Published : 03 Aug 2020 09:42 am

Updated : 03 Aug 2020 09:42 am

 

Published : 03 Aug 2020 09:42 AM
Last Updated : 03 Aug 2020 09:42 AM

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய பாய்ச்சல்

reliance-jio

உலகம் டிஜிட்டல் புரட்சியை நோக்கி நகரத் தொடங்கி விட்டது. வீட்டிலிருந்தபடியே வேலை, ஆன்லைன் வகுப்புகள் என அனைத்துமே இணையவழி தொடர்புகளாக மாறிக்கொண்டிருக் கின்றன. தொழில்கள், நிறுவனங்கள் அனைத்திலுமே தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் அத்தியாவசியமாக மாறியிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை வர்த்தகங்கள் வரையிலும் இணையப் பயன்பாட்டின் தேவை உணரப்பட்டிருக்கிறது. கரோனா பாதிப்பினால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் உருவாகியுள்ள மிகப்பெரிய வாய்ப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது.

1 எந்த ஒரு பொருளுக்கும் சேவைக்கும் மிகப்பெரிய சந்தை அவசியம். எனவே மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா டிஜிட்டல் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சந்தையாகும். இந்த டிஜிட்டல் சந்தையைக் கைப்பற்ற தீவிரமாகக் களம் இறங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ.


2 ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளை நெருங்குகிறது. தொடங்கும்போதே அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் என டெலிகாம் சந்தையைக் கைப்பற்றியது. தற்போது டிஜிட்டல் சந்தையின் தொழில் வாய்ப்புகளையெல்லாம் தன் வசம் இழுக்க முயற்சித்துவருகிறது. ரிலையன்ஸ் ஜியோவில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கின்றன. ஃபேஸ்புக், கூகுள், இன்டெல், குவால்கம் என ஜியோவில் முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீள்கிறது. இந்த நிறுவனங்களுக்கு 32.82 சதவீத பங்குகளை விற்றுள்ளது. இதன் மூலம் ரூ.1.5 லட்சம் கோடி திரட்டியுள்ளது.

3 அவற்றில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் செய்ய உள்ள முதலீடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கூகுள் மட்டுமே ரு.75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு அடுத்த 5 வருடங்களில் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு மூலம் இந்தியச் சந்தையில் திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

4 இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் இணையத்தில் தேவையான தகவல்களைப் பெறும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முதல் நோக்கம். இரண்டாவது இந்தியச் சந்தையின் தேவைக்கு ஏற்ப பொருட்களையும் சேவைகளையும் பிரத்யேகமாக உருவாக்குவதற்கான செயல் திட்டம். மூன்றாவது தொழில்களை எதிர்கால டிஜிட்டல் யுகத்துக்குத் தயார் செய்வது. நான்கு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை எந்த அளவுக்குச் சாத்தியப்படுத்த முடியுமோ அதற்கான முயற்சிகளை எடுப்பது. இவையனைத்துமே இந்தியாவின் டிஜிட்டல் யுகத்தில் மிக முக்கிய அங்கங்களாகும்.

5 ரிலையன்ஸ் ஜியோ மூலம், கூகுள் செயல்படுத்தவிருக்கும் செயல் திட்டமானது ஜியோவின் வணிகத்தை வேறு தளத்துக்கு இட்டுச் செல்லும். 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகபப்டுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது ஜியோ. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது. சீனாவின் வாவே நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் விளங்குகிறது. ஆனால், உலகம் முழுவதும் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கினால் உலகச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். அதன் மூலம் ஏற்றுமதியிலும் ஜியோ தனது பாய்ச்சலை நிகழ்த்தலாம்.

6 அதுமட்டுமல்லாமல் பெருமளவில் வங்கிகளிலிருந்து கடன் வாங்கி உருவாக்கப்பட்ட ஜியோ நிறுவனத்தை கடனில்லாத நிறுவனமாக மாற்ற இருப்பதாக முகேஷ் அம்பானி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது இந்த நிறுவனங்களுக்குப் பங்குகளை விற்று திரட்டிய நிதியைக் கடனை அடைப்பதற்காகவும் பயன்படுத்தலாம். இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயரும்.

7 டிஜிட்டல் யுகத்தில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ள இந்தியா நுகர்வதில் மட்டுமல்லாமல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் உலகச் சந்தையில் முன்னிலை வகிக்க வேண்டும். இந்தக் கனவு ஜியோ மூலம் நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஜெ. சரவணன் saravanan.j@hindutamil.co.i


ரிலையன்ஸ்ஜியோபுதிய பாய்ச்சல்RelianceJioடிஜிட்டல் புரட்சிஆன்லைன் வகுப்புகள்Work from homeதொழில்கள்நிறுவனங்கள்டெலிகாம் சந்தைகூகுள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author