Published : 08 Jun 2020 09:11 am

Updated : 08 Jun 2020 09:11 am

 

Published : 08 Jun 2020 09:11 AM
Last Updated : 08 Jun 2020 09:11 AM

கரோனா ஊரடங்கு: வேதனையும் படிப்பினையும்...

corona-lockdown

ரு.பாலசுப்ரமணியன்
rubalu@mail.com

கரோனா என்ற நுண்கிருமியால் ஒட்டுமொத்த சமுதாயமும் நிலைகுலைந்து போயுள்ள இன்றைய சூழலில், இந்நோய்க்கிருமியின் தாக்கத்திற்கு ஏதிராக நம் சமுதாயம் (முதன்மையாக, அரசு) எடுத்த நடவடிக்கைகள் பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு பாதகங்களையும் படிப்பினைகளையும் வழங்கியுள்ளது. நமது குறுகிய, மேலோட்டமான பார்வையில் கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளினால் நேரிட்டதாகத் தோன்றும் பாதகங்கள் அந்நடவடிக்கைகளின் உடனடி, நேரடி விளைவுகளே; ஆனால், இத்தகைய பாதகங்களுக்கான மூலகாரணம் ஆழமானவையும் சிக்கலானவையும் ஆகும்.

அத்தகைய சாரமான காரணங்களைத் தேடுவதற்கான நேர்மையான ஒரே வழிமுறை, நம் சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பையும் ஒரு சமூகம் என்கிற முறையில் நாம் தேர்ந்தெடுத்துள்ள பொருளாதார வளர்ச்சிப் பாதையையும் ஒரு ஆழமான அரசியல்-பொருளாதாரப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதேயாகும். எனவே, மார்க்ஸ் கூறியது போல வெளித்தோற்றத்தை விலக்கி சாராம்சத்தை அறிய முனைவதே அறிவியல்பூர்வமான அணுகுமுறையாகும்.

பொதுவாக, இந்தியப் பொருளாதாரம் தனியார் துறையை முன்னிறுத்தும் ஒரு முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதில் மாற்று கருத்தில்லை. குறிப்பாக, 1991 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நம்மை வழிநடத்தி வரும் நவ தாராளமயமாதல் கொள்கைகள் நம் சமுதாயத்தில் பல தரப்பட்ட பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடுமையாகியுள்ளன. எடுத்துக்காட்டாக, மொத்த தேசிய வருவாயில், பொருளாதார ரீதியில் உச்சத்தில் உள்ள 1 சதவீதம் பேரின் பங்கு 1982-83 ல் 6.2 சதவீதமாக இருந்து 2014 -15 ல் 21.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதாவது, நூற்றில் ஒரு பங்கு உள்ள உச்ச வருவாயினர் நாட்டின் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கைக் கைப்பற்றியுள்ளனர்; ஆனால், அதே சமயம் நடுத்தர வருவாய் கொண்ட 40 சதவீதத்தினருக்கு மொத்த தேசிய வருவாயில் கிடைத்த பங்கு 1982-83 ல் 46 சதவீதமாக இருந்து 2014 -15 ல் அது 29 சதவீதமாகக் குறைந்துள்ளது. வருவாய் அடிப்படையில் மிகவும் கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள், 1982-83 ஆம் ஆண்டிற்கான மொத்த தேசிய வருவாயில் 23.6 சதவீதத்தைப் பெற்றிருந்தாலும், 2014 -15 ஆம் ஆண்டின் மொத்த தேசிய வருவாயில் 15 சதவீதத்தை மட்டுமே பெற்றிருந்தனர்.

இதே போல செல்வ சேமிப்பின் அடிப்படையில் பார்த்தால், 50 சதவீத அடித்தட்டு மக்களின் சராசரி செல்வம் 1980 முதல் 2016 வரையான 36 ஆண்டுக்காலத்தில் 107 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது; ஆனால், இதே காலகட்டத்தில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினரின் சராசரி செல்வம் 470 சதவீதமும், அதி உச்சத்தில் உள்ள ஒரு சதவீத செல்வந்தர்களின் சராசரிச் செல்வவளம் 857 சதவீதமும் அதிகரித்துள்ளன. இத்தகைய பெருத்த வேறுபாடுகள் செல்வம்
படைத்தோருக்கும் சாதாரண மக்களுக்குமிடையிலான திறன் வேறுபாட்டினால் தோன்றியதல்ல; மாறாக நம்முடைய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு, செல்வந்தர்கள் மென்மேலும் செல்வந்தர்களாவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தலைப்பட்சமானதாக இருப்பதாலேயே ஆகும்.

