

ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ கார் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படும் காராக எவ்வாறு மாறியது என்பதை குறித்த B.V.R சுப்பு அவர்களின் புத்தகம் இதில் காரை பற்றி மட்டுமல்லாமல் நிறுவனத்தின் செயல்பாடுகள், தலைமைக்குழு உறுப்பினர்கள், தயாரிப்பு கருத்துருவாக்கம் ,கார் வெளியீடு, இந்த முயற்சியில் ஹூண்டாய் நிறுவனம் எதிர்கொண்ட தடைகள் மற்றும் அதன் வெற்றி ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது.
மாருதி மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்திய கார் சந்தையில் ஏகபோக நிலைமை இருந்தது. அதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசாங்கமும் சற்று கூடுதல் சலுகைகளை மாருதிக்கு வழங்கியது என்னவோ உண்மைதான். புதிய நிறுவனங்கள் எதுவும் நுழைய முடியாத வகையில் பல்வேறு தடைகள் இருந்து வந்தன .மிகப்பெரும் ஜாம்பவான்களான டாடா நிறுவனம் கூட கனரக வாகனங்களில் மட்டுமே வெற்றியை காண முடிந்தது.
தாராளமயமாக்கலுக்கு பின்பு ,சந்தை அனைத்து வகை நிறுவனங்களுக்கும் திறந்து விடப்பட்ட பின்னர் பல்வேறு வகையான உற்பத்தியாளர்களும் இந்திய சந்தையில் கால் வைக்க விரும்பினர். ஹூண்டாய் நிறுவனமும் அவற்றில் ஒன்று.
ஹூண்டாய் இந்தியாவில் தனது செயல்பாடுகளை, உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு வசதியுடன் தொடங்க விரும்பியபோது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர்என்ற இடத்தில் உரிய நிலங்களை வழங்கி, தொழிற்சாலை தொடங்குவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது அப்போதைய தமிழக அரசு.
கொரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் இந்தியர்கள் அடங்கிய தலைமைக்குழு முன்னணியில் இருந்து வழிநடத்தி கட்டுமானம், உற்பத்தி, பயிற்சி மற்றும் கார் வெளியீடு ஆகியவை திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் நடத்தப்பட்டது நிறுவனம் எதிர்பார்க்காத ஒன்றாகும். ஆரம்பகாலத்தில் எதிர்பார்த்தபடி விற்பனை சூடு பிடிக்கவில்லை என்றாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைப்பு நடவடிக்கைக்காக நீதிமன்ற உற்பத்தியாளர்களையூரோ விதிமுறைகளை பின்பற்றும் படி உத்தரவிட்ட போது ஹூண்டாய் பயன் அடைந்தது.
ஹூண்டாய் தயாரித்த கார்கள் மேம்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும் பல்வேறு தடைகள் இருந்தன. இந்தியாவில் தனது நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்னால் ஹூண்டாய் அமெரிக்கா மற்றும் கனடா சந்தைகளில் இயங்கிக்கொண்டிருந்தது என்றாலும் அதன் தரம் மற்றும் நிறுவனத்தை பற்றிய இமேஜ் காரணமாக வாடிக்கையாளர்களின் ரெஸ்பான்ஸ் மோசமாகவே இருந்தது. இதனுடைய தாக்கம் இந்திய சந்தைகளிலும் நீட்டித்தது .வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு மிகவும் யோசித்தனர்.
இதைத்தவிர விநியோகஸ்தர்களும் ஏஜென்சி எடுப்பதற்கு தயாராக இல்லை. அவர்களது கருத்துகளை மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அரசாங்க அமைப்பு, சட்ட திட்டங்கள், விதிக்கப்பட்ட தடைகள் அவற்றோடு வாழப் பழகிக் கொண்டால் தான் ஹூண்டாய் இந்த வெற்றியை பெற முடிந்திருக்கிறது .தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் சேவையில் எந்த ஒரு வாடிக்கையாளரும் அதிருப்தி அடைந்தால் உடனடியாக நிறுவனத்தை தொடர்பு கொள்வதை உறுதி செய்தது. இவை அனைத்தும் டீலர் அமைப்பை சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தது. சான்ட்ரோ கார் இந்திய வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உருவான தயாரிப்பு.
