Last Updated : 28 Sep, 2015 11:41 AM

 

Published : 28 Sep 2015 11:41 AM
Last Updated : 28 Sep 2015 11:41 AM

பொதுத்துறை வங்கிகளின் தேக்கத்துக்கு காரணம் என்ன?

அத்தி பூத்தாற்போல பொதுத் துறை வங்கிகளின் பங்கு மதிப்பு சமீபத்தில் உயர்ந் துள்ளது. இது மகிழ்ச்சியான செய்திதான் என்றாலும் இந்த போக்கு நீடிக்குமா என்பது சந்தேகம் தான் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தற்போது பங்கு விலைகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது மத்திய அரசு ரூ.20,000 கோடியை வங்கிகளுக்கு மூலதனப் பங்காகச் செலுத்தியதால்தான். மேலும் தனியார் துறையைச் சேர்ந்த சில நிர்வாகிகளை அரசு வங்கிகளின் தலைமைப் பதவிகளுக்குத் தேர்வு செய்தது, சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவது போன்ற அடித்தளக் கட்டமைப்புப் பணிகளில் வங்கிகளிடம் பெரும் தொகையைக் கடனாகப் பெற்று நிறைவேறாமல் பாதியில் இருக்கும் திட்டங்களுக்குள்ள தடைகளை அகற்றி முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுமாறு மத்திய அமைச்சரவை உரிய அதிகாரிகளைப் பணித்தது போன்றவையே வங்கிப் பங்குகளின் மதிப்பு உயர்வுக்குக் காரணம் என்று வங்கித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த மாற்றங்கள் நீண்ட காலத்துக்கு நீடிக்குமா அல்லது ஆட்சி மாற்றங்களில் காணாமல் போய் பழைய நிலைமைக்கே திரும்புமா என்பதெல்லாம் போகப் போக போகத்தான் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி என்பது ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் என்று ஒவ்வொருவரது கையிலும் உள்ளது என்பதுதான் உண்மை.

வாராக் கடன் சிக்கல்கள்

பொதுத்துறை வங்கிகள் அளித்த கடனில் வாராக்கடனாகத் திரண்ட தொகை 2015 மார்ச்சில் 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும் அதற்கு முந்தைய ஆண்டு 2.16 லட்சம் கோடியாக இருந்தது என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். வாராக் கடன் என்பது வங்கியின் செயல்பாடு எப்படி என்பதைக் காட்டும் ஒரு அடையாளம். வங்கி தரும் மொத்தக் கடனில் இது 3%-க்குக் குறைவாக இருக்கும் வரையில் பிரச்சினை ஏதும் இல்லை. இதை மிஞ்சும்போதுதான் கவலைகள் ஏற்படும்.

வாராக்கடன் அதிகரிக்கிறது என்றால் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தத் தவறுகிறார்கள் என்று அர்த்தம். இது வங்கியின் லாபத்தையும், நிகர மதிப்பையும் குறைத்துவிடும். வங்கியின் சொத்து மதிப்பும் சரியத் தொடங்கும். வங்கிகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பும் குறையும். அத்துடன் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகள் வளமாக இல்லை என்பதையே வாராக் கடன்கள் சுட்டுகின்றன. கடன் தருவது என்பது வங்கிகளின் கடமை. வாடிக்கையாளர்கள் மூலமும் பிற வகையிலும் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை, மற்றவர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய வருவா யைப் பெருக்கிக்கொள்ள வழி செய்வதுடன் தங்களுக்கும் அதில் சிறு வருமானத்தைப் பெறுவதுதான் வங்கிகளின் வேலை. வாராக் கடன்கள் அதிகரித்தால் வங்கிகள் தொடர்ந்து கடன் தருவது பாதிக்கப்படும்.

பொதுத்துறை வங்கியின் பிரச்சினை

பொதுத்துறை வங்கிகள் மத்திய அரசின் - குறிப்பாக நிதியமைச்சகத்தின் - கண் ஜாடைக்கு ஏற்பச் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன. லாப நோக்கோடு மட்டும் செயல்பட்டுவிட முடியாது. தனியார் வங்கிகளுடன் போட்டி போடும் வகையில் டெபாசிட்தாரர்களுக்கு வசதிகளையும், கடன் வாங்க வருவோருக்கு தனிப்பட்ட சேவை களையும், நினைத்தபடி சலுகை களையும் அளித்துவிட முடியாது.

அதே சமயம் அதிக லாபம் கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும் அரசு கைகாட்டும் துறைகளுக்கும் தொழில்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடன் கொடுத்தாக வேண்டும். அதுவும் ஒவ்வொரு வங்கியின் நிதியிருப்பிலும் 40% வரை முன்னுரிமை அடிப்படையில் உள்ள துறைகளுக்குக் கடன் வழங்கியே தீர வேண்டும். எனவே வருவாயைப் பெருக்கிக்கொள்ள முடிவதில்லை. சமூகப் பணிகளிலும் அரசுடமை வங்கிகள் ஈடுபட வேண்டியிருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மட்டுமே தொழில் செய்யும் துறைகளும், பகுதிகளும் இருக்கும் இடங்களில் போட்டி மனப்பான்மையோடு வேலை செய்வதில்லை.

