Published : 27 Apr 2020 09:30 AM
Last Updated : 27 Apr 2020 09:30 AM

அண்ணாச்சி கடைகளும் அமேசான் ஆகலாம்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

கரோனா கோபத்திற்கு ஆளானது மனிதர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரமும்தான். பெரிய பெரிய மால்கள் முதல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வரை அனைத்தும் இழுத்து மூடிவிட்டார்கள். இத்தகைய நெருக்கடி நிலையிலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய கைகொடுக்கிறார்கள் மளிகை கடைக்காரர்கள்.

அருகிலேயே இருப்பதாலும், அடிக்கடி பார்ப்பதாலும் மளிகைக் கடைகளின் மகத்துவத்தை நாம் மறந்துகொண்டிருந்தோம். இதுவரை மால்கள், பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் என பந்தா காட்டிக்கொண்டிருந்த மக்களுக்கு இப்போதுதான் இவர்களின் அருமை தெரியவந்திருக்கிறது.

பெருநகரங்களில் மட்டுமே இருந்துவந்த மால், சூப்பர் மார்கெட் கலாச்சாரம் சமீப காலமாக சிறுநகரங்களிலும் பரவத்தொடங்கிவிட்டன. போதாக் குறைக்கு அன்றாட சாமான்களை ஆன்லைனில் விற்கும் நிறுவனங்களின் ஆதிக்கமும் பெருகிவருகிறது. நாடு வளரும் போது, தங்கள் சௌகரியம் மற்றவை காட்டிலும் மக்களுக்கு முக்கியமாக மாறும்போது இவ்வகை புதுமைகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது.

மாட்டு வண்டி அசௌகரியம், காரில் செல்வதே கம்ஃபர்ட் என்று மக்கள் முதல் மளிகைக் கடைக்காரர்கள் வரை நினைக்கும் போது மற்ற விஷயங்கள் மட்டும் மாறாமல் பழையபடியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி?
வாழ்க்கையின் சௌகரியங்களுக்கு ஒரு விலை இருக்கிறது. அதை கொடுக்க மக்கள் தயாராய் இருக்கிறார்கள். அதன் விளைவுதான் இதுபோன்ற மாற்றங்கள். ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல கரோனா ஊரடங்கால் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

செகண்ட் சான்ஸ்

கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி எல்லாருக்கும் உபத்திரவமாக இருந்தாலும் எப்போது காணாமல் போகப் போகிறோமோ என்ற பீதியிலேயே இருந்த சிறு சிறு மளிகை கடைகளுக்கு புத்தாக்கத்தை தரும் ஒரு உபகாரத்தை செய்திருக்கிறது. பல சூப்பர் மார்க்கெட்டுகள் பாதி திறந்து பாதி மூடிக் கிடக்க, ஆன்லைன் கடைகள் முழுவதுமாய் முடங்கிக் கிடக்கும் இச்சமயத்தில் மளிகை கடைகள் தயவில்தான் எல்லோருடைய வீடுகளிலும் அடுப்பெரிகிறது.

அதற்காக ‘பார் எங்கள் அருமையை’ என்று மளிகை கடைகள் மார்தட்டிக்கொள்ளும் நேரமல்ல இது. கரோனா வைரஸ் டாடா காட்டி மலையேறி மறையும் காலம் வரைதான் இந்த நல்ல காலம் நிலைக்கும் என்பதையும் உணர வேண்டும். மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் போன்ற சிறு கடைகள் அனைத்துமே மீண்டும் தலையெடுக்க இந்த கரோனா காலம் தரும் செகண்ட் சான்ஸ் என்பதை அறிவது அவசியம்.

இதற்கு மளிகை கடைகள் மார்க்கெட்டிங் தெரிந்துகொண்டு அதோடு கொஞ்சம் தொழிற்திறனையும் அரவணைத்தால் தேவலை. மார்க்கெட்டிங் என்றால் என்ன? யார் வாடிக்கையாளர், அவருக்கு என்ன தேவை, அத்தேவையை மற்றவர்களை விட எப்படி சரியாகப் பூர்த்தி செய்வது, அப்படி பூர்த்தி செய்வதை அவர்களுக்கு எப்படி சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பது. இதை மளிகைக் கடைகள் செயலாக்கக் கூடிய விதம் பற்றிப் பார்ப்போம்.

ஈசியாய் சரி செய்யலாம்

மளிகைக் கடை கஸ்டமர்கள் அதைச் சுற்றி வசிப்பவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அருகிலிருக்கும் மளிகைக் கடையை விட்டுவிட்டு எதற்கு தூரத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட் அல்லது எங்கோ இருந்து வரும் ஆன்லைன் ஆர்டர்களில் பொருட்களை வாங்குகிறார்கள். இதை உணர்ந்தாலே விடை தெரியும். அதற்காக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல் தாங்களும் கடையை தூசி தட்டி, ஏசி மாட்டி, கடையை அழகாக்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்கான நிதி ஆதாரம் இருக்கும்பட்சத்தில் அப்படி செய்தாலும் தவறில்லை.

