

உருக்கு - கடினமான உலோகம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இத் தொழிலோ இன்று பனிக் கட்டியாக உருகிக் கொண்டிருக்கிறது. இத் தொழில் துறையினரோ நாமும் கரைந்து போய்விடுவோமோ என அஞ்சத் தொடங்கிவிட்டனர். இதற்கு என்ன காரணம்? நம்மூர் தொழி லை நசிந்து போக வைக்கும் அளவுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதிதான் காரணம்.
உருக்குத் துறையில் இறக்குமதி யைக் குறைக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள செயில், ஜே.எஸ்.டபிள்யு., ஜே.எஸ்.பி.எல்., எஸ்ஸார் போன்ற பெரிய நிறுவனங்கள் வலியுறுத்தி வரு கின்றன. இந்த கோரிக்கைகளால் மட்டுமல்ல அத்துறையின் உற்பத்தி, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உருக்குப் பொருள்கள் மீது 20% இறக்குமதி வரி விதிக்கலாம் என்று உருக்குத்துறை தலைமை இயக்குநர் அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.
2013-14-ல் உள்நாட்டில் உற்பத் தியான மொத்த உருக்கின் மதிப்பில் 5% அளவு உருக்கு, வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய் யப்பட்டது. அதுவே 2015-16-ல் 13% ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியத் தொழில்துறையில் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி பெருகவில்லை. சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையும் சீன நாணயத்தின் செலாவணி மதிப்பு சரிவும் இந்தியத் தொழில்துறையையும் உற்பத்தியையும் பாதித்து வருகிறது.
இந் நிலையில் உருக்கு இறக்குமதி, அதிலும் சீனாவிலிருந்து அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமல்ல கொரியா, ஜப்பான், மலேசியா, ரஷியா போன்ற நாடுகளிலிருந்தும் தொழில்துறைக்குத் தேவைப்படும் நல்ல தரமுள்ள உருக்கு இறக்குமதியாகிறது. இது உள்நாட்டு உருக்குத் துறையின் வளர்ச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.
பல்வேறு காரணங்களால் இந்தியாவில் உருக்கு உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கிறது. இறக்குமதியாகும் உருக்கின் விலை குறைவாக இருப்பதால் இந்திய நிறுவனங்களால் உருக்கை நல்ல விலைக்கு விற்க முடிவதில்லை. இதனாலும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சீனா, தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தொழில்துறைக் கான உருக்கு மீது ஒரு டன்னுக்கு 180 டாலர்கள் முதல் 316 டாலர்கள் வரை அதன் தரத்துக்கேற்ப ‘பொருள் குவிப்பு தடுப்பு வரி’ (ஆன்டி டம்பிங் டியூட்டி) விதிக்க நிதியமைச்சகம் கடந்த ஜூனில் ஆணையிட்டது. ஆகஸ்ட் மாதம் சிலவகை உருக்குப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 10% என்ற அளவிலிருந்து 12% ஆக அதிகரித்தது. அப்போதும் உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. 15% அளவுக்கு உயர்த்துமாறு கோரியிருந்தன.
இப்படி வரி விதிக்கப்படுவதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கின் விலை உயரும். இது போட்டியைக் குறைக்க வேண்டுமானால் பயன் படலாம். உள்நாட்டு உருக்குத் தேவை முழுவதையும் இந்திய நிறுவனங்களால் பூர்த்தி செய்துவிட முடியாது. எனவே இறக்குமதி அவசியமாகிறது. இந்த உருக்குப் பொருள்களை இந்திய கட்டுமான நிறுவனங்களும் இயந்திர உற்பத்தியாளர்களும் மோட்டார் வாகனம் உள்ளிட்ட நுகர்பொருள் உற்பத்தியாளர்களும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இப்படி வரி உயர்த்தப்பட்டால் அவர்களுடைய உற்பத்திச் செலவு அதிகரித்து அவர்களுடைய தொழில்கள் பாதிக்கப்படும். எனவே கண்ணை மூடிக்கொண்டு இறக்குமதி வரியை உயர்த்திவிட முடியாது. எனவேதான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சில வாரங்களுக்கு முன்னால் உருக்குத்துறை தலைவர்களிடம் பேசும்போது, உள்நாட்டில் உற்பத் தியை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள், உங்களுக்கு இடையூறாக உள்ள அம்சங்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தார்.
2013-14-ல் உள்நாட்டில் 255 லட்சம் டன்கள் உருக்கு உற்பத்தியானாலும் 12.9 லட்சம் டன் இறக்குமதியானது. 2015-16-ல் இதுவரையில் 26.6 லட்சம் டன் உற்பத்தியாகியிருக்கிறது, 3.38 லட்சம் டன் இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.
