Published : 31 Aug 2015 12:14 PM
Last Updated : 31 Aug 2015 12:14 PM

எதையும் மூன்று முறை!

ஏலம் குறித்து பேசினாலே... முதலில் உங்களுக்கு தோன்றுவது என்ன? ஐயோ அப்படி ஒரு நிலைமை யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதுதானே... ‘பொது ஏல அறிவிப்பு’ செய்தித்தாள்களில் தினசரி இப்படியான விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் யாராவது படிக்கிறோமா என்றால் கிடையாது. படித்தும், படிக்காமலும் அடுத்த செய்திக்கு தாவி விடுகிறோம்.

ஆனாலும் ஏலம் என்றதும் பதட்டப்படாமல் இருக்க, அது குறித்து சில விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏலத்தின் சாதகங்கள் என்ன? ஏலம் எப்படி நடக்கிறது? ஏலத்தில் பொருட்கள் வாங்கலாமா என்பதை தெரிந்து கொள் வது இப்போதைய சூழலில் மிகவும் அவசியமானது.

ஏல முறையில் 10க்கும் மேற்பட்ட முறைகள் உள்ளன. மிகுந்த வெளிப்படையான வர்த்தக முறை இது. ஏலம் விடும் நடைமுறை இன்று நேற்றல்ல, கி.மு காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர் களை அடிமைகளாக கையாண்ட காலத்தில் அடிமைகள் வர்த்தகம் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. அடிமைகளை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டியே நடந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், அரிய பொக்கிஷங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. அழகான பெண்கள், திடகாத்திரமான ஆண்கள்கூட ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.

காந்தியடிகள் பயன்படுத்திய பொருட் கள் கூட ஒரு லண்டன் கம்பெனியில் ஏலத்திற்கு வந்தது. நடிகை பிரிட்னி ஸ்பியர்ஸ் மென்று துப்பிய பபுள்கம்மை 14,000 டாலர் கொடுத்து ஏலத்தில் வாங்கியதும் நடத்துள்ளது. இப்படி ஏலத்துக்கு பின்னால் எக்கச்சக்கமான சுவராஸ்யமான விஷயங்களும் உள்ளன. என்றாலும் நமக்கு ஏற்ப ஏலத்தில் உள்ள சாதகமான விஷயங்களைப் பார்க்கலாம்

ஏலம் கேட்கலாம்

பொதுவாக வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப கட்டவில்லை என்றால் கடனுக்கு ஈடாக பிணையம் வைக்கப்பட்ட வீட்டையோ அல்லது நகையையோ ஏலம் விட்டு தங்களுடைய கடன் தொகையை திருப்பி எடுத்துக் கொள்வார்கள். இது நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இப்படி ஏலத்துக்கு வரும் சொத்துக்கள் சந்தை விலையை விட குறைவாக வாங்கலாம் என்பது தெரியுமா...இதற்கு ஏலத்தில் பொருட்களை வாங்குபவரின் மனநிலையிலிருந்து யோசிக்க வேண்டும்.

ஏலம் விடுவதில் உலகம் முழுக்க பல முறைகள் கையாண்டாலும் சில முக்கியமான முறைகளைப் பார்க்கலாம்.

வெளிப்படையான கேட்பு ஏலம்

பொருட்களுக்கான விலையை ஏற்றிக் கொண்டே செல்லும் வெளிப்படையான ஏல முறையை இங்கிலீஷ் ஏலம் என்பார்கள். ஏலம் கேட்பவர்கள் இதில் போட்டி போட வேண்டும். அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கு ஏலம் விடப்படும்.

ஏலம் விடப்படும் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர்களே முடிவு செய்வார்கள். குறைந்தபட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்கவில்லை என்றால் நஷ்டம்தான். உலகம் முழு வதும் பரவாக இந்த ஏல முறைதான் நடைமுறையில் உள்ளது. சில அரசு டெண்டர்கள், இ-டெண்டர் போன்றவை இந்த முறையில்தான் நடக்கிறது.

சீலிடப்பட்ட விலை ஏலம்

அரசு டெண்டர்கள் பெரும்பாலும் இந்த முறையில்தான் நடக்கும். ஒருவர் கேட்கும் விலை அடுத்தவருக்கு தெரியாது. ஆனால் ஏலம் கேட்பவர்கள், தங்களின் விலையை மூடிய உறைக்குள் வைத்து கொடுப்பார்கள். குறிப்பிட்ட நாளில் அனைத்து உறைகளும் திறக்கப்பட்டு, விலை அதிகம் கேட்டுள்ளவருக்கு ஏலம் கொடுக்கப்படும். அரசின் முக்கியமான டெண்டர்கள் இந்த முறையில்தான் நடக்கிறது.