ஆனால், அது மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் தேவை. முதலில் தேவையான எல்லா பொருட்களும் கிடைக்க வேண்டும், அதைப் பார்த்து படித்து தேர்வு செய்யும் வசதி வேண்டும், அவசரத்துக்கு கேட்ட நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்ய வேண்டும். இவைதான் அவர்களுக்குத் தேவை. இதைத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளும் ஆன்லைன் பிராண்டுகளும் சிறப்பாகச் செய்கின்றன. இதை மளிகைக் கடைக்காரர்கள் செய்ய வேண்டும். இவை தங்களுக்கு சாத்தியப்படாது என்று இத்தனை நாள் மளிகை கடைகாரர்கள் விட்டேத்தியாய் விட்டுவிட்டார்கள். இதை அவர்கள் ஈசியாய் சரி செய்யலாம். செய்ய வேண்டும். செய்ய முடியும்!

புதிய வழி

மளிகை கடை சின்னதாய் இருந்தால் என்ன? வாடிக்கையாளர் கேட்ட பொருளை, கேட்கும் நேரத்தில், கேட்டவர் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டால் போதும். டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன் போட்டியை விட பெட்டராய் கஸ்டமர் தேவையைப் பூர்த்தி செய்ய புது வழி பிறந்திருக்கிறது. எளிய முறைகள் வளர்ந்திருக்கிறது. கஸ்டமர் கேட்கும் எல்லா பொருட்களையும் ஆறடி கடைக்குள் அண்ணாச்சிகள் அடுக்க முடியுமா? வீட்டிலிருந்தே கஸ்டமர்கள் ஆர்டர் செய்யும் வகையில் கடையை மாற்ற முடியுமா? வந்த ஆர்டரை வாடிக்கையாளர் வீடு தேடி கரெக்ட்டாய் டெலிவரி செய்ய முடியுமா?
பேஷாய் முடியும்.

அதற்கான புதிய எளிய தொழில்நுட்பம் பிறந்திருக்கிறது. இப்படி சொல்வதால் எதோ கம்பசூத்திர மேட்டர் கூறப்போகிறேன் என்று மலைக்காதீர்கள். மளிகை கடைகளுக்கு தேவை சிம்பிள் சிஸ்டமும், அதைவிட சிம்பிளான ஆப்ஸ் (Apps) மட்டுமே. முதலில் தங்கள் கடையில் உள்ள பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய தேவையான ஆப் ஒன்றை நிறுவ வேண்டும். அதை தங்கள் கஸ்டமர்களிடம் கூறி அவர்களை டவுன்லோட் செய்யவைக்க வேண்டும். அதன் மூலம் தங்களுக்குத் தேவையான பொருட்களை படித்து, பார்த்து தேர்வு செய்ய வைக்க முடியும். அவர்கள் ஆர்டரை கடையின் பில்லிங் சாஃப்வேருடன் இணையச் செய்ய வேண்டும். வந்த ஆர்டர்களை இனம் பிரித்து ஆர்டர் செய்தவர் வீட்டிற்கு சரியாக டெலிவரி செய்யும்படி டெலிவரி பாய்ஸ் வைத்திருக்க வேண்டும். அவ்வளவே!

எளிமையான ஆப்ஸ்

என்ன ஈசியா இத்தனை சொல்லிவிட்டாய்? எனக்கு இத்தனை தொழிற்திறன் தெரியாது என்று அண்ணாச்சிகள் பின்வாங்கத் தேவையில்லை. வாட்ஸ் அப்பில் மெசேஜ் பார்த்து அனுப்ப தெரிந்தவர்களுக்கு இந்த ஆப்ஸை உபயோகிப்பதும் சுலபம்தான். அநியாயத்துக்கு எளிமையான ஆப்ஸ். இதை மளிகைக் கடைகளுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரித்து வழங்கியிருக்கிறது ‘கோஃப்ரூகல்’ என்கிற தமிழ் கம்பெனி. அந்த ஆப்ஸ்ஸை தங்கள் பில்லிங் சாஃப்ட்வேருடன் இணைத்து பிரயோகிப்பது வெகு எளிது. அது மட்டுமல்ல, இருக்கும் கஸ்டமர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் புதிய கஸ்டமர்களைப் பெற வழி செய்யவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஆன்லைன் பிராண்டுகளோடு கூட போட்டி போடும் வழியைக் காண்பிக்கும் இந்த ஆப்ஸ். ஆன்லைன் பிராண்டுகளாவது அடுத்த நாள்தான் டெலிவரி செய்யும்.

மளிகைக் கடைகள் அடுத்த கணமே வாடிக்கையாளர் வீடு சென்று சேர்க்க உதவும் இவை! இதையெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்று உண்டு. கரோனா காலத்தில் சின்ன மளிகை கடைகளுக்கு உதவும் எண்ணத்தில் அவர்கள் வியாபாரத்தை விருத்தி செய்து வளர்க்கும் விதமாக அடுத்த ஆறு மாதத்துக்கு இந்த ஆப்ஸை கடைகளுக்கு இலவசமாக வழங்குகிறது கோஃப்ரூகல். வாய்ப்பு வாசல் கதவை தட்டும் போது திறக்க வேண்டும் என்பார்கள். அப்படியொரு வாய்ப்பாகவே இதைப் பார்க்க முடிகிறது. கொஞ்சம் மார்க்கெட்டிங், கொஞ்சம் தொழிற்நுட்பம். சேர்த்தால் போதும். பார்த்து வளர்ந்த மளிகை கடைகள் மீண்டும் மலரத் துவங்கும். பிறந்தது முதல் நம்மோடு அன்னியோன்யமாக பழகி வரும் அண்ணாச்சி கடைகள் அமேசான் ஆகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x