பின்தங்கும் வேளாண்துறை

புவிப்பகுதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. தொழிற்துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியுள்ள வடக்கு, வடகிழக்கு, மற்றும் கிழக்கு மாநிலங்கள் ஒரு புறமிருக்க, சமூக, பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் பின்தங்கிய மாநிலங்களிலுள்ள உபரித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளன.

இது போலவே, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் பல்வேறு மாவட்டங்களுக்கிடையிலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கிடையிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பெருவாரியான மக்களுக்கு வேலையும் உணவும் அளிக்கும் வேளாண் துறை தொடர்ந்து பின் தங்குகிறது. உழவர்களும், பிற சிறு உற்பத்தியாளர்களும், சிறு வணிகர்களும், சிற்றுடைமையாளர்களும், அமைப்பு சாராத் தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்திற்கான வலுவான, ஒரு குறைந்தபட்ச வருமானத்தை உத்தரவாதம் செய்யக்கூடிய உற்பத்திச் சாதனங்களோ, உடைமைகளோ, சேமிப்புகளோ இன்றி அன்றாடங் காய்ச்சிகளாகத் தொடர்ந்து உழல்கின்றனர்.

கடின உழைப்புத் தேவை

தனியார்மயமாக்கலை உள்ளடக்கிய நவதாராளமயக் கொள்கைகள் 1990களில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதன் விளைவாகத் தொழிலாளர் அமைப்புகள் சிதைவுற்றும், தனியார் துறை மேலாதிக்கம் பெற்றும் வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் முறைசாராத் தொழில்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 81 சதவீதமாக இருப்பதாக பன்னாட்டு உழைப்பாளர் அமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.

இத்தகைய அமைப்புசாராத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் மோசமானதாகவும், பணி நிரந்தரமற்றதாகவும், உழைப்பாளர் காப்புறுதித் திட்டம் போன்ற திட்டங்களால் பயன்பெற முடியாத வகையிலும் உள்ளது. ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், சலவையகம் மற்றும் முடி திருத்தக உரிமையாளர்கள், சிறுவணிகர்கள் ஆகியோர் பெயரளவில் சுயதொழில் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களில் மிகப்பெரும்பகுதியினர் தினக்கூலி வேலையாட்கள் போல உறுதியான, நிரந்தர வருமானமின்றித் தவிப்பவர்களே.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பிரிவினர்களின் வருமானத்திலும் ஒரு சிறு சலனம் அல்லது வீழ்ச்சி ஏற்பட்டாலோ, எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலோ அதைத் தாங்க முடியாமல், மீளாக் கடன் சுமைக்கோ அல்லது உடைமையிழப்பிற்கோ ஆளாகின்றனர். அத்தகைய இழப்புகளிலிருந்து அவர்கள் மீண்டெழ பல்லாண்டு காலக் கடின உழைப்புத் தேவைப்படுகிறது. இவர்களையே எளிதில் இலக்காகும் பிரிவினர் (vulnerable) என்கிறோம்.

நவ தாராளமயமாக்கல்...

இந்தப் பின்னணியில், கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் உலகமயமாதல் மற்றும் தனியார்மயமாதலை உள்ளடக்கிய நவ தாராளமயமாக்கல் கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வளர்ச்சியையும், ஆரோக்கிய மற்ற நுகர்வியத்தையும் முன்னிறுத்துவதுடன், பெரும்பகுதி மக்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றி நுகர்விய அடிமைகளைக் கொண்ட சமூகத்தைக் கட்டமைத்துள்ளது. குழந்தை பிறப்பு முதல் சுடுகாடு வரை, அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகள், தெருவிளக்குப் பராமரிப்பு போன்ற வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் சந்தை ஊடுருவியுள்ளது. ஒரு வேளை உணவுக்குக் கூட அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் கோடிக்கணக்கானோர் ஒரு புறம். மறுபுறம், பல்பொருள் பேரங்காடிகளும் ஐந்து நட்சத்திர விடுதிகளும், வெளிநாட்டு விமானச் சேவைகளும் எப்போது திறக்கும் என்ற ஏக்கத்தில் தவிக்கும் அப்பழுக்கற்ற சுயநலத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள நுகர்வியக் கூட்டம்.

