Published : 07 Sep 2015 09:11 AM
Last Updated : 07 Sep 2015 09:11 AM

நம்பிக்கை மட்டும் போதுமா?

தொடர்ந்து 4 வாரங்களாகவே பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. சந்தை சரிவ தற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறுவது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் இந்தியாவில் இருந்த தன்னுடைய மொத்த முதலீட்டையும் வெளியே எடுத்துவிட்டதாக அறிவித்துவிட்டார்.

``சில காலம் காத்திருந்தேன். இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து முதலீடுகளையும் வெளியே எடுத்துவிட்டேன். இனிமேலும் இந்தியாவில் மாற்றம் நடக்கும் என்று காத்திருக்க முடியாது. மோடியிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். எதுவும் நடக்கவில்லை. வெற்று நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது, அதனால் வெளியேறிவிட்டேன்” என்று ஜிம் ரோஜர்ஸ் அறிவித்தார்.

மன்மோகன் சிங் 10 வருடங்கள் பிரதமராக இருந்தாலும் யூபிஏ 2-ன் இறுதியில்தான் கொள்கை முடக்கம், செயல்படாத பிரதமர் போன்ற விமர்சனங்கள் வெளியானது. ஆனால் மோடி பொறுப்பேற்று ஒரு வருடம் மட்டுமே முடிந்த நிலையில் அவர் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.

ஜிம் ரோஜர்ஸ் வெளிநாட்டவர். தவிர அவர் ஒரு முதலீட்டாளர், இந்தியாவில் இல்லை என்றாலும் வேறு நாடுகளில் வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்றுவிடுவதால் எளிதாக சொல்லிவிட்டார். ஆனால் இங்கேயே தொழில் செய்பவர்கள் அப்படி கருத்து சொல்ல முடியுமா. ஜிம் ரோஜர்ஸ் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்யச் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதில்லை, ஆனால் யாருக்காவது எதையாவது செய்ய வேண்டுமே... செய்துள்ளாரா?

`செயலை செய்வதை விட பேசுவதில் மோடி வல்லவர்’ என்று சீன பத்திரிகை ஒன்று மோடியின் செயல்பாடுகளை சமீபத்தில் விமர்சித்திருந்தது.

ஜிம்ரோஜர்ஸ் சொல்லும் விஷயங்கள் பொருளாதார வளர்ச்சி சம்பந்தப்பட்டவை என்று எடுத்துக் கொள்வோம். அவை அனைத்தையும் செய்யமுடியுமா என்பது நடைமுறையில் பல பிரச்சினைகளை சார்ந்தது. ஆனால் இந்த பொருளாதார சீர்திருத்தங்கள் தவிர பல பிரச்சினைகள் இருக்கிறதே. ஹர்திக் பட்டேல் நடத்தும் இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம், இந்துத்துவ சக்திகளிடமிருந்து, சிறுபான்மையினருக்கு எதிராக வெளிப் படும் பேச்சுகள், அந்த செயலுக்கான உள்நோக்கம் உள்ளிட்ட எதைப்பற்றியும் மோடி கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை.

வளர்ச்சி, வளர்ச்சிதான் முக்கியம் என்று பேசும் மோடி வளர்ச்சிக்கும் எதையும் செய்யவில்லை. அமைதிக்கும் எதையும் செய்யவில்லை என்ற புலம்பல்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டன.

ஆனால் மோடி நிறைய பேசுகிறார். அவர் என்ன நினைக்கிறாரோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுகிறாரே தவிர, என்ன தேவையோ அதைப்பற்றி பேசுவதில்லை. கிட்டத்தட்ட இது ஒரு வழிப் பாதையாக இருக்கிறது.

ஆனால் இந்த பிரச்சினைகளை பற்றி பேசினால் இருக்கவே இருக்கிறது பொருளாதார தகவல்கள். ஜிடிபி 7 சதவீதமாக இருக்கிறது. உலகில் எங்கேயும் இந்த அளவுக்கு வளர்ச்சி இல்லை. மற்ற நாடுகளில் பணவாட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் பணவீக்க சூழலில் இருக்கிறோம். நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைவு என்பது உள்ளிட்ட தகவல்களை நிதி அமைச்சர் அருண் ஜேட்லியோ, ஜெயந்த் சின்ஹாவோ குறிப்பிடுவார்கள்.

இதைச் செய்வதற்கு மோடியோ, பெரிய பிரசாரமோ தேவையில்லையே. இப்போதைய இந்தியாவின் சூழ்நிலையில் யார் பிரதமராக இருந்தாலும் இதேபோன்ற சூழல்தான் இருக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்தது, இந்தியாவில் இளைஞர் பாதிக்கும் மேல் இருப்பதால் உள்நாட்டு நுகர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த வளர்ச்சியை எட்ட முடியுமே. மோடியிடமிருந்து மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துதான் வாக்களித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நம் மீது நாம் அதிக தன்னம்பிக்கை வைப்பதே ஆபத்துகளை உருவாக்கும். அடுத்தவர் நம் மீது அதிக நம்பிக்கை வைப்பது பேராபத்துகளை உரு வாக்கும். விளம்பரங்களை கொண்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக் கியதன் ஆபத்துதான் இந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள்.

மீதம் இருக்கும் மூன்று ஆண்டு 8 மாதங்களும் மோடிக்கு அக்னி பரீட்சைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x