான். சற்றே எண்ணிப் பாருங்கள்!

நீதி தவறியது அறிந்ததும் துடித்து இறந்த மன்னன் முன்னர் கோவலனைக் கொல்லச் சொல்லியது ஏன்? எப்படி? அரசவையில் முறையாக விசாரணை நடந்திருந்தால் அப்பெருந்தவறு நடந்திருக்குமா?

இவ்வளவு அநியாயங்களும் நடக்கக் காரணம் பொற்கொல்லன் சாமர்த்தியமாக மன்னனை ஏமாற்றி ஆணை பெற்றதுதானே? அரசியை சமாதானம் செய்ய அவசரமாக அந்தப்புரம் செல்லும் மன்னன் எந்த மனநிலையில் இருந்திருப்பான்? இதில் நமக்குக் கிடைக்கும் செய்தி நீதி பிறழாத அரசனையும் நேரம் பார்த்து அணுகியதால் தவறான அரசாணை கிடைத்தது என்பதுதான்!

அறிவிலும் ஆற்றலிலும் வீரத்திலும் சிறந்தவர்களைச் சாதாரணமாக வெல்ல முடியாது. அப்படியானால் அவர்களை வெற்றி பெறுவது எப்படி? வள்ளுவர் அதற்கு ஒரு நல்ல உவமையுடன் வழிகாட்டுகிறார். காக்கை தன்னை விட வலிமையான ஆந்தையை பகல்பொழுதில் வென்றுவிடும். அதைப் போல நாம் எதிரிக்கு பலவீனமான நேரத்தில் மோதினால் வெற்றி கொள்ளலாம் என்கிறார்!

இதை நாம் அன்றாட வாழ்க்கையிலும் பார்க்கலாம். சமீபத்தில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேயின் மாகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நோர் (Knorr) போன்ற மற்ற நூடுல்ஸ் நிறுவனங்கள் விற்பனையை உயர்த்தக் களம் இறங்கி உள்ளன. சந்தைப் படுத்துதலோ, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையோ, சரியான சமயத்தில் இறங்கினால் கிடைக்காததெல்லாம் கூடக் கிடைக்கும்!

இவ்வளவு ஏன், நானும் டெல்லி, பெங்களுர், சென்னை என்று பல ஊர்களில் பணிபுரிந்து இருக்கிறேன். வீட்டு வேலை செய்பவர்கள் சாதாரணமாக மாத முடிவில், வருட முடிவில் சம்பளம் உயர்த்தச் சொன்னால் மறுத்து விடுவோம். ஆனால் வீட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களிலோ, அல்லது ஒரு வாரம் பத்து நாட்களுக்கு விருந்தினர் வந்திருக்கும் பொழுதோ, “சம்பளத்தைக் கூட்டிக்கொடுத்தால் தான் வருவேன், இல்லாவிட்டால் வேறு ஆள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னால் உடனே ஒப்புதல் கிடைத்துவிடும்.

வள்ளுவர் சொல்லும் வழி மிக யதார்த்தமானது. எதிரியின், போட்டியாளரின் பலங்களைப் பார்த்து அசராதே, அவரது பலவீனமான நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை வெற்றி கொள் என்கிறார்!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது -குறள் 481

somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x