

சுப. மீனாட்சி சுந்தரம்
somasmen@gmail.com
வெங்கடேஷ் ஐயர் எழுதிய ``மை ஜர்னி வித் வடா பாவ்’’ , உறங்க விடாமல் செய்யும் கனவு என ஆரம்பிக்கும் இந்த புத்தகம், 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகளின் கதைதான் கோலி வடா பாவ். மிகவும் இயல்பான பாணியில் நகைச்சுவையான முறையில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு குடியேறிய வெங்கடேஷ் ஐயர் தனது வணிகத்தை கட்டியெழுப்பும்போது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் ஆபத்துக்களை விவரிக்கிறது.
வடா பாவ், பர்கர் போன்ற துரித உணவின் இந்திய தயாரிப்பு. மும்பையில் மிகவும் பிரசித்தம். வீதிக்கு வீதி சைக்கிளிலும் தள்ளுவண்டிகளிலும் வழங்கப்படும் இந்த சிற்றுண்டி ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகும். மும்பைவாசிகளுக்கு எதற்கும் அதிக நேரம் கிடையாது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. ஆனால் வடாபாவ் சாப்பிடுவதற்கு உட்கார வேண்டாம்.
ஸ்பூன் தேவையில்லை, கைகளில் வைத்துக்கொண்டு நடந்துகொண்டே சாப்பிடலாம். எனவேதான் வெங்கடேஷ் இட்லி, தோசை, பிரியாணி போன்றவற்றை விட்டு விட்டு வடாபாவ் விற்கும் முயற்சியில் களமிறங்கினார். ஆனால் இந்த தெருவில் விற்கும் சிற்றுண்டியை வெங்கடேஷ் ஐயர் தேசிய சிற்றுண்டியாக மாற்றியதுதான் குறிப்பிட வேண்டிய சாதனை. ஹார்வர்ட் முதல் ஹரியானா பிசினஸ் ஸ்கூல், தொலைதூர இந்திய நகரங்களிலிருந்து தொழில் முனைவோர் உச்சிமாநாடு வரை எல்லா இடங்களிலும் வெங்கடேஷும் அவரது வடா பாவ்வும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
எந்த ஒரு உணவிற்கும் முக்கியமான அம்சம் சுவைதான் என்றாலும் வடா பாவில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் சூடாக, காரமாக, மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த மூன்றும் வெங்கடேஷின் கோலி வடாபாவில் இருந்தன. நிதிநிறுவன சேவையில் அதிகாரியாக இருந்த வெங்கடேஷ் தனது படிப்பு, அதற்கான வேலை, சம்பளம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வடா பாவ் தயாரிப்பது எப்படி என்று எதுவுமே தெரியாமல் ,ஒத்த கருத்தும் நம்பிக்கை கொண்ட நண்பர்களுடன் வடாபாவ் நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்த போது அவரது நண்பர் சொன்னது “என்னவேண்டுமானாலும் சொல், ஒரு இந்தியன் எப்போதும் இந்திய உணவை தான் அதிகமாக விரும்புவார்”. இந்த வார்த்தைகள் தான் அவருக்கு வடா பாவ்வை வெற்றிகரமான வியாபாரமாக்க தூண்டியது.
வேடிக்கைகள், கனவுகள், நம்பிக்கை, நகைச்சுவை, கோபம், வருத்தம் என பலவற்றையும் சந்தித்த வெங்கடேஷ் தனது வடா பாவ் பயணத்தில் தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களையும் அவருக்கு உதவி செய்தவர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் வடா பாவ்- வடா பாவ் என்று அனுதினமும் 24 மணி நேரமும் சிந்தித்ததன் விளைவுதான் இந்த வெற்றிகரமான வடாபாவ் சங்கிலி கடை..
வடா பாவ் தொழிலில் பன்களுக்கு இடையில் வைக்கப்படும் உருளை மசாலாவுடன் கூடிய பட்டி தயாரிப்பு தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பட்டிகளை தயாரித்தவுடனே அப்போதே சுட்டு விற்றுவிட வேண்டும். வெங்கடேஷ் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதோடு உணவுகள் பதப்படுத்தும் ஒரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்ப் லைஃப் அதிகப்படுத்தக்கூடிய முயற்சிகளிலும் இறங்கினார். மேலும் ஒரு பொறியியல் நண்பருடன் சேர்ந்து வடாபாவ் பொறிக்கும் ஒரு தானியங்கி பிரையரை உருவாக்கினார். முதலில் கல்யாண் நகரில் ஆரம்பித்த வடாபாவ் கடை படிப்படியாக மும்பையில் பல்வேறு புறநகர் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது வழக்கமாக எல்லா தொழில் முனைவோர் சந்திக்கும் நிதிப் பிரச்சனை வெங்கடேஷையும் தாக்கியது .
அவரது வியாபாரத்தில் அதிக நம்பிக்கை கொள்ளாத வங்கி வாங்கிய கடனை திருப்பி செலுத்த 10 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்தது. நண்பர்கள் மூலம் நிதியை திரட்டி அதேநேரத்தில் கடைகளையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 350 அரசுக்கு சொந்தமான பால் பூத்துகள் மூலம் வடாபாவ் விற்கும் முயற்சியை மேற்கொண்ட போது அரசியல் கட்சகளின் இடையூறுகள் காரணமாக அந்தத் திட்டம் கொஞ்ச நாளிலேயே கைவிடப்பட்டது. அதே நேரத்தில் இந்த முயற்சி ஊடகங்கள் அளவில் பெரிய அளவில் பேசப்பட்டதால் வடாபாவ் பிரபலமானது.
அதற்குப் பிறகு பிரான்சைஸ் என்ற முகவர் அடிப்படையில் தனது கடைகளை அதிகரிக்கும்போது தேவைப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னரை சரியான முறையில் தேர்ந்தெடுத்து கொண்டதன் மூலம் இப்போது கோலி வடா பாவ் கடைகளிலும் நாடெங்கிலும் வியாபித்திருக்கின்றன. வடாபாவ்தானே என்று சாதாரணமாக விற்பதோடு நிற்காமல், பெரிய கனவு
களும் இலக்குகளும் கொண்டு நடைபோட்டார். இதற்குப் பொருத்தமாக ஒரு லோகோவை தேர்ந்தெடுத்து பிரபலமடைய செய்தார்.
தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாகச் செயல்படுவது, கூட்டாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மூலம் வேகமாக வளர்ந்தது, சூழ்நிலைக்கேற்றவாறு தனது முயற்சிகளை மாற்றிக்கொண்டு அதேநேரத்தில் இலக்கிலிருந்து சிதறாமல் பணிபுரிந்தது கோலி வடா பாவ்வின் வெற்றிக்கு காரணம். 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகளுடன் வெற்றி நடைபோடுகிறது கோலி வட பாவ்.
மை ஜர்னி வித் வடா பாவ், உறங்க விடாமல் செய்யும் கனவு என்ற புத்தகத்தின் மூலம் தனது வடாபாவ் பிசினஸ் வெற்றி பெற்ற கதையை மிகவும் இயல்பான பாணியில் நகைச்சுவையான முறையில் எழுதியுள்ளார். அடுத்த முறை நீங்கள் வடா பாவ் சாப்பிடும்போது கண்டிப்பாக வெங்கடேஷ் என்ற ஒரு தொழில்முனைவரை நினைத்துக் கொள்வீர்கள் என்கிற அளவில் மிகவும் தனது அனுபவங்களை சுவைபட தந்திருக்கிறார்.