

பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் நிறுவனம் தனது 6 கடன் சார்ந்த திட்டங்களை ஏப்ரல் 23-ஆம் தேதியன்று நிறுத்திவிடுவதாக (வைண்ட்-அப்) அறிவித்தது. இந்த 6 திட்டங்களும் அன்றைய தினத்தில் ரூ 25,000 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வந்தன. இத்திட்டங்கள் கிரெடிட் ரேட்டிங் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து வந்தன. இன்றைய ஊரடங்கு சூழ்நிலையில், இதுபோன்ற கிரெடிட் ரேட்டிங் குறைவான நிறுவனங்களுக்கு என்ன ஆகுமோ என்று பயந்த முதலீட்டாளர்கள், இந்த 6 ஃபண்டுகளிடமிருந்தும் சரமாரியாக பணத்தை வெளியில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதுகிட்டத்தட்ட ரன் ஆன் பேங்க் (run on bank) போலத்தான் – ஒரே சமயத்தில் வங்கிகளிலிருக்கும் சேமிப்பு தொகையை அனைத்து வாடிக்கையாளர்களும் எடுக்கச் சென்றால் ஆகுமே அது போன்ற நிலைமைதான் பிராங்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்தால், தான் வைத்திருக்கும் கடன் பத்திரங்களை மிகவும் சொற்பத்திற்கு விற்க நேரிடும் என்று அறிந்து, அந்நிறுவனம் அந்த 6 திட்டங்களிலும் ஏப்ரல் 24-லிருந்து பணத்தை எடுக்கவோ அல்லது போடவோ முடியாது என்று அறிவித்தது.
தாங்கள் கொடுத்த கடன் திரும்ப வரவர, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் படிப்படியாக பணத்தை கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளது. பணம் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் திரும்ப வந்துவிடும் – ஆனால் சற்று தாமதமாக வரும்; மேலும் நினைத்த பொழுது பணத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அந்நிறுவனம் நிர்வகித்து வரும் பிற கடன் சார்ந்த திட்டங்களும் சரி, பங்கு சார்ந்த திட்டங்களும் சரி எப்பிரச்சினையும் இல்லாமல் எப்பொழுதும் போல் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் பிற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.
பிராங்ளின் இந்நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதற்கு கோவிட் - 19 - தான் முக்கியக் காரணம் என்று கூறியுள்ளது. மேலும் நிதிப் புழக்கம் இல்லாததும் ஒரு காரணம். இந்த நிகழ்வுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி காலை ரூ.50,000 கோடியை பிரத்யேகமாக மியூச்சுவல் ஃபண்டுகளுக்காக கடன் கிடைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.