பொதுத்துறை வங்கிகளில் மேலா ளர்களுக்கு தொழில்ரீதியான முழுச் சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. ஊழியர்களும் வலுவான தொழிற் சங்கத்தோடு செயல்படுவதால், புதிய பணி நடைமுறைகளைப் புகுத்துவதிலும் சோதித்துப் பார்ப் பதிலும் தயக்கங்கள் இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை அரசி யல் தலைவர்கள் அரசியல் நோக்கங் களுக்குப் பயன்படுத்துவதும் அவற் றின் செயல்திறனைச் சீர்குலைக்கிறது.

1989-90-ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது விவசாயக் கடன் 15,000 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டது. அது முதல் விவசாயக் கடனை வாங்குகிறவர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்தப் பணம் இருந்தாலும் தாமதித்தே செலுத்துவது, ரத்து செய்யக் கோருவது என்பது வழக்கமாகத் தொடங்கியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் சுமார் 70,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வங்கிகளின் வாராக்கடன் சுமை குறைந்ததே தவிர விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் கிட்டவில்லை.

அத்துடன் வெவ்வேறு துறை களுக்கான முன்னுரிமைக் கடன்களை வழங்குவதில் வங்கி அதிகாரிகள் நுணுக்கமான உத்திகளைக் கையாளத் தொடங்கியதால் வங்கி களின் சமூக சேவைச் செயல் பாடுகளும் திசை திரும்பத் தொடங்கின. விவசாயத்துக்குத் தரப்பட வேண்டிய கடன்களை பெரு நிலக்கிழார்கள் டிராக்டர்கள், டில்லர்கள், ஹார்வஸ்டர்கள் போன்ற நவீன உழுபடைக் கருவிகள் வாங்கக் கடன் தந்து இலக்கைப் பூர்த்தி செய்யத் தொடங்கினர். குறைந்த வட்டியில் அல்லது மானியத்துடன் இக் கடனைப் பெற்ற நிலக்கிழார்கள் அவற்றை அதிக வாடகைக்கு சிறு விவசாயிகளுக்கு அளித்து அதிலும் லாபம் பார்த்தனர்.

வங்கிகளில் போதிய எண்ணிக் கையில் ஊழியர்கள் இல்லாததாலும் வங்கிகளில் சேவையின் தரம் குறைந்து வருவதாலும் மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதனாலேயே வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

அத்துடன் அரசு கொண்டுவரும் வறுமை ஒழிப்பு திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற வற்றுக்கு அரசு வங்கிகள் கட்டாயம் கடன் தர வேண்டியிருக்கிறது. அக்கடன்களை வசூல் செய்வதில் மெத்தனம் காட்டப்படுவதாலும் வாராக் கடன்கள் அதிகரிக்கின்றன.

தொழில் முனைவோர் கொண்டு வரும் திட்டங்களை மதிப்பிடவும் ஆராயவும் வங்கிகளில் திறமை வாய்ந்த நிபுணர்கள் அதிகம் இல்லா மலிருப்பதால் பல நிறுவனங்கள் கடனை வாங்கிவிட்டு மேற்கொண்டு தொழில் செய்ய முடியாமல் கடன் நிலுவையை வைத்துவிடுகின்றனர். தாங்களும் நஷ்டப்படுகின்றனர். ஒரு தொழில் அல்லது சேவைக்காகக் கடன் வாங்குவோர் அத் தொகை யை உடனடியாக வருவாய் தராத வேறு வேலைகளுக்குத் திருப்பி விடுவதாலும் தோல்விகள் ஏற்படு கின்றன.

வங்கிகளால் பொதுச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு நிதியைத் திரட்டமுடிவதில்லை. இதனால் வாராக்கடன்களை பங்குகளாக்கி கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. அரசுடமை வங்கிகள் கடனை வசூலிக்க முற்பட்டால் அரசியல் கட்சிகள் குறுக்கிட்டு தடுத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றன.

இதனால் எதிர்காலத் தேவைக்குக் கடன் தர முடியாமல் வங்கிகள் திணறுகின்றன. வங்கிகளின் நிதி என்பது விதை நெல்லைப்போல, அதை அழிக்கக்கூடாது என்ற எண்ணம் யாருக்குமே இருப்பதில்லை.

வங்கிகளின் நிர்வாக நடை முறைகளையும் கடன் மனு பரிசீலனைப் போக்கையும் சரியாகக் கவனித்துவரும் எத்தர்கள் வேண்டுமென்றே பெருந்தொகைக்குக் கடன்வாங்கிவிட்டு தலைமறைவாகி விடுகின்றனர். இவை போன்ற சம்பவங்களும் வாராக்கடன்களை அதிகப்படுத்தி விடுகின்றன.

இதையெல்லாம் தாண்டிதான் பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், கடனாளிகள் என எல்லோருக்குமே பொதுத்துறை வங்கிகளின் திறனை குறைப்பதில் பங்கு உள்ளது.

rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x