இதை ஊன்றிக் கவனித்தால் உள்நாட்டு உற்பத்தியும், உடன் இறக்குமதியும் அதிகரித்து வருவது புலப்படும். அதே சமயம் இந்தியத் தொழில்துறையில் பொதுவான பொருள் உற்பத்தி அதிகமாகி வருவதும் தெரியவரும்.
பழைய இரும்புக் கழிவுகளை உருக்கி உருக்கு தயாரிக்கும் தொழில் நம் நாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமக்குத் தேவைப்படும் உருக்கில் 55% இப்படித்தான் பழைய இரும்புக் கழிவிலிருந்து தயாரித்துக் கொள்ளப்படுகிறது.
அடிப்படையான இரும்புத் தாதுவைக் கொண்டு உருக்கு தயாரிப் பவர்கள் வெடி உலையைப் பயன் படுத்துகின்றனர். அதே சமயம் கழிவு இரும்பிலிருந்தும் பழைய இரும் பிலிருந்தும் உருக்கு தயாரிப்பவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி உருக்கு தயாரிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த உருக்கில் 32% மின்சாரத்தைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. தேனிரும்பு உற்பத்தியும் ஆண்டுக்கு 240 லட்சம் டன் என்று உலக அளவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது.
சீனாவில் தயாரிக்கப்படும் உருக் கில் பத்தில் ஒரு பகுதியைத்தான் இந்தியா தயாரிக்கிறது. 2003 முதல் 2008 வரையிலான காலத்தில் சீனா 3,000 லட்சம் டன் உருக்கு தயாரித்தது. இந்தியா இதே காலத்தில் 200 லட்சம் டன் உருக்கைத்தான் தயாரிக்க முடிந்தது.
உலக அளவில் இரும்புத் தாது இருப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. சீனா தனக்குத் தேவைப்படும் இரும்புத்தாதுவையும் (கோக்) கல் கரியையும் முன்கூட்டியே ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இறக்குமதி செய்துகொள்கிறது. இந்தியா அவ்வாறு முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றத் தவறிவிட்டது. இந்தியாவிலிருந்துகூட கனிம இரும்பை சீனா வாங்கிக்கொள்கிறது.
இந்திய உருக்குத்துறையை வலுப் படுத்தாவிட்டால் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. இந்திய இரும்பு மற்றும் உருக்குத்துறை வளர அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். சுரங்கங்களை பொது ஏலத்தில் விற்று உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களிலிருந்து விலக்கு அளிப்பது அவசியம். இரும்புத்தாது இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு விடுவிக்க ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டம்’ நிறைவேறுவதும் அவசியம்.
நிலங்களிலும் வனங்களிலும் வாழும் பழங்குடி மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு, மறுவாழ்வு, நஷ்ட ஈடு ஆகியவற்றை ஒருங்கே அளிக்க அரசு முனைப்பாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் அரசுத்துறைக்குத் தேவைப்படும் உருக்கையும் அரசு நிறுவனங்களுக்கான உருக்கையும் கூட உள்நாட்டு நிறுவனங்களிடம்தான் வாங்க வேண்டும் என்று நிபந்தனைகூட விதிக்கலாம். அடித்தளக் கட்டமைப்புத் துறை வளர்ச்சிக்கு இரும்பும் உருக்கும் அவசியமான மூலப் பொருள்களாகும்.
இத்தனை சிரமங்களுக்கு இடை யிலும் இந்தியாதான் உருக்கு உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இப்போது ஆண்டுக்கு 1,100 லட்சம் டன் உருக்கு உற்பத்தித் திறன் இருக்கிறது. இதை 10 ஆண்டுகளில் 3,000 லட்சம் டன்களாக உயர்த்தும் லட்சியம் அரசுக்கு இருக்கிறது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கழிவு இரும்பிலிருந்து உருக்கு தயாரிக்கும் இந்தியத் தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களுடைய கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கேட்டி ருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் உருக்கு உற்பத்தி இரட்டிப்பானாலும் உலக அளவில் ஒப்பிடும்போது அது போதாது. உலக அளவில் நபர்வாரி உருக்கு நுகர்வு 190.4 கிலோவாக இருக்கும்போது இந்தியாவில் அது வெறும் 44.3 கிலோவாக இருப்பதிலிருந்தே நாம் போக வேண்டிய தொலைவு அதிகம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
rangachari.v@thehindutamil.co.in