இரு வேறு இந்தியா

பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், எழுத்தறிவின்றி, இணைய வசதியுமின்றி, ஈ-பாஸ் கேட்க சிற்றுந்தும் இன்றித் தவித்த நம்மவன் புற்றுநோயால் அவதியுற்ற தன் இல்லாளை மிதிவண்டியில் ஏற்றிக் கும்பகோணத்திலிருந்து 100 மைல் பயணம் செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சென்றான். எட்டுவழிச் சாலைகளையும், நம் முடைய வளர்ச்சியை வானுலகுக்கும் பறைசாற்றி, உயர்ந்து நிற்கும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும் கட்டி எழுப்பியவர்கள் ஆயிரம் மைல்களுக்கும் மேல் கால்நடையாய்ச் செல்லத் துணிந்து சரக்கு ரயிலின் சக்கரங்களுக்கு இரையானார்கள். பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை அமைப்பு சாரா தொழிலாளிகளுடனும் இதர பின்தங்கிய மக்களுடனும் நாம் பகிர்ந்திருந்தால், பாவம், அவர்களும் ஈ-பாஸ் அல்லது விமானப் பயணத்திற்கு விண்ணப்பம் போட்டிருப்பார்கள்.

இவ்வாறு பொருளாதார அடிப்படையில் இரு வேறு இந்தியாக்கள் உருவானதுதான், கரோனா குறித்த எதிர்வினையிலும் இருவேறு போக்குகள் உருவாகக் காரணம். எப்பேர்ப்பட்ட கட்டுப்பாடுகளையும் தாங்கும் திறன்படைத்த, நோயிலிருந்து தப்புவதையே நோக்கமாகக் கொண்ட நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் ஒருபுறம்; பட்டினியால் அல்லலுற்று, நோய் பற்றிய பயம் துளியுமின்றி நெடுந்தொலைவையும் நடந்தே கடக்கத் துணிந்த தொழிலாளர்கள், மற்றும் பொதுமுடக்கத்திலிருந்து விலக்களிக்கக் கோரிய, நிவாரண உதவி கோரிய கீழ்த்தட்டு மக்கள் மறுபுறம்.

இக்கட்டுரையின் தலைப்பிலுள்ள கேள்விக்கு வருவோம். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் ரோமர் கூறியது போல "ஒரு நெருக்கடியான சூழலிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளாமல் அச்சந்தர்ப்பத்தை வீணடித்து விடக்கூடாது". நெருக்கடியின்போதுதான் அந்நெருக்கடிக்கு நம்மை இட்டுச் சென்ற கடந்தகாலத் தவறுகள் குறித்த புதிய படிப்பினைகளைப் பெறவும், எதிர்காலத்தில் எம்மாதிரி செயல்பட்டால் மீண்டும் அத்தகைய நெருக்கடிகள் நிகழாவண்ணம் தற்காத்துக் கொள்ள முடியும் என்று அறியவும் முடியும். க

ரோனா அத்தகையதொரு சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நவ தாராளமயம், கட்டற்ற நுகர்வியம், சுயநலமே வாழ்வின் ஆகச்சிறந்த விழுமியம் என்ற கருத்தியல், வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் சந்தையை ஊடுருவ அனுமதித்ததன் மூலம் மனித மாண்புகளைப் பண்டமயமாக்கியது. இவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு, சமூக வாழ்வில் பொதுநலம், பொருளியல் வாழ்வில் சமத்துவம் என்கிற "இவ்வுலகு" சார்ந்த ஆன்மீக நெறிக்காக அனைவருமே பாடுபட வேண்டும்.

மக்களை கூறுபோடும்

இதற்கு முன்நிபந்தனையாக, கல்வி, சுகாதாரம், மருத்துவம், காப்பீடு போன்ற அத்தியாவசிய சேவைகளைச் சந்தையின் பிடியிலிருந்து முற்றாக மீட்டு, பொதுத்துறை வசம் கொணர்தல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பெருமளவு குறைத்து பொருளியல் வாழ்வில் அடித்தட்டு மக்களின் பங்கினை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களைக் கொண்ட பொருளாதார அமைப்பைக் கட்டமைக்க வேண்டும். இவற்றைச் செய்யாவிடில் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்து மக்களை இரு பிரிவுகளாகக் கூறுபோடும். நாட்டின் ஒரு சதவீத மக்களின் மகிழ்ச்சிக்காக பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து அவல வாழ்க்கையை வாழும் நிலையிலேயே தொடர வேண்டியிருக்கும்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கரோனா ஊரடங்குCorona LockdownCovid 19CoronavirusLockdownகொரோனாவேளாண்துறைகடின உழைப்புஇந்தியா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author