Published : 17 Aug 2020 10:20 am

Updated : 17 Aug 2020 10:23 am

 

Published : 17 Aug 2020 10:20 AM
Last Updated : 17 Aug 2020 10:23 AM

எங்கே செல்கிறது தங்கம்: இப்போது முதலீடு செய்யலாமா?

gold-rates

எது மாறினாலும் ஏன் தங்கம் மட்டும் இன்னும் அதன் மதிப்பை இழக்காமலே இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் உண்டு. குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு என்பது கலாசார ரீதியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஒரு காலத்தில் ராஜ வர்க்கத்தினர் மற்றும் பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த தங்கம் சாதாரண மக்களிடமும் புழங்க ஆரம்பித்தது.

அதன் பிறகு அதன் வர்த்தகமும் பெரிய அளவில் விரிந்தது. திருமணம், விசேஷ நாட்கள், கொண்டாட்டங்கள், பரிசுகள் எனப் பல வகைகளிலும் அது தன் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. இதனாலேயே நம் மக்கள் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விலை உயர்ந்தால் கூட அவ்வளவு கவலைப்பட மாட்டார்கள். ஆனால், தங்கத்தின் விலை ஏற்றம் குறித்து கவலை கொள்கிறார்கள்.


தங்கம் பலருக்கும் பல வகையாக உபயோகப்படுகிறது – ஆபரணமாக, முதலீடாக, பணவீக்கத்தை எதிர்கொள்வதற்காக, டாலரை அஸெட்டாக வைத்துக் கொள்வதற்காக, எதிர்கால சந்ததியினருக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக, அன்பை வெளிப்படுத்துவதற்காக கடன் வாங்குவதற்காக என தங்கத்தின் உபயோகத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். பெரிய நகரங்களில் தங்கத்தை ஆபரணமாக அணிவது குறைந்து வருகிறது. அவ்வாறு ஆபரணமாக அணிந்தாலும், மிகவும் லைட் வெயிட்டில் அணிந்து கொள்கிறார்கள். பல கோடி ஏழை மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பிற்காக, சொத்தாக வாங்கிக்கொள்கிறார்கள்.

ஏதேனும் அவசரத் தேவை ஏற்பட்டால், அவர்கள் வைத்திருக்கும் தங்கம் தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதை அடகு வைத்து உடனடியாக பணம் திரட்ட முடியும். இன்றைய நிலையில் வங்கிகளில் தங்க நகைக் கடன் 7% வருட வட்டிக்கெல்லாம் கிடைக்கிறது. கிட்டத்தட்ட அரை வட்டியில் நகைக் கடன் என்பது ஆச்சரியப்படும் விஷயம்தான்! மக்கள் மட்டுமல்ல - பல நாட்டு மத்திய ரிசர்வ் வங்கிகள் கூட தங்களது சொத்தில் ஒரு பகுதியை தங்கமாக வைத்துக் கொள்கிறார்கள்.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதுதான். அதில் தங்கமும் அடக்கம். ஆனால், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டின் விலை ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையில் இருந்து சற்று மாறுபட்டதாக இருக்கும். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்க சுழற்சி சற்று வேகமாக இருக்கும். ஆனால் தங்கத்தில் ஏற்ற இறக்க சுழற்சி சற்று நீண்டதாக இருக்கும்.

விலை இறங்கினால், சில ஆண்டுகளுக்காவது அது இருக்கும். ஏறும்பொழுதும் அப்படித்தான். பொதுவாக பொருளாதாரங்கள் வீழ்ச்சி காணும் பொழுது தங்கத்தின் விலை உயரும். அதேபோல் உலகளவில் போர் போன்றவை நிகழும் பொழுது அல்லது நாடுகளுக்கிடையே உறவுகளில் விரிசல் ஏற்படும் பொழுதும் தங்கத்தின் விலை உயரும். பொருளாதாரங்கள் சிறப்பாக வளர்ச்சியை எட்டும் பொழுது, தங்கத்தின் விலையில் சரிவு காணப்படும். தற்போது தங்கத்தின் விலை அபரிமிதமாக ஏற்றம் கண்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவற்றில் சில முக்கியக் காரணங்கள் இவை:

1. உலகளவில் மத்திய ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை வாங்கி தங்களது ரிசர்வை கூட்டியுள்ளன. 2. சீனா – அமெரிக்கா வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல். 3. கரோனா தொற்றும் அதற்குப் பின் சீனாவுக்கும், பிற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள வர்த்தக விரிசல். 4. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் அபாரமான பணம் அச்சடிப்பு அதனால் ஏற்பட இருக்கும் பணவீக்கம். 5. வளர்ந்த நாடுகளில் நிலவும் குறைவான வட்டி விகித நிலை 6. உலகளவில் நிகழும் பொதுவான பொருளாதார நெருக்கடி. 7. குறைந்துவரும் தங்கத்தின் உற்பத்தி திறன். மேற்கண்ட பல காரணங்களினால் தங்கத்தின் டிமாண்ட் உயர்ந்துவருகிறது.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் துருக்கி, சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், அஸர்பைஜான், போலந்து, இந்தியா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் தங்களது தங்கம் கையிருப்பை அதிகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகள் அவர்களின் மொத்தரிசர்வ் கரன்ஸியில், தங்கத்தின் சதவிகிதத்தை அதிகமாக வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாலர் ரிசர்வ் கரன்ஸியாக உலகளவில் பெருமளவில் உள்ளது. அத்துடன் யூரோ, யென், யுவான் (ரென்மின்பி) போன்ற கரன்ஸிகளும் ரிசர்வ் கரன்ஸிகளாக உள்ளன. கடந்த பல வருடங்களாக டாலர் ரிசர்வ் கரன்ஸியாக இருக்கும் சதவிகிதம் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

ஒருபக்கம் தங்க ஆபரணங்களில் முதலீடு செய்ய சரியான நேரம் என்கிறார்கள். மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்து நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய சரியான நேரம் என்கிறார்கள். மற்றொரு பக்கம் இப்போது தங்கத்தை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள். என்னதான் செய்வது என்ற குழப்பம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. கரோனா ஊரடங்கால் நிதி நிலை பாதிக்கப்பட்ட பலரும் தங்கத்தை அடகு வைத்துவருகின்றனர். இந்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வியும் எழுகிறது.
எப்போதுமே தங்கத்தின் விலை ஏற்றத்தை வைத்து மட்டும் முதலீட்டை அணுகாமல், ஒவ்வொருவருடைய போர்ட்ஃபோலியோவிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் தங்கத்தை வைத்துக் கொள்வது நல்லது.

பொதுவாக 10 சதவிகிதம் வரை ஒருவருடைய போர்ட்ஃபோலியோவில் தங்கம் இருப்பது நல்லது. தங்கத்தை அதிகமாக விரும்புபவர்கள், சற்று அதிகமாக வைத்துக் கொள்ளலாம். இன்று முதலீட்டிற்கு தங்கம் பல வகைகளில் கிடைக்கிறது. முதலீட்டாளர்களுக்கு உள்ள ஆப்ஷன்கள்: கோல்டு ஃபண்டுகள், சாவரின் கோல்டு பாண்டுகள், கோல்டு இ.டி.எஃப், கோல்டு பிஸ்கட்டுகள், ஆபரணம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இருப்பதிலேயே சிறந்தது எனில் மத்திய அரசு வழங்கும் சாவரின் கோல்டு பாண்டுகள் ஆகும். இது 8 வருட முதலீடாகும். முதலீட்டுத் தொகைக்கு வருடத்திற்கு 2.50% வட்டி வழங்கப்படுகிறது. லாபத்திற்கு மூலதன ஆதாய வரி கிடையாது. குறைந்த பட்சம் 1 கிராமிலிருந்து வாங்கலாம். 8 வருட முடிவில் அன்றைய தங்கத்தின் விலை கிடைக்கும்.

இவ்வருடம் மட்டும் (ஏப்ரல் முதல்) இதுவரை 5 முறை இந்த பாண்டுகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வருட கடைசி வெளியீடாக இம்மாத கடைசியில் (ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை) சாவரின் கோல்டு பாண்டுகள் வர உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை நமது அரசாங்கம் 42 டன்களுக்கும் அதிகமான தங்க பாண்டுகளை பொதுமக்களுக்கு விற்றுள்ளது. இது நம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய மற்றும் பெரிய தொகைகளில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்தது. இத்திட்டங்களில் மாதாந்திர முதலீடாக ரூ 100-லிருந்து ஆரம்பிக்கலாம். மொத்தமாகவும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இதை எப்பொழுது வேண்டுமானாலும் விற்றுவிட்டு வெளியில் வரும் வசதி உள்ளது. அடிக்கடி கடன் தேவைப்படுபவர்கள் ஆபரணத் தங்கத்தை நாடுவது சிறந்தது. கோல்டு இ.டி.எஃப் வாங்குவதற்கு டீமேட் கணக்கு அவசியம்.

