திரை நட்சத்திரங்களால் கரோனாவை கட்டுப்படுத்த முடியுமா?

திரை நட்சத்திரங்களால் கரோனாவை கட்டுப்படுத்த முடியுமா?
Updated on
3 min read

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது உயிரிழப்பும் கூடவே உயர்கிறது. ஆனால், இன்னமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தற்காப்பு நடவடிக்கை களையும் பலர் மதிக்காமல் அலட்சியமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. பிரபல தொற்றுநோய் நிபுணரும், கோவிட் 19 சிகிச்சையின் முன்னணிக் களவீரர்களுள் ஒருவருமான டாக்டர் ராம சுப்ரமணியம் ஆதங்கத்தோடு சொல்கிறார், “அரசு மட்டும் நடவடிக்கை எடுப்பதால் தொற்று குறையாது. நோய் பரவலைப் பார்த்து மக்கள் அச்சப்படுகின்றனர்.

ஆனால், முன்னெச்சரிக்கை விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலானோர் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலும், சிலர் விதிகளை மீறுகிறார்கள்; முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி காத்தல், சோதனைகளுக்குத் தாமாகவே முன்வருதல், தொற்று இருக்கிறதோ என்னும் சந்தேகம் வந்தால் மருத்துவமனைகளுக்குச் செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கிறார்கள்.

தொற்று ஏற்பட்டவர்களும், மருத்துவமனைகளிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். இவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவுதானே என்று நாம் உதாசீனம் செய்யக் கூடாது. ஒருகூடை மாம்பழத்தில் ஒன்று கெட்டுப்போனால், முழுக் கூடையும் கெட்டுப்போகுமே? இப்படி அலட்சியமாய் இருப்பவர்
களையும் அடங்காமல் சுற்றுபவர்களையும் ஒழுங்குக்குக் கொண்டுவர என்னதான் வழி என்று விழிபிதுங்கிக் கிடக்கிறது அரசு?

இதற்கு என்னதான் தீர்வு?

1950–களில் இன்று நாம் காணும் இதே பிரச்சினைகள் அமெரிக்காவில் இருந்தன. நோய்த் தற்காப்பு நடவடிக்கைகளையும், நோய்களைக் கண்டறியும் சோதனைகளையும் மக்கள் தவிர்த்தார்கள். இதற்கான காரணங்களை அறிந்து தீர்வு காண அமெரிக்கப் பொதுச்சுகாதாரத்துறை முடிவெடுத்தது. மக்களின் ஆழ்மன நம்பிக்கைகள்தான் காரணம் என்று முதல்கட்ட ஆராய்ச்சி சொன்னது. ஆகவே, மனோதத்துவ ரீதியில் ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்கள். இர்வின் ரோஸன்ஸ்டாக் (Irwin M. Rosenstock), காட்ஃப்ரே ஹோச்பாம் (Godfrey Hochbaum), ஸ்டீஃபன் கெகெலீஸ் (Stephen Kegeles), ஹோவர்ட் லெவன்த்தாலிட் (Howard Leventhalit) என்னும் நான்கு மனோதத்துவ மேதைகள் கொண்ட நிபுணர் குழுவை அரசு நியமித்தது. இவர்கள் ”ஆரோக்கியம் – நம்பிக்கைகள் மாதிரி” (Health – Belief Model. சுருக்கமாக HBM) என்னும் கொள்கையை உருவாக்கினார்கள்.

HBM என்ன சொல்கிறது?

பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்களே அடிப்படை. அவை;
* நோய் வராமல் தடுத்துக்கொள்வது; ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், விரைவில் குணமடைவது.
* எந்தெந்த முன்னெச்சரிக்கைகள் / சிகிச்சைகள் பலன் தரும், எவை பலன் தராது என்னும் நம்பிக்கைகள் / அவநம்பிக்கைகள். இந்த இரண்டில் மனிதர்களுக்கு, ஆறுவிதமான மனப்போக்குகள் அமைகின்றன:
* நோய் வரும் எனும் பயம் அல்லது வராது என்னும் போலி தைரியம். தனக்கோ, குடும்பத்தினருக்கோ நோய் வந்தால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றிய மனக்கணக்கு. முன்னெச்சரிக்கைகள் / சிகிச்சைகள் இவற்றால் ஏற்படும் பலன்கள் பற்றிய மனக்கணக்கு.
* முன்னெச்சரிக்கைகள் / சிகிச்சைகள் இவற்றால் வரும் வாழ்வாதாரப் பாதிப்புகள், செலவுகள் ஆகியவற்றை எடை போடுதல்.
* முன்னெச்சரிக்கைகள் எடுப்பதற்கான உந்துசக்தி.
* தன்னால் முன்னெச்சரிக்கைகளை எடுக்கமுடியும் என்னும் தன்னம்பிக்கை.