டச்சு முறை ஏலம்

நாம் முன்பு பார்த்த ஏல முறை களுக்கும் நேரெதிரானது இந்த முறை. ஏலம் விடுபவர்கள் ஒரு தொகையை நிர்ணயம் செய்திருப்பார். ஏலம் கேட்பவர்கள் விலையை குறைத்துக் கொண்டே இருப்பார்கள். குறைந்தபட்ச விலையை முதலில் கேட்கும் நபருக்கு பொருள் விற்கப்படும். காய்கள், பழங்கள்,பூக்கள் இந்த முறையில்தான் ஏலம் விடப்படுகிறது.

இது போன்ற முக்கியமான ஏல முறைகள் தவிர விக்கரி ஏலம், மல்டி யூனிட் ஏலம், ஆல் பே ஆக்‌ஷன், பை அவுட் ஆக்‌ஷன், காம்பினேஷன் ஏலம், ரிவர்ஸ் ஏலம், ரிசர்வ் ஏலம், நோ ரிசர்வ் ஏலம், டாப் அப் ஏலம், வால்ராசியன் ஏலம் என பல வகைகளில் உலகம் முழுக்க ஏல முறைகள் உள்ளது.

வீடு வாங்கலாம்

வங்கிகள் ஜப்தி செய்த ஒரு வீட்டை ஏலம் விடுகிறது என்றால், கடன் தொகை திரும்ப வந்தால் போதும் என்று கணக்கிட்டோ அல்லது சந்தை மதிப்பைக் கணக்கிட்டோ தொகையை நிர்ணயிப்பார்கள். தவிர ஏலத்தில் வீடு வாங்குகிறோம் என்றால், அந்த வீடு பொதுவாக எந்த வில்லங்கமும் இல்லாமல்தான் இருக்கும். பத்திரப் பதிவில் வங்கி மேலாளர் கையொப்ப மிடுவார்.

இப்படி ஏலத்தில் வீடு வாங்க ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. எனவே வங்கிகள் வெளியிடும் ஏல அறிவிப்பை இனியாவது படிக்கத் தொடங்குங்கள்.

தங்க நகை

ஏலத்தில் தங்க நகைகள் சந்தை விலையை விட குறைவான விலையில் வாங்கலாம். அடகுக்கு வரும் நகைகளை உடனே ஏலத்திற்கு விட்டு விட மாட்டார்கள். நான்கு - ஐந்து முறையாவது நோட்டீஸ் அனுப்பியும், நகையை அடகு வைத்தவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால்தான் ஏலம் விடப்படும் என்பதால் இந்த நகைகளுக்கு பிற்காலத்தில் எந்த சிக்கலும் வராது.

கட்டவேண்டிய அசல், வட்டி மற்றும் அபராதத் தொகை என அனைத்தையும் சேர்த்துதான் ஏலத் தொகை இருக்கும். ஏலம் நடக்கும்போது, நாம் விரும்பும் விலையைக் கேட்கலாம். வங்கிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்தால் பணத்தை பெற்றுக் கொண்டு நகையைத் தந்துவிடுவார்கள். புதிதாக நகைகள் வாங்கினால் சேதாரம், செய்கூலி என தனியாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும். ஏலத்தில் அந்த சிக்கல்கள் இல்லை.

விவசாய சந்தை

விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு சரியான விலை கிடைக்க ஏலமுறையைத்தான் நம்புகிறார்கள். குறிப்பாக பணப்பயிர் விவசாயிகளுக்கு நல்ல விலையை வாங்கித் தருகிறது. காபி, ஏலக்காய், மஞ்சள், மிளகாய், மிளகு உள்ளிட்ட பொருட்கள் ஏல முறையில்தான் வர்த்தகம் நடக்கிறது. இடெண்டர் முறையில் உடனுக்குடன் வெளிப்படையாக நடப்பதால் இடைத்தரகர்கள், கமிஷன் தொந்தரவுகள் கிடையாது.

காலங்காலமாக நடக்கும் வெளிப்படையான இந்த வர்த்தகத்தை பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால், ஏல விளம்பரத்தை இனி புறக்கணிக்க மாட்டீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x