தங்கத்தின் விலை ஏற்றம்

தற்போது தங்கத்தின் டிமாண்ட் முக்கியமாக இருப்பதால் அதன் விலை ஏற்றம் எவ்வளவு வேண்டுமானாலும் செல்லலாம். 1970-களில் தங்கம் பன்மடங்கு உயர்ந்ததை நம்மில் பலர் அறிவோம். பிறகு 2006 – 2012 காலத்தில் பலமடங்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். டாலர் கணக்கில் பார்க்கும் பொழுது இப்பொழுதுதான் முந்தைய உச்சத்தை தாண்டி ஏற்றம் கண்டுள்ளது.

முந்தைய கால நகர்வுகளை வைத்து பார்க்கும் பொழுது, நீண்டகால அடிப்படையில் இங்கிருந்து இன்னும் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த விலை ஏற்றம் பெரும்பாலும் முதலீட்டிற்கு வாங்குபவர்கள் அதிகரித்திருப்பதினால்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகள் கழித்து பொருளாதாரங்கள் எல்லாம் சீரான நிலைக்கு வந்த பிறகு, தங்கம் தனது உச்சத்திலிருந்து கீழ் நோக்கியும் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.

வங்கிகளின் தங்க வைப்பு திட்டம்

எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் குறுகிய மற்றும் நீண்ட கால கோல்ட் டெபாசிட் திட்டத்தை வழங்குகின்றன. இது அரசாங்கத் தரப்பிலிருந்து, இந்தியாவில் தங்க இறக்குமதியை குறைக்கவும், ஏற்கனவே இருக்கும் தங்கத்தை உபயோகத்திற்கு கொண்டு வரவும் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். குறைந்தது 30 கிராமிலிருந்து, அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். தனிநபர்கள், ஹெச்.யூ.எஃப், டிரஸ்டுகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அனைவரும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம். மீடியம் டேர்ம் டெபாசிட்டுகளுக்கு ஆண்டு வட்டி 2.25 சதவிகிதமும், நீண்ட கால டெபாசிட்டுகளுக்கு ஆண்டு வட்டி 2.50 சதவிகிதமும் தரப்படுகிறது.

அந்நிய செலாவணி

தங்கத்தில் செய்யும் முதலீடு பொருளாதாரத்தில் பெரிய சுழற்சியை ஏற்படுத்துவதில்லை. தங்கம் எந்தவித வருமானத்தையும் தருவதில்லை. தங்கத்தின் சொந்தக்காரரைத் தவிர, தங்கம் வேறு யாருக்கும் பொதுவாக பயனளிப்பதில்லை. அது பணமாக்கப்படாதவரை அப்படியே முடங்கிவிடுகிறது. மேலும் இந்தியா போன்ற நாட்டில் தங்கம் உற்பத்தி இல்லாததால், தங்கம் நமது அந்நியச் செலாவணி செலவை அதிகப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பணம் உள்ளவர்கள் ஆசைக்குத் தங்கம் வாங்கலாம்.

பணம் இல்லாதவர்கள் சிறுக சிறுக சேமித்து ஆபத்துக் காலத்தில் உதவும் வகையில் தங்கத்தைப் பார்க்கலாம். சிலர் லாபம் ஈட்டுவதற்கான தங்கத்தை வாங்கலாம். எனவே தங்கத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொருளாதார சூழலும் தேவையுமே தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அதன் அடிப்படையில் தங்கம் குறித்து முடிவுகளைத் திட்டமிட்டால் நல்லது.

சொக்கலிங்கம் பழனியப்பன்,
டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் பி.லிட்.
CP@prakala.com


தங்கம்Gold Ratesமுதலீடுமதிப்புGoldவர்த்தகம்தங்கத்தின் விலைவங்கிகள்தங்க வைப்புஅந்நிய செலாவணிரிசர்வ் வங்கிகள்ஆபத்துக் காலம்கொரோனாகரோனாLockdownCorona virusCovid 19

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author