மக்களின் மனப்போக்கைத் தீர்மானிப்பதில் சமூகச் சூழலுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ்நாட்டை மையமாக வைத்து, கரோனா தொற்றுக் கட்டுப்பாட்டை HBM வழியில் பரிசீலனை செய்வோம். தனக்கு நோய் வரும் என்னும் பயம் அல்லது வராது என்னும் போலி தைரியம் தமிழகத்தில் தினமும் சுமார் இரண்டாயிரம் பேருக்கும் அதிகமாகப் பாதிக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் மனதில் பயம் இருக்கிறது. ஆனால், முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடிக்காதவர்கள் மத்தியில், “எனக்கெல்லாம் கரோனா வராது” என்னும் போலி தைரியம் இருக்கிறது. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசமும் இல்லை.நான் தொடர்புகொண்டு பேசிய சிலரது கருத்துக்கள்:

வங்கி ஊழியர் – “தொற்று ஒருவரிடமிருந்து மூன்றே மூன்று பேருக்குத்தான் பரவுகிறது. அரசு, ஊடகங்கள், சமூகவலைதளங்கள் ஆகியவைப் பிரச்சினையைப் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கின்றன. கோவிட் 19 வெறும் ஜூரம்தான்.” முதுகலைப் பட்டம் பெற்று. தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் நண்பர் - ”இந்திய மக்கள் தொகை 138 கோடி 73 லட்சம்.
இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 5,08,953. இது வெறும் 0.037 சதவிகிதமே. இதே போல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை 8 கோடி 37 லட்சம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,335. இதுவும் வெறும் 0.094 சதவிகிதம் தான். நான் ஏன் பயப்படவேண்டும்?”

இப்படி யோசிக்கும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் கரோனாத் தொற்றைக் கணிதத்தால் அளக்காதீர்கள். நோய்வாய்ப்படுபவர்கள் வெறும் மக்கள் தொகை எண்ணிக்கை அல்ல, ரத்தமும் சதையும் கொண்ட சகோதர, சகோதரிகள். மட்டுமல்லாமல் உங்கள் கணக்கும் முற்றிலும் தவறு. தொற்று ஒருவரிடமிருந்து மூன்று பேருக்குப் பரவுகிறது என்பது உண்மைதான். முதல் நபர் 3 பேருக்குப் பரப்புகிறார். அந்த மூன்று பேரும் தலா மூன்று பேருக்குப் பரப்புகிறார்கள். இந்தச் சுற்று 10 முறை வரும்போது, பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் எத்தனை என தெரியுமா? 88,572 பேர்!

கரோனா நோய் பரவலின் தீவிரம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிதர்சன நிலையைப் புரிந்துகொண்டால், தனக்கோ, குடும்பத்தினருக்கோ நோய்வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற அக்கறை தானாகவே வந்துவிடும். சரி, நீங்கள் உயிருக்குப் பயப்படாதவர்கள் எனில், கரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவைப் பார்த்தாலாவது தற்காப்புடன் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.

உந்துசக்தி

ஆனாலும் இந்த நிதர்சன நிலையைப் புரியவைக்க ஒரு உந்துசக்தி தேவை. எல்லோருமே ஒரு விஷயத்தை ஒரே அலைவரிசையில் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த உந்துசக்தி ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது நாம் மிகவும் மதிக்கும் நபராகவோ, ஆளுமையாகவோ இருக்கலாம். ஆண்டவன் சொன்னான் அருணாசலம் கேக்கறான் என்பதுபோல சொல்வதை கட்டளையாக நினைத்து பின்பற்ற வேண்டும். அப்படிப்பட்ட உந்துசக்தி தேவை. இந்தியாவில் சினிமா நடிகர்கள் அத்தகைய உந்துசக்தியாக இருக்க முடியும்.உடல் மண்ணுக்கு, உயிர் தலைவனுக்கு என இவர்களுக்குப் பெரும் ரசிகப்படை இருக்கிறது. உதாரணமாக, ரஜினிக்குப் பதிவு செய்யப்பட்ட 50,000 ரசிகர் மன்றங்கள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. ஒவ்வொன்றிலும் சராசரி 25 அங்கத்தினர்கள்.

ஆக, மொத்தம் 12.50 லட்சம் பேர். இதேபோல், கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை எடுத்துக்கொண்டால் 75 லட்சம் ரசிகர்கள். இவர்களுள், தமிழகத்தில் 50 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பார்கள். இந்த ஆறு நடிகர்களும் தங்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். தன்னார்வலர்களாக 5 லட்சம் பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் 83,333 பேர். அனைவரின் ரசிகர் மன்றங்களுக்கும் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரின் மக்கள் தொகை, தொற்றுப் பரவலின் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு ஊருக்கும் எத்தனை பேர் தேவை என்பதை மன்றங்கள் முடிவு செய்யலாம்.

தன்னார்வலர்கள்

இந்தத் தன்னார்வலர்கள்தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும், நோய்தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இப்படி ஈடுபடுத்தும்பட்சத்தில் நெறி
முறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் எண்ணிக்கை நிச்சயமாக 25 லட்சத்தைத் தாண்டாது. ஆகவே, 5 லட்சம் தன்னார்வல ரசிகர்களால் இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியும். இது பகல்கனவா? இல்லை ஏனென்றால், ஒரே அறையில் எட்டுப்பேர் வசிக்கும் மும்பை தாராவியில் கோவிட் காட்டுத்தீயாகப் பரவும் என்று எல்லோரும் பயந்தோம்.

ஆனால் அரசோடு, ஏராளமான தன்னார்வலர்கள் கரம் கோர்த்து உழைக்கிறார்கள். தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டிலும் தன்னார்வலர்கள் மூலம் சாதிக்க முடியும். 1962 – இல் இந்தியா – சீனப் போர். முன்னணி நட்சத்திரங்கள் சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, ஊர் ஊராகப் போய் நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார்கள். எல்லையில் ராணுவ வீரர்களுக்குக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகமூட்டினார்கள். 58 வருடங்களுக்குப் பின் இந்தியா நடத்தும் இந்தக் கரோனா போரிலும் நம் நட்சத்திரங்கள் தங்கள் ரசிகப் படையினரோடு முன்னணியில் நிற்பார்கள் என்று நம்பலாம். அரசும் நடிகர்களும் ரசிகர்களும் இணைந்தால் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in