அதற்கு காரணம் மற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களைப் போலல்லாமல் இறக்குமதிகளை நம்பாமல் கூடுமானவரை உள்நாட்டிலேயே பல உதிரி பாகங்களை தயாரிக்கவும் வாங்குவதற்கும் முடிவு செய்தது. மேலும் மாருதி பயன்படுத்திய பல்வேறு உத்திகளையும் தங்களது நிறுவனத்தில் பின்பற்றினர். அதே நேரத்தில் அவர்கள் விட சிறப்பாகவும் திறமையாகவும் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இதன் விளைவாக உரிய காலத்தில் 10 லட்சம் கார்களை சான்ட்ரோ விற்க முடிந்தது. மேலும் நிறுவனம் முழுமையான செயல்பாடுகளை ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே லாபகரமாக. இயங்கி வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரிய கார், அல்ஜீரியா, ஜிம்பாப்வே, மேற்கு ஐரோப்பிய வட அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையை பொறுத்தளவில் ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் மட்டுமே ஆளுமை கொண்டிருந்த தொழில்துறையில் மிகப் பெருமளவில் அறிமுகம் இல்லாத கொரிய நிறுவனத்தை எப்படி நிறுவ முடிந்தது என இதுவரை சொல்லப்படாத கதையை வெளிப்படுத்துகிறது. ஒரு புதிய சந்தையில் புதிய தயாரிப்பை அறிமுகப் படுத்தும்போது உருவாகும் சிலிர்ப்புகள் , சவால்கள் போட்டியை தூக்கி எறிவதற்காக எடுக்கப்பட்ட வணிக முடிவுகள் சுவாரசியமானவை. சீனாவின் மா சே துங் சித்தாந்தங்களையும்புத்தகத்தில் ஆங்காங்கே பரவலாகப் பார்க்கமுடிகிறது.
தனது தொழில் துறை வாழ்க்கையை டாடா மோட்டார்ஸில் தொடங்கியதால் பல இடங்களில் டாடா மோட்டார்ஸ் மீது தனது அன்பை வெளிப்படுத்துகிறார் அதே நேரத்தில் மாருதி மீது வெறுப்பையும் காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் தனது தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை போட்டி நிறுவனங்களுக்கு எதிராக நேரடியாகத் தயாரித்த முதல் நிறுவனங்களில் ஒன்றாகும், இது இந்திய விளம்பரத்தில் ஒரு புதிய போக்கு. ஒரு நிறுவனத்திற்கு தேவையான வேகம், தீவிரம், தொழில்நுட்ப வலிமை ஆகியவற்றை கொண்டதோடு மார்க்கெட் லீடராக விளங்கிய மாருதியை போட்டியில் சந்தித்ததோடு வாடிக்கையாளர்களின் வாங்கும் நடத்தை மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றின் அடிப்படையில் சந்தையை சான்ட்ரோ ஒரு கலக்கு கலக்கியது என்பதில் சந்தேகமில்லை.
இது விற்பனை, சந்தைப்படுத்தல், டீலர்ஷிப், நிதி, போட்டி, மனிதவளம், தொழில்நுட்பம், விளம்பரம், பிராண்டிங் மற்றும் உத்திகள் பற்றிய புத்தகம் மட்டுமல்லாமல் ஒரு கார் மற்றும் காரை உற்பத்தி செய்யும் நிறுவனம் பற்றியுமான ஒரு புத்தகம். ஒவ்வொரு சிறிய காரணிகளும் வெற்றிக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. கார்ப்பரேட் போட்டி, சதி மற்றும் ஊடகங்களின் பயன்பாடு ஆகியவை சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமல்ல, வணிகம் செய்பவர்களும் வணிகத்தைப் பற்றி அறிய விரும்புபவர்களும் இந்த புத்தகத்திலிருந்து பயனடையலாம்.
சுப. மீனாட்சிசுந்தரம்
somasmen@gmail.com