Published : 17 Aug 2020 09:55 am

Updated : 17 Aug 2020 10:25 am

 

Published : 17 Aug 2020 09:55 AM
Last Updated : 17 Aug 2020 10:25 AM

மாற்றம் காணும் மருத்துவ உலகம்

the-medical-world

மார்ச் மாதத்துக்கு முன்பு வரை ஜலதோசம், தலைவலி என சிறிய பிரச்சினைகளுக்குக்கூட மருத்துவ மனைகளில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. விளைவாக மருந்து விற்பனையும் ஏக போகமாக நடந்துவந்தது. கரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியதும், சூழல் அப்படியே மாறியது.

கரோனா அறிகுறிகளைத் தவிர, வேறெந்த சிகிச்சைக்கும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் உருவானது. சிறிய கிளினிக்குகள் முழுமையாக மூடப்பட்டன. பெரிய மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாறின. செய்திகள், அரசு அறிவிப்புகள், அலைபேசியில் கரோனா விழிப்புணர்வு என எங்கும் கரோனா தொடர்பான பேச்சுகள் மட்டும்தான்.


வீதி ஓரங்களில் கரோனா பரிசோதனை வாகனம், வீடு வீடாகச் சென்று யாருக்கேனும் நோய் அறிகுறி இருக்கிறதா என்று விசாரித்து அறியும் சிறு பெண்பிள்ளைகள், நீல நிறப் புடவை அணிந்த துப்பரவுப் பணியாளர்களின் நடமாட்டம், கரோனா தொற்று ஏற்பட்ட பகுதியை தனிமைப்படுத்தும் விதமான தகரத் தடுப்புகள், கிருமி நாசினி தெளிப்பு, வீட்டு வாசல்களில் பிளீச்சிங் பவுடர் என நாடே ஒரு மருத்துவமனையாகக் காட்சியளிக்க ஆரம்பித்தது. உடல் நலம் குறித்த அதீத அக்கறையை ஏற்படுத்தியது இந்த கரோனா காலகட்டம்.

கரோனா பீதியினால் மருத்துவமனைகள் பிற நோய்களுக்கு சிகிச்சைத் அளிக்க முக்கியத்துவம் தரவில்லை என்றபோதிலும்,மக்களுமே மருத்துவமனை செல்வதை தவிர்க்கவே விரும்பினர். காய்ச்சல், சளி, உடல்வலி என கரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டாலும்கூட வீட்டிலே கசாயம் தயாரித்து கை வைத்தியம் செய்யத் தொடங்கினர். இந்தச் சூழலில் மருத்துவமனையின் பயன்பாடு பெரிய அளவில் குறையவே, மருந்து விற்பனையும் சரிவைச் சந்தித்தது. இதயப் பிரச்சினை, நீரிழிவு நோய் தொடர்பானஅத்தியாவசிய மருந்துகளின் விற்பனை மட்டும் நிலைத்து இருக்கிறது.இவ்வாறு மருந்து விற்பனையில் மட்டுமல்ல, மருத்துவ வியாபாரம் தொடர்பான பல செயல்பாடுகளும் முடங்கின.

மத்திய கிழக்கு, இலங்கை, ஆப்பிரிக்க நாடுகளைச் சார்ந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவது வழக்கமான ஒன்று. காரணம், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவச் செலவினங்கள் குறைவு. மிகக் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளிகளை வரவேற்கவே மருத்துவமனை முகவர்கள் கைகளில் பெயர் பலகைகளை ஏந்தி நிற்பது அன்றாடக் காட்சிகளாக இருந்தது.

வெளிநாட்டு நோயாளிகளுக்கு அவர்களது நாட்டில் இருந்து சென்னை வர விமான டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் அவர்களுக்கு அறையெடுத்து தருதல், தினசரி உணவுக்கு ஏற்பாடு செய்தல், ஷாப்பிங் செல்வதற்கு, சென்னையை சுற்றிப்பார்ப்பதற்கு வழிகாட்டி அமைத்தல் என தனி வியாபாரமாகவே செயல்பட்டுவந்தது.

ஒரு வெளிநாட்டு நோயாளி சென்னை வருகிறாறென்றால் குறைந்தது மூன்று மாதங்கள் வரை அவர் இங்கு தங்கு நேரிடுகிறது. இத்தகைய வெளிநாட்டு நோயாளிகளுக்கென்றே திருவல்லிகேணியில், புரசைவாக்கத்தில் விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. தற்போது வெளிநாட்டு நோயாளிகள் வருகை முழுமையாக நின்றுள்ளதால் மருத்துவமனைகள் மட்டுமல்ல, அவர்கள் சார்ந்து வருமானம் பெற்று வந்த ஏனைய தொழில்களும் முடங்கியுள்ளன.

இவ்வாறு மருத்துவ வியாபாரம் ஒருபுறம் தேக்க மடைந்திருந்தாலும், மறுபுறும் அது புது பரிணாமம் எடுத்துவருகிறது. தற்போது பலரும் ஆங்கில மருத்துவத்திலிருந்து விலகி சித்தா, ஆயுர்வேதம் ஹோமியோபதி, அக்குபஞ்சர் என மாற்று மருத்துவ வழிமுறைகளையும் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர். இணைய வழி மருத்துவ ஆலோசனைகளும் டிரண்டாகி வருகிறது. தங்களது பிரச்சினை குறித்து மருத்துவருக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெஸேஜ் அனுப்புகிறார்கள்.

மருத்துவர்களும் வாட்ஸ் அப்பிலேயே மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். இது பல்வேறு விதங்களில் மருத்துவ நடைமுறைகளை மாற்றி அமைத்து இருக்கிறது. கரோனா காலகட்டம் அனைத்து துறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மருத்துவத் துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? ஆனால் எத்தனை மாற்றங்களை மருத்துவ துறை கண்டாலும், அடிப்படையில் ஏற்படக்கூடிய அனைவருக்கும் தரமான மருத்துவம் என்ற மாற்றம் எப்போது ஏற்படும் என்பதுதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in


மருத்துவ உலகம்மருத்துவம்Medical worldமார்ச் மாதம்ஜலதோசம்தலைவலிமருத்துவ மனைகள்கரோனாகரோனா பரிசோதனைவெளிநாட்டு நோயாளிமருத்துவ வியாபாரம்வாட்ஸ் அப்மருத்துவ நடைமுறைகள்Corona virusCovid 19

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author